செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (22:45 IST)

சிங்கப்பூர்: பிழைக்க போன இடத்தில் கொரோனாவுக்கு இலக்காகும் தொழிலாளர்கள்

சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என பாராட்டுகளை பெற்று வந்த சிங்கப்பூர், கடந்த சில நாட்களாக திடீரென அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.
 
கடந்த சில நாட்களாக அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களிடையே அதிக அளவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை மட்டும் அந்நாட்டில் புதிதாக 728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்நாட்டில் மொத்தம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியுள்ளது. இதில் 90 சதவீதம் பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பதுதான் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
இந்த எண்ணிக்கை இதோடு நின்றுவிடப்போவதில்லை. அடுத்து வரும் நாட்கள் இன்னும் பல வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தொடர்பான வேலைகளில் இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளை சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குறைந்த ஊதியம் பெறும் பணிகளையே செய்து வருகின்றனர்.
 
இவர்கள் பொதுவாக நகரின் வெளிப்புறங்களில் இருக்கும் வளாகங்களில்தான் தங்கி வருகின்றனர். இந்த வளாகங்களில் இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் சற்று குறைவாகவே இருக்கும்.
 
இந்த தங்குமிட வளாகங்களில் இருந்துதான் கடந்த புதன்கிழமை 654 தொற்றுகளும், வியாழக்கிழமை 728 தொற்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக புங்கோல் பகுதியில் உள்ள வளாகத்தில் மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை வரை 979 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா தொற்று எண்ணிக்கையில் 22 சதவிகிதமாகும்.
 
இந்த வளாகங்களில் தங்கியிருந்த, கொரோனா தொற்று ஏற்படாத தொழிலாளர்கள் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர 12 தொழிலாளர் தங்குமிட வளாகங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தங்கியிருப்பவர்கள் யாரும் வெளியே செல்ல முடியாது. அவர்களுக்கு உணவுகள் அவர்களின் அறைகளுக்கே வந்து அளிக்கப்படும்.
 
தற்போது இந்த தங்குமிட வளாகங்களில், ஒரு அறையில் எத்தனை தொழிலாளர்கள் உள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால் 2015-ஆம் ஆண்டு பிபிசி இந்த வளாகங்களை பார்வையிட்ட போது, ஒரு அறையில் 12 பேர் தங்கியிருந்தனர். சில நேரங்களில் ஒரு அறையில் 17 பேர் கூட தங்கியிருப்பார்கள் என சிங்கப்பூரில் செயல்படும் ஓர் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அலெக்ஸ் அவ் தெரிவிக்கிறார்.

இந்த மாதிரியான ஒரு சூழலில் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் போது, கொரோனா அவர்களுக்குள் தீவிரமாக பரவும் சாத்தியம் அதிகரிக்கிறது. மற்ற நேரங்களில் காசநோய் போன்ற சிறிய அளவிலான நோய்கள் இவர்களை தாக்கும் வாய்ப்புகளும் அதிகம்.`` என இடம்பெயர்வு பொருளாதாரத்திற்கான மனிதாபிமான அமைப்பைச் சேர்ந்த கேத்தரின் ஜேம்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் உள்ளூர் ஊடகமான ஸ்ரெயிட்ஸ் டைம்ஸ் தளம் வெளியிட்ட செய்தியில், தாங்கள் தங்கியிருக்கும் இடங்களில் சுகாதாரம் இல்லை என தொழிலாளர்கள் தெரிவித்ததாக கூறப்பட்டிருந்தது.
 
அதன் பின்னர், அந்த இடங்களின் சுகாதாரம் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்தது. மேலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் உடல்நலனில் தாங்கள் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், அவர்களுக்கு ஊதியம் அளிக்கப்படுவதை உறுதி செய்து வருவதாகவும் சிங்கப்பூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இந்த வார தொடக்கத்தில், அடுத்த ஒரு வாரத்தில் சுமார் 5 ஆயிரம் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என சிங்கப்பூர் தெரிவித்திருந்தது. இதில் கொரோனா குறித்த அறிகுறி இல்லாத ஆனால் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கி பழகியவர்களும் அடங்குவார்கள்.
 
வெளிநாட்டு தொழிலாளர்களிடையே பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்ததே, கடந்த சில நாட்களில் அதிக கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்படுவதற்கான காரணம் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இருந்தபோதும், தற்போதைய பரிசோதனை நடவடிக்கை போதுமானதாக இல்லை என அலெக்ஸ் அவ் கூறுகிறார். கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவருடன் தங்கியிருந்த மற்ற 16 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை உடனே செய்யப்படவில்லை எனவும் மாறாக அவர்கள் தங்கள் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர் எனவும் சமீபத்திய சம்பவம் ஒன்றை அவர் நினைவு கூர்ந்தார்.
 
கொரோனா அறிகுறிகள் ஏற்படும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். அறிகுறிகள் தோன்ற தொடங்கியதும்தான் பரிசோதனை நடத்தப்படும். இந்த நடவடிக்கைகள் சாதகமாக அமைவதை விட பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதை போல தோன்றுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
``சில தொழிலாளர்கள் தாங்கள் கைவிடப்பட்டதை போல உணர்கின்றனர். தாங்கள் ஏதோ பெயருக்கு அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதற்கு காத்திருப்பது போல தோன்றுவதாகவும் அங்கிருக்கும் தொழிலாளர்கள் நினைக்கின்றனர்`` என அவர் குறிப்பிட்டார்.
மேலும் சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலை குறித்து கவனத்தில் கொள்ள, இந்த கொரோனா பரவல் காலம் வரை அரசு காத்திருக்க வேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
 
``குறைந்த ஊதியம் வாங்கும் வேலையாட்கள் வேண்டும் என நினைத்தால், அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என இந்த சம்பவம் உணர வைக்கும் என நம்புகிறேன். தற்போது அந்த விலையைத்தான் நாம் கொடுத்து வருகிறோம்.`` என அவர் தெரிவித்தார்.