1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (23:47 IST)

இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாட அனுமதி மறுக்கும் கோட்டாபய அரசு

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் வியாழக்கிழமை (பிப்ரவரி 4) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டிய நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளன.
 
இந்த நிலையில், சுதந்திர தின நிகழ்வுகளை நடத்தும் விதம் தொடர்பான ஊடக சந்திப்பை பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அண்மையில் நடத்தியிருந்தார். அப்போது அவர் வெளியிட்ட சில கருத்துக்கள், சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை இல்லாது செய்யும் வகையில் அமைந்துள்ளதாக தமிழர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
 
இலங்கை அரசியலமைப்பின்படி, தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசை முடியும் என சட்டத்தரணிகள் கூறுகின்ற போதிலும், சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இந்த கருத்தானது, தமிழர்கள் மத்தியில் பாரிய மத அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இலங்கையில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படலாமா என்பது தொடர்பில் பிபிசி தமிழ், சிரேஷ்ட சட்டத்தரணியும், பேராசிரியருமான பிரதீபா மஹானாமஹேவாவிடம் வினவியது.
 
இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் 26வது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை பிரஜைகளின் அடிப்படை உரிமையாக மொழி உரிமை காணப்படுகின்றது என அவர் கூறுகின்றார். ஒருவரின் ஐந்து விரல்களை போலவே, இலங்கையர்களின் தாய் மொழியாக தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் காணப்படுகின்றன என அவர் குறிப்பிடுகின்றார்.
 
அதேபோன்று, நிர்வாக மொழி, நீதிமன்ற மொழி, தேசிய மொழி, அரச மொழி ஆகிய அனைத்து இடங்களிலும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு அரசியலமைப்பில் அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
 
இலங்கையில் ஆங்கில மொழி, தொடர் பாடல் மொழியாக மாத்திரமே காணப்படுகின்றது என பேராசிரியர் கூறுகின்றார்.
 
அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு அமைய, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார். நாட்டின் ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட போதிலும், தமிழ் மொழிக்கும் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.
 
இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ் எம்.பி.க்கள் சொல்வதென்ன?
 
இலங்கையில் சுதந்திர தினத்திற்கு எதிராக கறுப்புக் கொடி
 
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்க கடமைகளின் போது, தமிழ் மொழியிலேயே அவை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், சிங்கள மொழியில் பிரதிகள் மாத்திரமே வெளியிடப்பட வேண்டும் என அவர் தெரிவிக்கின்றார். இவ்வாறான நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படுவது என்பது அரசாங்கத்தின் கொள்கைக்கு அமையவே முன்னெடுக்கப்படும் ஒன்று என அவர் கூறுகின்றார். தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுமா இருந்தால், அது எந்தவித பிரச்சினையும் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.
 
தேசிய கீதம், நாட்டில் மாறுபடுகின்ற அரசாங்கங்களின் கொள்கைக்கு அமையவே இசைக்கப்படும் என சிரேஷ்ட சட்டத்தரணியும், பேராசிரியருமான பிரதீபா மஹானாமஹேவா தெரிவிக்கின்றார்.
 
இலங்கை சுதந்திரமடைந்த சந்தர்ப்பத்தில், பி.பி.இலங்கசிங்க மற்றும் லயனல் எதிரிசிங்க ஆகியோரால் எழுதப்பட்ட ''ஸ்ரீலங்கா மாதா பல யச மஹிமா" என ஆரம்பிக்கும் பாடல் 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் தேதி, முதல் முதலாக வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளது.
 
இந்த தேசிய கீதத்தில் சில சர்ச்சைகள் எழுந்த பின்னணியில், ஆனந்த சமரகோனினால் இசைக்கப்பட்ட ''நமோ நமோ" மாதா தேசிய கீதம் பின்னரான ஓரிரு ஆண்டுகள் இசைக்கப்பட்டு, 1950ம் ஆண்டு காலப் பகுதியில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
அதனைத் தொடர்ந்து, 1951ம் ஆண்டு இந்த தேசிய கீதத்திற்கு முறையாக அங்கீகாரத்தை பெற்று, ஆனந்த சமரகோன் அதற்கு இசை அமைத்திருந்தார். இதன்படி, இலங்கையின் 4வது சுதந்திர தின நிகழ்வில் முதல் முறையாக தற்போதைய சிங்கள மொழியிலான தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.
 
அதனைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் தமிழ்ப் புலவரான மு.நல்லதம்பி, சிங்கள மொழியிலான தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மொழி பெயர்ந்துள்ளார்.
 
சட்டவல்லுநர்களின் தகவல்களுக்கு அமைய, இலங்கையில் தமிழ் மொழி மூலமான தேசிய கீதம் 1955ம் ஆண்டு இசைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. அதனைத் தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் கொள்கைக்கு அமைய, தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மாறி மாறி இசைக்கப்பட்டன.
 
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, சுதந்திர தின நிகழ்வுகளில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
 
இந்த சர்ச்சையின் பின்னணியில், 2015ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும் ஆட்சி பீடம் ஏறியிருந்தனர்.
 
அதன் பின்னரான காலத்தில் சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மொழியிலும்; தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
 
எனினும், 2019ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றிருந்தார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று, முதலாவது சுதந்திரம் தினம் கடந்த ஆண்டு அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி 2020ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளின் போதும், தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாத பின்னணியில், இந்த தடவையும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாது என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.