செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (13:54 IST)

இலங்கையில் அவசரமற்ற அறுவை சிகிச்சைகள்‌ ஒத்தி வைப்பு- நாடாளுமன்றத்தில் தகவல்

இன்று (ஏப்ரல் 20) இலங்கையில் உள்ள நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

தள்ளி வைக்கப்பட்டுள்ள அவசரமற்ற அறுவை சிகிச்சைகள்

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வதில்‌ ஏற்பட்டுள்ள சிக்கல்‌ நிலை காரணமாக சில மருத்துவமனைகளில் திட்டமிடப்‌பட்ட அவசரமற்ற அறுவை சிகிச்சைகள்‌ ஒத்தி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார் என தமிழன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.


அந்த வகையில்‌ 14 உயிர்காக்கும்‌ மருந்துகளில்‌ ஒரு மருந்தும்‌, 646 அத்தியாவசிய மருந்துகளில்‌ 37 மருந்துகளும்‌ தற்போது கையிருப்பில்‌ இல்லை. அதேபோன்று, 486 அத்தியாவசியமற்ற மருந்துகளில்‌ 45 மருந்துகள்‌ கையிருப்பில்‌ இல்லை. அடுத்த மூன்று மாதங்களில்‌ குறிப்பிட்ட சில மருந்துகளுக்கு இலங்கையில் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்‌.

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன்‌ கடிதங்கள் தாமதமாவதால் , மருந்துகளை இறக்குமதி செய்வதில்‌ 90 நாட்கள்‌ வரை தாமதம்‌ ஏற்படலாம்‌ என குறிப்பிட்டுள்ளனர். மருந்து தட்டுப்பாட்டினால்‌ இலங்கை மருத்துவமனையில் மரணங்கள்‌ எதுவும்‌ ஏற்படவில்லை என சுகாதார அமைச்சகத்தின்‌ செயலாளர்‌ மற்றும்‌ சுகாதார சேவைகள்‌ பணிப்பாளர்‌ தெரிவித்தார்.

இந்நிலையில் , மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால்‌ நாட்டில்‌ பெரிய சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள்‌ சங்கம்‌ தெரிவித்துள்ளது. இன்னும்‌ சில வாரங்களில்‌ நிலைமை மேலும்‌ மோசமடையலாம்‌ என அந்த சங்கத்தின்‌ செயலாளர்‌ மருத்துவர்‌ செனால்‌ பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்‌.

மேலும் ஒரு பிரதேசத்தில்‌ மாத்திரமன்றி நாடு முழுவதும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும்‌ சுட்டிக்காட்டியுள்ள அவர்‌ அரசாங்கத்தின்‌ மோசமான நிர்வாகத்தினால்‌ முழு நாட்டுக்கும்‌ ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும்‌ அவர்‌ குறிப்பிட்டார்.

இருதய நோயாளர்களின்‌ பாதுகாப்புக்கு அவசியமான மூன்று வகையான மருந்துகளுக்கு கடும்‌ தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்‌ நோயாளிகளின்‌ உயிருக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் என தமிழன் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடர் தொடக்கம்

இலங்கை கால்பந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்சியாளரும் தொழில்நுட்ப இயக்குனரான அமிரி அலொஜிக்குக்கு தற்போது இலங்கையில் நிலவும் டாலர் நெருக்கடிக்கு மத்தியில் டாலர்களில் சம்பளம் கொடுக்க முடியாத காரணத்தால் அவரின் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் கூறியுள்ளதாக வீரகேசரி செய்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
BBC

அமிரி அலொஜிக்கின் ஒப்பந்தத்தின் போது 200 ரூபாய்க்கு இருந்த டாலர் மதிப்பு தற்போது 400 ரூபாயாக உயர்நதுள்ள நிலையில் சம்பளம் இரட்டிப்பாக வழங்க உள்ள சூழல் ஏற்பட்டுள்ளதால் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.கால்பந்தாட்டதுக்கு கிடைக்கும் பணத்தை ஆதிலேயே முதலீடு செய்து வரும் நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரை அடுத்த மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 14 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில் ஒரு அணிக்கு 25 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படவுள்ளதாகவும் ஐஸ்வர் உமர் தெரிவித்துள்ளதாக வீரகேசரி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
 
இலங்கைக்கு உதவ நிர்மலா சீதாராமன் உறுதிசர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜியாவா மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இலங்கைக்கு நிச்சயம் உதவியளிப்பதாக இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரியிடம் உறுதியளித்துள்ளனர் என சிலோன் டுடே நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கைக்கு முழு ஆதரவை வழங்கும் என்றும், நாட்டிற்கு ஏற்கனவே வழங்கி வரும் உதவிகளை துரிதப்படுத்தவும் சர்வதேச நாணயம் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் - உலக வங்கி கூட்டம் நடைபெறுகிறது. இதில் இந்திய அமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டுள்ளார்.

அதேபோல சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோர இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி தனது குழுவுடன் வாஷிங்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.