1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (23:49 IST)

கொழும்பு துறைமுகம்: இந்தியாவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த இலங்கை - என்ன நடந்தது?

இலங்கையின் பிரதான துறைமுகமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பகுதியை மேம்படுத்த இந்தியாவுடன் எட்டியிருந்த ஒப்பந்தத்தை மீறி அதை தனது துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்ற திடீர் முடிவை இலங்கை எடுத்திருக்கிறது.
 
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டிற்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு வழங்கவோ கூடாது என கடந்த சில தினங்களாக எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
 
இதன்படி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை திங்கட்கிழமை (பிப்ரவரி 1) அனுமதி வழங்கியது.
 
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு கோரி, கடந்த காலங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
 
அதனைத் தொடர்ந்து, துறைமுக தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
 
இந்த முனையத்தின் முழுமையான பொறுப்பை, இலங்கை துறைமுக அதிகார சபைக்கு வழங்க வேண்டும் என்ற எழுத்துமூல கோரிக்கையை வலியுறுத்தியே இவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
 
அதனைத் தொடர்ந்து, துறைமுக சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலொன்றை ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர வெளியிட்டிருந்தார்.
 
துறைமுக சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் தமது போராட்டத்தை கைவிடவில்லை.
 
இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளுக்கு விற்கவோ அல்லது குத்தகைக்கோ வழங்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
 
இவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னணியிலும், போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
 
இதையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், துறைமுக தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் திங்கட்கிழமை (பிப்ரவரி 1) முற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
 
இந்த கலந்துரையாடலின் போது, துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க போவதில்லை என பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 2) முதல் போராட்டத்தை கைவிட துறைமுக தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்திருந்தன.
 
இவ்வாறான நிலையில், நேற்று மாலை குறித்த விடயம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டு, கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
இதன்படி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை நேற்று (01) அனுமதி வழங்கியுள்ளது.
 
 
இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்ட முத்தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை செயற்படுமென எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
 
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று பிற்பகல் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
 
இந்த அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
கொழும்பு துறைமுக விஸ்தரிப்பு இந்தியத் துறைமுகங்களைப் பாதிக்குமா?
அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்த சீனாவுடன் இலங்கை ஒப்பந்தம்
அதேபோன்று, வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து, இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அமைச்சரவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தீர்மானித்திருந்ததை இந்திய உயர்ஸ்தானிகராலயம் நினைவுப்படுத்தியுள்ளது.
 
உடன்படிக்கை கைச்சாத்திட்ட அனைத்து தரப்பினரும், ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, செயற்பட வேண்டும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையின் ஊடாக கூறியுள்ளது.
 
இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து 2019ஆம் ஆண்டு மே மாதம் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருந்தன.
 
இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 49 வீதமும், இலங்கைக்கு 51 வீதமும் கிடைக்கும் வகையில் இந்த உடன்படிக்கை கடந்த ஆட்சி காலத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
 
இவ்வாறு கடந்த அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை, தற்போது நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் முயற்சித்த நிலையிலேயே, போராட்டம் வலுப் பெற்றது.
 
பொருளியலாளரின் பார்வை
 
இலங்கை பிரதமர்
பட மூலாதாரம்,SL PM OFFICE
இந்தியாவிற்கு கிழக்கு முனையம் வழங்கப்படும் என உறுதி வழங்கியதன் பின்னர், அதனை மீறப் பெறுவது நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியியல்துறை விரிவுரையாளர் எஸ்.விஜேசந்திரன் தெரிவிக்கின்றார்.
 
இலங்கை, பெரும்பாலான விடயங்களில் இந்தியாவையே நம்பி உள்ளதாக கூறிய அவர், இந்தியாவை பகைத்துக்கொள்வது தவறான விடயம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
இந்தியாவிற்கு கிழக்கு முனையம் வழங்கப்படாத பட்சத்தில், இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவினால் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
அதேபோன்று, இந்தியாவிலிருந்து மிக அதிகளவிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறிய அவர், அவ்வாறான பொருள் இறக்குமதிகளுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கை