திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 மே 2022 (13:29 IST)

இலங்கை சினிமா: தமிழும் சிங்களமும் இணைந்திருக்கும் திரைத்துறை; நீடிக்கும் சிக்கல்கள் என்னென்ன?

BBC
நீண்ட காலப் போர், பண்பாட்டுப் பிரிவினைகள், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு இடையே சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை சினிமா துறை மீண்டு எழுவதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருக்கும் திரையரங்குகளுக்குச் சென்று பார்த்தால் இந்த நாட்டின் திரைத்துறை எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்தியாவில் இருந்து வெளியாகும் பெரிய நட்சத்திரங்களின் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங்களே இலங்கைத் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கின்றன.

"இலங்கையில் சினிமாவை முழு நேரத் தொழிலாக ஒருவர் பார்க்க முடியாது. தமிழ் கலைஞர்களுக்கு மட்டுமல்ல, சிங்களக் கலைஞர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது. இலங்கையில் திரைத்துறையில் இருந்த பல கலைஞர்கள் கடைசிக் காலத்தில் வறுமையில் வாடி இறந்திருக்கின்றனர்" என்கிறார் இலங்கை திரைப்பட நடிகை நிரஞ்சனி சண்முக ராஜா.
BBC

இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலேயே திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என பல கலைஞர்களும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பணியாற்றுகின்றனர்.

இந்தியாவைப் போன்று அல்லாமல் இலங்கையில் சினிமாவும் தொலைக்காட்சித் தொடர்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கின்றன. உச்ச நிலையில் இருக்கும் சினிமா நடிகர்களும் நடிகையரும் அதே காலகட்டத்தில் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கிறார்கள்.

"தன்னை ஒரு நடிகை என்று அறிமுகம் செய்து கொள்வதைவிட தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்" என்கிறார் நிரஞ்சனி

இலங்கை முழுவதும் 180-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருக்கின்றன. போருக்குப் பிறகு பெரிய வணிக வளாகங்களில் பல திரைகளைக் கொண்ட திரையரங்குகள் கட்டப்பட்டிருக்கின்றன. தலைநகர் கொழும்புவைத் தொடர்ந்து கண்டி, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை போன்ற நகரங்களில் திரையரங்குகள் அதிகமாக உள்ளன.

"எண்ணிக்கை அடிப்படையில் நாங்கள் சிறியவர்கள்தான். ஆனால் சினிமா திறன் அடிப்படையிலும், கலைத்திறன் அடிப்படையிலும் பிற அண்டை நாடுகளைவிட சிறப்பான நிலையில் இருக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் நான்கைந்து படங்கள் சர்வதேச அளவில் திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெறுகின்றன. இருந்தாலும், ஒரு தொழில்துறை என்ற வகையில் மோசமான நிலையில் இலங்கை சினிமா இருக்கிறது." என்கிறார் இயக்குநர் சோமரத்ன திஸநாயக.

இலங்கையில் அதிக பொருள் செலவில் படங்களை எடுக்கும் சோமரத்ன திஸநாயக, சுனாமி, சிறி பராகும், சரிகம போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இவரது பல படங்கள் சர்வதேச விருதுகளை வென்றிருக்கின்றன.

இலங்கை திரைத்துறையில் பெரும் பொருள் ஈட்ட முடியாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் தொடக்ககால தமிழ் திரைப்படங்களில் நடித்த ஜெயகௌரி. கொழும்பு நகரில் குடிசை போன்ற ஒரு வீட்டில் தனது தங்கையுடன் வசித்து வருகிறார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் ஜெயகௌரி, "இப்போது எந்தவிதமான வருமானமும் இல்லை" என்கிறார்.

ஒப்பீட்டளவில் இலங்கை தமிழ் சினிமாவைவிட, சிங்கள மொழி சினிமா பொருளாதாரத்திலும் கலைஞர்களின் எண்ணிக்கையிலும் சற்று பெரியதாக இருக்கிறது. அதற்கும் சவால்கள் உண்டு.

"சுனாமி திரைப்படம் 8 கோடி ரூபாய் பொருள் செலவில் எடுக்கப்பட்டது. 51 நாள்கள் ஓடியது. ஆயினும் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ய முடிந்தது " என்கிறார் இந்தத் திரைப்படத்தில் நடித்த தர்ஷன் தர்மராஜ்.

எனினும் இந்தப் படத்தை இயக்கிய சோமரத்ன திஸநாயக பொருளாதார ரீதியிலான வெற்றிப் படங்களைத் தந்தவர் என்பதை இலங்கை திரைத்துறையினர் ஒப்புக் கொள்கின்றனர்.

நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தகுந்த வகையிலான தமிழ்த் திரைப்படங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் எதுவும் எடுக்கப்படவில்லை என்கிறார் நடிகரும் இயக்குநருமான கிங் ரத்னம். "இலங்கையில் தமிழ்த் திரைத்துறை பூஜ்ஜியம்" என்கிறார் அவர்.

தமிழில் 40 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெளியான "கோமாளி கிங்ஸ்" என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியவர் இவர். படம் சிறப்பாக இருக்கிறது என்று பலரும் பாராட்டினாலும் பொருளாதார ரீதியாக சிறப்பாக அமையவில்லை என்கிறார் கிங் ரத்னம்.
BBC

கிங் ரத்னம், தர்ஷன் தர்மராஜ், நிரஞ்சனி சண்முகராஜா போன்றோர் சிங்கள மொழியும் சரளமாகப் பேசக் கூடியவர்கள் என்பதால் சிங்கள மொழித் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்கள்.

இலங்கைத் திரைப்படத்துறை முற்றிலும் இந்திய திரைத்துறையின் நிழலில்தான் இருக்கிறது. கடந்த காலத்தைவிட தற்காலத்தில் இந்த ஆக்கிரமிப்பு அதிகரித்திருப்பதாக இலங்கை இசையமைப்பாளர் ஸ்ருதி பிரபா கூறுகிறார்.

"அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் வெளியாகும்போது அவை இலங்கைக்கு வருவதற்கு ஓராண்டு வரை ஆகும். அந்த இடைவெளியில் இலங்கை திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் இன்று இந்தியாவில் வெளியாகும் அதே நாளில் இலங்கையிலும் பெரிய படங்கள் வெளியாகின்றன." என்கிறார் அவர்.

இலங்கையில் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் வெளியாகும் வகையிலான திரைப்படங்களின் எண்ணிக்கை 10-க்கும் குறைவாகவே இருக்கின்றன. தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம். ஆனால் பெரும்பாலான கலைஞர்கள் சிங்களப் படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் பணியாற்றுவதால் இலங்கை கலைத்துறையானது ஓரளவு உயிர்ப்போடு இருக்கிறது.

இலங்கைத் திரைப்படங்களில் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. மண்சார்ந்த திரைப்படங்களும், வரலாற்றுத் திரைப்படங்களும் வெளியாகின்றன.

இலங்கையில் இதுவரை வெளியான திரைப்படங்களில் பொருளாதார ரீதியில் பெரிய வெற்றிப்படமாகக் கருதப்படும் "சிறி பராகும்" திரைப்படம் 36 கோடி ரூபாய் வசூல் செய்ததாக மதிப்பிடப்படுகிறது. சோமரத்ன திஸநாயக இயக்கிய இந்தத் திரைப்படம் வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்டது. கிங் ரத்னத்தின் "கோமாளி கிங்ஸ்", டார்க் காமெடி வகையைச் சேர்ந்தது.

"இலங்கை மக்களுக்கு இடையேயான பிளவை நிரப்பும் ஒரு சாதனமாக சினிமா இருக்கும். அப்படி நடக்கும்போது சினிமாவின் நிலை மாறக்கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." என்கிறார் தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் சிங்கள மொழி நடிகரான பிமல் ஜெயக்கொடி.