திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (16:58 IST)

இலங்கை: 12.5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலை 5,175 ரூபாவாக அதிகரிப்பு

Sri Lanka - Cylinder
இலங்கையில் இன்று (ஏப். 22) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.


12.5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலையை 2,500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,175 ரூபா என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் நிர்ணய விலை இதற்கு முன்னர் 2,675 ரூபாவாக காணப்பட்ட நிலையில், சந்தையில் வெவ்வேறு விலைகளில் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக 2021ம் ஆண்டு ஒக்டோபர் மாத காலப் பகுதியில் 12.5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலை 1,493 ரூபாவாக காணப்பட்டது. இந்த காலப் பகுதியில் ஒரே தடவையில் 1,493 ரூபாவால் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், அந்த சந்தர்ப்பத்தில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 2,750 ரூபா வரை அதிகரித்திருந்தது.

அதன்பின்னர், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி அடைந்த நிலையில், தற்போது 5,175 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையினால், நாளொன்றுக்கு தமக்கு 25 கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவராக விஜித்த ஹேரத் நேற்றைய தினம் நியமிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் தொடர்ந்தும் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதன்படி, தமது நிறுவனம் சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகளை எதிர்வரும் 25ம் தேதி வரை நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

எதிர்வரும் 25ம் தேதி இலங்கைக்கு சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்பின்னர், நாட்டிற்கு சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.