செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (14:19 IST)

எஸ்.பி.பி உடல்நிலை: அமெரிக்க, பிரிட்டன் மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை!

கோவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நல மருத்துவக் குறியீடுகள் ஒரே நிலையில் நீடிப்பதாக அவர் சிகிச்சைபெற்று வரும் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.
 
இது தொடர்பாக தனியார் மருத்துவமனை இன்று மாலை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், எக்மோ கருவி மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
 
மேலும், பல்துறை மருத்துவர்களைக் கொண்ட குழு, எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. எக்மோ கருவி பொருத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த மருத்துவர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி. சரண் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள காணொளியில், கவலைக்கிடமான நிலையில் எனது தந்தை இருப்பதாக மருத்துவமனை அறிக்கை கூறியிருந்தது. ஆனால், தற்போது அவரது மருத்துவ குறியீடுகள் நிலையாக இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
 
"ஆனால், அதுவே அவர் முழுமையாக மீண்டு விட்டதாக அர்த்தமாகாது. அப்படியென்றால், எல்லா மருத்துவ கண்காணிப்பு அளவீடுகளும் வேலை செய்கின்றன. எந்த சிக்கலும் இல்லை. நன்றாக இயங்குகின்றன என்று பொருள் கொள்ள வேண்டும்."
 
"அனைத்து மருத்துவ குழுவினர் மீதும் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவரது உடல் நிலையாக இருப்பதாக வரும் தகவலே எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் முழுமையாக குணம் அடைய தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்" என்று எஸ்.பி. சரண் கேட்டுக் கொண்டிருந்தார்.
 
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது, தான் நலமாக இருப்பதாகவும் தொலைபேசியில் யாரும் அழைக்க வேண்டாம் என்றும் ஒரு வீடியோ காட்சி மூலம் தெரிவித்தார்.
 
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. அதற்குப் பிறகு பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவியும் எக்மோ கருவியும் பொருத்தப்பட்டது.