செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (13:48 IST)

காஷ்மீர்: 'இணையதள பயன்பாடு மக்களின் அடிப்படை உரிமை' - இந்திய உச்ச நீதிமன்றம்

காஷ்மீரில் காலவரையறையின்றி இணையதளத்தை முடக்கி வைப்பதை அனுமதிக்க முடியாது என்று, இணைய சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு எதிரான வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இணையதளத்தை பயன்படுத்தும் உரிமை அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கான உரிமைகளில் ஓர் அங்கம் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் ஜம்மு, காஷ்மீர் நிர்வாகம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அரசமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு & காஷ்மீரில் அமலில் உள்ள இணையதள முடக்கம் மற்றும் 144 தடை உத்தரவு ஆகியவற்றுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

"ஏராளமான வன்முறைகளை சந்தித்துள்ள காஷ்மீரில் பாதுகாப்பை கருத்தில் கொள்வது மட்டுமின்றி மனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட எங்களால் முடிந்ததை செய்வோம்," என்று தங்கள் தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

"ஒரு ஜனநாயக அமைப்பு முறையில் சுதந்திரமான பேச்சுரிமை என்பது மிகவும் முக்கியமான காரணி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இணையதள சேவைகளை பெறுவது இந்தியர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று," என்று தங்களது தீர்ப்பின்போது நீதிபதிகள் மேலும் தெரிவித்தனர்.

ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்புரிமை அளித்து வந்த அரசமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு அமலில் உள்ள இணையதள முடக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பின்பு இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கியது.

"ஜம்மு & காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவின் மூலம் எவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்பதை மக்களுக்கு அரசு அதிகாரிகள் தெரியப்படுத்த வேண்டும்," என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

"எவ்வித காலவரையறையும் இல்லாமல் இணையதள சேவைகளை முடக்குவது இந்தியாவின் தொலைத்தொடர்பு விதிமுறைகளுக்கு எதிரானது" என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரிய மாற்றங்கள் உண்டாக வாய்ப்பில்லை'


"இந்தத் தீர்ப்பால் பெரிய மாற்றங்கள் எதுவும் உண்டாக வாய்ப்பில்லை. ஏற்கனவே உள்ள நிலையே நீடிக்க வாய்ப்புண்டு," என்று இன்டர்நெட் ஃபிரீடம் எனும் தன்னார்வ அமைப்பின் செயல் இயக்குநர் அபர் என்பவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தீர்ப்பு வருங்காலங்களில் இணையம் முடக்குவது குறித்த விதிகளை வகுக்க பயன்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பின் ஒரே நல்ல அம்சம் தடை உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதுதான். நிர்வாகம் மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதன் மூலம் நீதிமன்றத்தின் மறு ஆய்வு தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.