வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 மே 2022 (13:33 IST)

இணையத்தை முடக்குவதில் 'டிஜிட்டல்' இந்தியா முதலிடம்: 'அரசிடம் தரவுகள் இல்லை'

இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில், உலக அளவில் இந்தியாவில் அதிக அளவு இணைய முடக்கம் (Internet Blackout) நடந்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டுவரை சுமார் 639 இணைய முடக்கங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றுள்ளதாக மென்பொருள் சுதந்திர சட்ட மையம் (Software Freedom Law Centre - SFLC ) கூறுகிறது. மேலும் அந்த தரவுகளில், அதிகபட்சமாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 399 முறை இணைய முடக்கம் நிகழ்ந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தொலைத்தொடர்பு சேவைகள் செயல்திறன் ஜனவரி-மார்ச் 2021 அறிக்கையின்படி, இந்தியாவில் டிசம்பர் 2020 இறுதியில் 79.518 கோடியாக இருந்த இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை, மார்ச் 2021-இல் 82.530 கோடி சந்தாதாரர்களாக அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட இந்த காலாண்டில் மட்டும் 3.79 சதவீத இணைய சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளனர்.

பிப்ரவரி மாதம் பாஜக மக்களவை உறுப்பினர் வருண் காந்தி, இணைய முடக்கம் தொடர்பாக மக்களவையில் பேசுகையில், இந்தியாவில் இதுவரை ஏற்பட்டுள்ள இணைய முடக்கம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் தரவுகள் உள்ளதா என்ற கேள்விக்கு மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

அந்த பதிலில் இதுவரை இணைய முடக்கம் தொடர்பாக அரசிடம் எந்த தரவுகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஒரு பக்கம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி இந்தியா சென்றாலும், அத்தகைய டிஜிட்டல் இந்தியாவுக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய இணையம் முடக்கப்படுவது என்பது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இது தொடர்பாக மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தின் தன்னார்வ ஆலோசகர் ராதிகா ஜலானியிடம் 2012-இல் இருந்து 2022 வரையில் தரவுகள் வைத்திருப்பதற்கான பின்னணி என்ன என்று கேள்வி கேட்டபோது, "இணையம் மற்றும் இணைய பயன்பாடு மீதான கட்டுப்பாடுகள் என்பது சமீபத்தில்தான் அதிக அளவில் நடைபெறுகிறது என்றும், 2012க்கு முன்பு இணைய பயன்பாடு பெரிய அளவில் இல்லை என்பதே காரணம்."

"2012ல் நடந்த இணைய முடக்கத்திற்கு பின்புதான் இதை ஆவணப்படுத்த வேண்டும் என்று எண்ணினோம். அதன் பிறகு இணைய முடக்கம் ஏற்படக்கூடிய பகுதிகள் தொடர்பான தரவுகளைத் திரட்ட தொடங்கினோம்.

இணையப் பயன்பாடு என்பது அடிப்படை மனித உரிமை என ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. ஜம்மு-காஷ்மீரில் நடந்த இணைய முடக்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை தங்கள் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது."

இணைய முடக்கம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கை ஃபஹீமா ஷிரின் என்பவர் கேரள மாநில அரசை எதிர் தரப்பினராக வைத்து தொடுத்தார். இந்த வழக்கில் மென்பொருள் சுதந்திர சட்ட மையம் தங்களை ஒரு மனுதாரராக இணைத்துக் கொண்டது. அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், இணையம் என்பது அடிப்படை மனித உரிமை மற்றும் வேலை செய்வதற்கும், படிப்பதற்கும் இணையம் அடிப்படை என தெரிவித்தனர்.

இணைய முடக்கம் என்பது கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கான ஒரு கருவியாக இருக்க கூடாது. இணைய முடக்கம் ஏற்படுத்துவதற்கான பொதுவான காரணம் சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்புவதைத் தடுப்பதற்கு என்கிறார்கள். ஆனால் இணையம் என்பது சமூக ஊடகங்களை விட மிக முக்கியமான ஒன்று. சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்புவதை தடுப்பதற்கு இணைய முடக்கம் ஒருவழியாக இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது."

மென்பொருள் சுதந்திர சட்ட மையம் தொடர்ச்சியாக, இணைய முடக்கம் ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஆவணப்படுத்தி வருகிறது. நாங்கள் ஆவணப்படுத்திய தரவுகள் மூலம் இணைய முடக்கம் ஏற்படுவதால் மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்னை என்னவாக இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாக தெரியும்," என்றார்.

உலகளவில் இணைய முடக்கத்தில் முன்னணியில் உள்ள இந்தியா:

இந்தியா உலக அளவில் அதிக அளவு இணைய முடக்கத்தை செயல்படுத்தியுள்ளதாக Acessnow.org அமைப்பின் தரவுகள் கூறுகின்றன. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள 2021ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களின்படி 34 நாடுகளில் இணைய முடக்கம் ஏற்பட்டுள்ளது எனவும், அதில் இந்தியாவில் மட்டும் 106 முறை இணைய முடக்கம் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2021 வரை நடைபெற்ற மிக நீண்ட இணைய முடக்கங்களில், 551 நாட்கள் ஜம்மு-காஷ்மீரில் இணைய முடக்கத்தின் மூலம் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. இத்தகைய சூழலில் இணையம் இன்றி கூட ஒருவர் மற்றொருவரை தொடர்பு கொள்வதற்கான தொழில்நுட்பம் உள்ளது என்கிறார் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் தலைவர் பிரசன்னா.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "பிரையர் (Briar) என்ற செயலி உள்ளது. இந்த செயலி மூலம் இணையம் இன்றி ப்ளூடூத், வைஃபை ஆகியவை பயன்படுத்தி தொடர்பு கொள்ள முடியும். உதாரணமாக இணையம் முடக்கம் ஏற்பட்ட பிறகு ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தகவல் பரிமாறிக் கொள்ள முடியாது. இத்தகைய சூழலில் பிரையர் செயலியைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்றத்தை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பகிர்ந்து கொள்ள முடியும்.

இணைய முடக்கம் ஏற்படும் சூழலில் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று உலக அளவில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பல்வேறு தகவல்களை இப்படியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே வெளி உலகத்திற்கு பகிர்ந்தார். குறிப்பாக பத்திரிக்கையாளர்கள், பிரையர் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த அறிவுறுத்துகிறார்கள்.

வதந்திகளை தடுப்பதற்காக இணைய முடக்க நடவடிக்கை மேற்கொள்வதற்கு பதிலாக சமூக ஊடகங்களில் பரவக்கூடிய வதந்திகளை தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் தொழில்நுட்ப ரீதியாக உண்டு. அத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசு முன் முயற்சிகள் எடுக்க வேண்டும்," என்றார்.