திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (14:37 IST)

ஐநா அமைதிபடையிலிருந்து இலங்கை இராணுவம் நீக்கப்பட வேண்டும் - யஸ்மின் சூக்கா கோரிக்கை

இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் சுயாதீனம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியன முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதென ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்ற நிலையில், ஐக்கிய நாடுகளுக்கான அமைதிப்படையில் இலங்கை இராணுவத்தை இணைத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும் என சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்றிட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
 
சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்றிட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா நேற்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
 
ஐநா அமைதிப்படையில் ஒரு இராணுவத்தை இணைத்துக்கொள்வதற்கு முன்னதாக, திறனான ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு ஐநா அமைதிப்படை திணைக்களத்தின் சட்டத்தில் பிணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை இராணுவத்திற்கு உரிய முறையில் ஆய்வுகள் மற்றும் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு, அதனை உறுதிப்படுத்தும் இயலுமை நிவ்யோர்க் நகருக்கு தற்போது கிடையாது என்பதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
இதன்படி, முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜெனிவா மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
தற்போதுள்ள திட்டத்தின் பிரகாரம், கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் இராணுவம் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
மனித உரிமை ஆணைக்குழு தற்போது அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர் ஒருவர் அதற்கு தலைமை தாங்குவது அதன் சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மிச்சேல் பெஷ்லேட்டை மேற்கோள்காட்டி அவர் கூறியுள்ளார்.
 
போர் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இருவருக்கு, இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதம பொறுப்புக்களை வழங்கியுள்ளமையானது, கவலைக்குரிய விடயம் என மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பெஷ்லேட் தெரிவித்துள்ளதை அவர் தனது அறிக்கையில் நினைவுப்படுத்தியுள்ளார்.
 
2019ஆம் ஆண்டு இராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்படும் சந்தர்ப்பத்தில், அபாயமான இடங்களை தவிர்ந்த ஏனைய இடங்களில் அமைதிப்படைக்கு இலங்கை இராணுவத்தை இணைத்துக்கொள்வதை தவிர்க்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளதென அந்த அறிக்கையில் கூறப்படுகின்றது.
 
இதன்படி, அமைதிப்படையிலுள்ள இலங்கை இராணுவத்தின் நான்கில் ஒரு தரப்பிற்கு இந்த தடையுத்தரவு செல்லுபடியாகும் என ஐக்கிய நாடுகள் சபை பின்னர் தெளிவூட்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
குறிப்பாக லெபனானில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினருக்கு பதிலாக வேறு நாடுகளைச் சேர்ந்த படையினரை ஈடுபடுத்தவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்ததெனவும் அவர் தெரிவிக்கின்றார்.
 
மேலும், வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை படையினரின் பிரியாவிடை அணிவகுப்புக்களின் போது, போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஷவேந்திர சில்வாவிற்கு மரியாதை செலுத்தும் புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
 
ஷவேந்திர சில்வாவை, இராணுவ தளபதியாக நியமிப்பதற்கு எதிராக சர்வதேச ரீதியில் எதிர்ப்பலைகள் எழுந்த சந்தர்ப்பத்திலேயே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 
இந்த நிலையில், பாரிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு பகிரங்க தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
 
அதன்பின்னரான காலத்தில் ஷவேந்திர சில்வா பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்டதுடன், அதனை தொடர்ந்து, அவர் ஜெனரல் பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டதாகவும் யஸ்மின் சூக்கா நினைவூட்டியுள்ளார்.
 
போர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு பதவி நிலை உயர்த்தப்படுகின்றமையானது, பாரிய எதிர்மறை பெறுபேறுகளை ஏற்படுத்தும் என்பதனை இலங்கைக்கு எடுத்துரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்றிட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கேட்டுக்கொண்டுள்ளார்.