செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (14:37 IST)

"இது ராஜபக்ஷக்களின் நாடல்ல" - அரசுக்கு எதிராக இலங்கை முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு

Srilanka
இலங்கையில் உள்ள நாளிதழ்களிலும் செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

"இலங்கை ராஜபக்ஷக்களின் நாடல்ல. ஒரு குடும்பத்துக்கு நாட்டை பொறுப்பாக்கி விட்டு எம்மால் உறங்கிக்கொண்டிருக்க முடியாது. நாட்டின் நிதியதிகாரத்தை தகுதியற்ற தரப்பினருக்கு ஒப்படைத்ததன் விளைவை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதுடன், முழு நாடும் அதன் விளைவை எதிர்கொண்டுள்ளது" என அரச நிதி தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா சபையில் தெரிவித்துள்ளதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்த அந்த செய்தியில், ''பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற விசேட விவாதத்தின் போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட நாணய சபையின் உறுப்பினர்கள் கோபா குழுவுக்கு முன்னிலையாகியமை தொடர்பில் சபைக்கு அறிவுறுத்துகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், "நாட்டின் தற்போதைய மோசமான பொருளாதாரம் மற்றும் சமூக சூழ்நிலைக்கு அரசாங்கம் முழு பொறுப்பேற்க வேண்டும். தகுதியற்ற தரப்பினர் நிதி விவகாரத்திற்கு நியமித்ததன் விளைவை அரசாங்கமும் நாடும் எதிர்கொள்கிறது" என்று அவர் கூறியதாக செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

'மக்களுக்காக குரல் கொடுத்தவர்களை அரசு சுட்டுக்கொல்கிறது'

"றம்புக்கணையில் மக்களுக்காக குரல் கொடுத்த, மக்களுக்காக போராடிய, மக்களின் உரிமைகளுக்காக, களத்தில் இறங்கிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, அந்தக் குடும்பத்துக்கு மலையக மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாக தமிழ் மிரர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "றம்புக்கணை சம்பவமானது, இலங்கையில் மேலும் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பதை சர்வதேசத்திற்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது. ரம்புக்கனையில் இடம்பெற்ற இது சம்பவம் மேலும் எங்களுடைய பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும். சுற்றுலாத்துறை பாதிக்கப்படும். வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வராது. வெளிநாடுகள் பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவி செய்வதை மீண்டும் ஒரு முறை சிந்தித்து பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே இளைஞர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு, அவர்களுடைய எதிர்ப்பார்ப்புகளை புரிந்து கொண்டு, அரசாங்கம் செயல்பட வேண்டும். ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ''வீதியில் இறங்கி போராடுகின்ற இளைஞர், யுவதிகள் தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்'' எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

றம்புகணை வன்முறை: இலங்கை தூதுவர் கருத்து

றம்புகணை வன்முறை குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக தமிழன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"இது தொடர்பான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ட்விட்டர் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கையின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் ஆயுதமேந்தாத ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையின் அநீதி குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன். ரம்புக்கனை வன்முறை குறித்த முழுமையான வெளிப்படையான விசாரணையின் அவசியம் குறித்தும் பேசினோம். அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் உட்பட அனைத்து பொதுமக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது முன்னர் எப்போதையும் விட தற்போது அவசியமாகவுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.