டொரண்டோவில் பாதசாரிகள் மீது வாகனம் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பலி

Last Modified செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (10:52 IST)
டொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று வேண்டுமென்றே மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என  போலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் பெயர் அலெக் மினாசியன் என போலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது அவருக்கு வயது 25. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில், அந்த  சந்தேக நபரை வாகனத்தை விட்டு இறங்க சொல்லி போலிஸார் சத்தமிடுவது போலவும் அவர் போலிஸாரை நோக்கி ஏதோ ஒரு பொருளை காண்பிப்பது  போன்றும் உள்ளது. ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் அந்த நபரை போலிஸார் கைது செய்தனர்.
 
சாட்சியங்கள் முன்வர வேண்டும் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக "நீண்ட விசாரணை" நடைபெறும் என்றும் டொரோண்டாவின் போலிஸ் துணை தலைவர்  தெரிவித்துள்ளார் மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் சாட்சியங்களுக்கு உதவ தொலைப்பேசி சேவை மையம் அமைக்கப்படும் எனவும்  தெரிவித்தார்.
 
இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நிகழ்வு என்றும், ஆனால் இதற்கான காரணங்கள் தெரியவில்லை என்றும் மற்றுமொரு போலிஸ் அதிகாரி செய்தியாளர்கள்  சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் போலிஸாருக்கு பரிட்சையமற்றவர் என்றும் அவர் கூறினார்.
 
சம்பவம் நடைபெற்ற இடத்தில் வீடியோ கடை வைத்துள்ள நபர் ஒருவர், சாலையில் பெரும் சத்தம் கேட்டதாகவும், வெள்ளை நிற வேன் ஒன்று  நடைபாதையில் பாதசாரிகள் மீது மோதியது என்றும் பிபிசியிடம் தெரிவித்தார். வேன் வாடகைக்கு எடுக்கப்பட்ட நிறுவனம் அது தங்களுடைய வாகனம் என்றும்  அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர் வாகன ஓட்டி தனது வழியில் வந்த அனைவரையும்  இடித்து தள்ளினார் என சிட்டி நியூஸிடம் தெரிவித்துள்ளார்.
மக்கள், தீயனைப்பு கருவி, தபால் பெட்டிகள் என அனைத்தையும் அந்த வாகனம் இடித்து தள்ளியதாக அந்த வாகனத்திற்கு பின் தனது வாகனத்தை செலுத்தி  வந்த நபர் தெரிவித்தார். மேலும் அந்த வாகனம் தொடர்ந்து சென்றதால் தான் ஒலிப்பெருக்கி மூலம் பாதசாரிகளை எச்சரித்ததாகவும் தெரிவிக்கிறார். மேலும்  ஆறு அல்லது ஏழு பேர் வாகனத்தால் இடிக்கப்பட்டு காற்றில் தூக்கி வீசப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இந்த பயங்கரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. "இந்த சம்பவ இடத்தில் மீட்பு  பணியில் ஈடுபட்டுருப்பவர்களுக்கு நன்றி நாங்கள் இதை தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறோம்" என அவர் தெரிவித்தார்.

இதில் மேலும் படிக்கவும் :