1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (11:04 IST)

ராஜராஜ சோழன் கட்டிய கால்வாயை காப்பாற்ற ஒன்று கூடும் மக்கள்

திருச்சிக்கு அழகு சேர்த்தது மலைக் கோட்டை மட்டுமல்ல, நகருக்குள் வலம் வந்து வளம் சேர்த்த உய்யக்கொண்டான் கால்வாய். இந்த கால்வாய்க்கு நீண்ட வரலாறும் பெருமையும் உண்டு.

 
விவசாயிகளுக்கான கொடையாகத் திகழ்ந்த இந்தக் கால்வாய் ராஜராஜ சோழனால் வெள்ளக்காலத்தை மனதில் கொண்டு 1,200 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலத் தொழில்நுட்பத்தின் உதவியோடு வெட்டப்பட்டதாகும். மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராஜராஜ சோழனின் சிறப்பு பெயர்களில் ஒன்றான உய்யக்கொண்டான் எனும் பெயரையே இக்கால்வாய்க்கு சூட்டினர்.
 
பேட்டைவாய்த்தலையிலிருந்து பிரிந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குள் 8 கிமீ பாய்ந்து வாழவந்தான்கோட்டை ஏரி வழியாக, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேராண்டி ஏரியுடன் முடிவடைகிறது இக்கால்வாய். சுமார் 71கி.மீ. நீளமும், 120 கிளை வாய்க்கால்களும் உடைய இந்த கால்வாய் மூலம் 32,742 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன.
 
பலநூறு ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருந்து மக்களுக்கு பலன் கொடுத்து வந்த இந்த கால்வாய் காலப்போக்கில் நாகரிக வளர்ச்சியில் குப்பைகளும், கழிவுநீரும் கலந்து சாக்கடையாகவே மாறிவிட்டதுதான் பரிதாப நிலை. முப்போகம் விளையக் காரணமான இக்கால்வாயை இப்போது மூக்கை மூடி கடக்கிறார்கள் மக்கள். திருச்சி மாநகரின் பெரும்பகுதி கழிவுநீர் மற்றும் குப்பைகளின் புகலிடம் இக்கால்வாய்தான். இதன் விளைவு கரைகளை மறைத்து வளர்ந்த கருவேல மரங்கள். கால்வாய் முழுவதும் காட்டாமணக்கும், ஆகாயத்தாமரையுமாய் செடி, கொடிகள் மண்டி கிடக்கின்றன.

 
எழிலை இழந்து துர்நாற்றம் வீசும் இந்த கால்வாயை தூர்வாரத் துடிப்பாக களம் இறங்கியுள்ளனர் திருச்சியை சேர்ந்த எண்ணற்ற தன்னார்வலர்கள். வயது வித்தியாசமின்றி சிறார் முதல் முதியவர்கள் வரை எண்ணற்ற பெண்களுடன் "சிட்டிசன்ஸ் ஃபார் உய்யக்கொண்டான்" என்ற குழுவை அமைத்து 'என் நகரம்-என் கடமை' என்ற சிந்தனையுடன் தூய்மைப் படுத்தும் வேலையை மேற்கொண்டு வருகின்றனர்.
 
உய்யக்கொண்டான் வாய்க்காலின் இருகரைகளிலும் குவிந்து கிடந்த குப்பைகளையும், புதர்போல மண்டி கிடந்த செடி, கொடிகளையும் சுத்தப்படுத்துவதோடு அவ்விடங்களில் மரக்கன்றுகளையும் இவர்கள் நட்டு வருகின்றனர். சிறுவர் முதல் முதியோர் வரை தூய்மை பணிகளை மேற்கொள்வதோடு, நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு மாலை வேளைகளில் தண்ணீர் விட்டு பராமரித்தும் வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
 
இந்த பணிகளை மேற்கொண்டு வரும் தன்னார்வலர்களில் ஒருவரான மனோஜ் கூறுகையில், "வட இந்தியாவில் நகருக்குள் பாயும் சபர்மதி ஆற்றைப் போல தமிழகத்தில் திருச்சி நகருக்குள் பாய்வது தான் உய்யக்கொண்டான் கால்வாய். மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் 'சிட்டிசன்ஸ் ஃபார் உய்யக்கொண்டான்' என்னும் குழுவாய் சேர்ந்து தூய்மை படுத்தும் பணியை வார இறுதி நாட்களில் மேற்கொண்டு வருகிறோம். இந்த வாய்க்கால் தூய்மையானால் நகரின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். நகரும் அழகு பெறும்," என்கிறார்.

 
சேலத்தின் திருமணி முத்தாறு, சென்னை கூவம் ஆறு போல உய்யகொண்டானும் சாக்கடை ஆக மாறிவிடுமோ என்ற அச்சம் என்னை போன்றோர் மனதில் இருந்து வந்தது. ஆனால் இதை "திருச்சி சிட்டிசன்ஸ் ஃபார் உய்யக்கொண்டான்" குழுவினர் "என் நாடு என் நகரம்" என்ற சிந்தனையோடு வயது வித்தியாசமின்றி சுத்தப்படுத்த முன் வந்து இதன் பழமையை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளிக்கிறது என்று கூறிச் சென்றார் அங்கு நடைபோட வந்த முதியவர் ஒருவர்.
 
இதுகுறித்து திருச்சி சிட்டிசன்ஸ் ஃபார் உய்யக்கொண்டான் குழுவில் ஒருவரான மருத்துவர் நரசிம்மன் கூறுகையில், "உய்யக்கொண்டான் ஆற்றை தூய்மைப் படுத்தி அதன் எழிலழகை மீண்டும் மீட்பதன் மூலம் திருச்சியின் சுகாதாரத்தையும், சுற்று சூழலையும் மீட்பதோடு, நிலத்தடி நீர்மட்டத்தையும் வெகுவாக உயர்த்தலாம்.
 
ஆற்றின் இருபுற கரைகளை சுத்தபடுத்துவதன் மூலம் ஆறு மாசடைவதை வெகுவாக குறைக்கலாம் என்பதால் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நகருக்குள் 9 கி.மீ தூரத்திற்கு இந்த ஆறானது ஓடுகிறது. இதனை ஐந்து மண்டலமாக பிரித்து நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கொண்டு, ஒவ்வொரு ஞாயிறு காலை 06.30 முதல் 09.30 வரை தூய்மை படுத்தும் பணி செய்து வருகிறோம்.
 
தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வேண்டும். உய்யக்கொண்டான் கரைகளில் குப்பைகள் சேர்வதை தடுக்க வேலிகள் அமைப்பது, மற்றும் நடைபாதையை ஒட்டி மின்விளக்குகளுடன் கூடிய குழந்தைகளுக்கான சிறிய விளையாட்டு பூங்கா அமைக்க இருக்கிறோம். எல்லோருமே நம் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதைப்போலவே நமது நகரமும், ஆறும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். இந்த எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டால் திருச்சி சிறந்த தூய்மையான நகரம் எனும் பெருமையை பெற்றுவிடும் ", இவ்வாறு அவர் கூறினார்.