1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (21:42 IST)

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் எளிய தொழில்நுட்பங்கள்

சாய்ராம் ஜெயராமன்
 
தெலங்கானா, தமிழ்நாடு, ஜார்கண்ட் என பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெண்கள் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, மோசமான முறையில் கொலை செய்யப்படும் சம்பவங்கள் செய்திகளை ஆக்கிரமித்து வருகின்றன.
எப்போதெல்லாம் பெண்களுக்கு எதிரான அநீதி இழைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் இதற்கு காரணமானவர்களை தண்டிப்பது தொடங்கி, சமூக கட்டமைப்பு, கல்வி, குழந்தை வளர்ப்பு, ஆடை, பழக்கவழக்கம், அரசு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.
 
பெண்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அதிலிருந்து தப்பிப்பதற்கு வழியாக தற்காப்பு கலைகள், பெப்பர் ஸ்பிரே உள்ளிட்டவை முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம், நாளுக்குநாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாதா? என்ற கேள்வியும் எழுகிறது.
 
அந்த வகையில், செலவே இல்லாமல் அல்லது சில ஆயிரங்கள் செலவில் பெண்களின் பாதுகாப்பை ஓரளவுக்காவது அதிகரிப்பதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதோ அவற்றில் சில:
 
திறன்பேசி
 
இன்றைய நாளில் திறன்பேசி இல்லாதவர்களே இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு அவற்றின் பயன்பாடு நகரம், கிராமம், படிப்பறிவு உள்ளவர்கள், படிப்பறிவற்றவர்கள் என்று எவ்வித பாகுபாடும் இன்றி காணப்படுகிறது.
 
அந்த வகையில், நமது கைகளில் பெரும்பாலான வேளைகளில் இருக்கும் திறன்பேசியில் 'அவசரகால அழைப்பை' பயன்படுத்தி நீங்கள் உதவியை (காவல்துறை அல்லது தனிப்பட்ட நபர்கள்) நாட முடியும்.
 
பெரும்பாலான திறன்பேசிகளில் உள்ள 'பவர் பட்டனை' மூன்று அல்லது ஐந்து முறை விட்டுவிட்டு அழுத்துவதன் மூலம் இந்த சேவையை நீங்கள் பயன்படுத்த முடியும். இதன் மூலம், நீங்கள் யாரை அழைக்க விரும்புகிறீர்கள் என்பதை உங்களது தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்ய முடியும்.
 
ஒருவேளை மேற்கண்ட முறை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலோ அல்லது வேலை செய்யவில்லை என்றாலோ 'Women safety apps' என்று உங்களது கூகுள் பிளே ஸ்டோரிலோ அல்லது ஆப்பிள் ஆஃப் ஸ்டோரிலோ தேடி நல்ல, நம்பகமான செயலியை திறன்பேசியில் பதிந்துகொள்ளுங்கள். இதுபோன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம், இன்னும் பல்வேறுபட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
 
உதாரணமாக, உங்களது திறன்பேசியை ஒரு குறிப்பிட்ட முறைகள் அசைப்பதன் மூலமாக, நீங்கள் தெரிவு செய்த நபர்களுக்கு உடனடியாக எழுத்து/குரல்/காணொளியுடன் கூடிய குறுஞ்செய்தி உங்களது இருப்பிடம் (ஜிபிஎஸ்) குறித்த தகவலுடன் பகிரப்படும். நீங்கள் விரும்பும் பட்சத்தில் உங்களது இருப்பிடத்தை எந்நேரமும், விரும்பும் சிலருடன் பகிர்ந்து கொள்ளும் வசதிகளையும் பல்வேறு செயலிகள் வழங்குகின்றன. இதுபோன்ற பல்வேறு வசதிகளை கொண்ட செயலிகளை அனைத்து இயங்கு தளங்களிலும் இலவசமாகவும், சில நூறு ரூபாய் செலவிலும் பயன்படுத்த முடியும்.
 
ஆபரணங்களும் உங்களுக்கு உதவும்!
 
திறன்பேசிக்கு அடுத்து பெரும்பாலான பெண்கள் அணியும் ஆபரணங்களை கொண்டு பாதுகாப்பை அதிகரிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? ஆம், இது சாத்தியம்தான், ஆனால் உங்களிடம் ஏற்கனவே இருக்கும் அணிகலன்களை பயன்படுத்த முடியாது. இதற்கென சந்தையில் உள்ள மின்னணு அணிகலன்களை நீங்கள் வாங்க வேண்டியிருக்கும்.
 
உதாரணமாக, டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று, பெண்கள் அணியும் செயினை ஒத்த பாதுகாப்பு கருவியை தயாரித்துள்ளது. அதாவது, நீங்கள் அந்த செயினை கழுத்தில் அணிந்தால் அது சிறிது சந்தேகமும் இன்றி உண்மையான செயினை போன்றே காட்சியளிக்கும். ஆனால், அந்த செயினின் மையப்பகுதியில் இருக்கும் கல்லை (உண்மையில் இது ஒரு பட்டன்) அழுத்துவதன் மூலம், உடனடியாக உங்களது இருப்பிடத்துடன் (ஜிபிஎஸ்) கூடிய எச்சரிக்கை செய்தி நீங்கள் தெரிவு செய்ய நபர்கள் மட்டுமின்றி, அருகிலுள்ள காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்படும்.
 
இதே போன்று பல்வேறு வசதிகளை கொண்ட, திறன்பேசியே தேவைப்படாத கைக்கடிகாரங்கள், கைக்காப்பு (பிரேஸ்லேட்), சாவிக்கொத்துகள் உள்ளிட்டவை சந்தையில் கிடைக்கின்றன. சுமார் 3,500 ரூபாய் விலையில் இணையத்திலேயே இவற்றை எளிதில் வாங்க முடியும்.
 
மின்னதிர்ச்சி கொடுக்கும் கருவிகள்
 
அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பெண்கள் தங்களது பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வைத்திருப்பது என்பது சாதாரணம். அந்த வகையில், இந்தியா போன்ற நாடுகளில் பலர் சாதாரணமாக வைத்திருக்கும் கருவியான மின்விளக்கை (டார்ச்) பயன்படுத்தி பெண்கள் தங்களது பாதுகாப்பை அதிகரிக்க முடியும். எப்படி என்று யோசிக்கிறீர்களா?
 
சாதாரண மின்விளக்கை போன்று காட்சியளிக்கும் நவீன ரக பாதுகாப்பு மின்விளக்குகள் வெளிச்சத்தை கொடுப்பது மட்டுமின்றி, உங்களை தற்காப்பதற்கு மின்னதிர்ச்சியையும் (ஷாக்) வெளிப்படுத்தும்! ஆம், திறன்பேசிகளை மின்னேற்றம் (சார்ஜ்) செய்வதை போன்று இவற்றை மின்னேற்றம் செய்து கொள்ள முடியும். அடிப்படையில் மின்விளக்காக பயன்படுத்துவதுடன், நீங்கள் ஒரு குறிப்பிட்ட பொத்தானை அழுத்துவதன் இதிலிருந்து வெளிப்படும் மின்னதிர்ச்சி படும் ஒருவரை, சில நொடிகளுக்கு நிலைக்குலைய செய்துவிடும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
 
இதுபோன்ற மின்விளக்குகளை ஆயிரம் ரூபாய்க்கு குறைவான நிலையில் இணைய தளத்திலேயே வாங்கிவிட முடியும்.