1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (19:17 IST)

விமானப் பயணம் மேற்கொள்ள மிகவும் ஆபத்தான நாடு எது தெரியுமா?

பயண முறைகளிலேயே விமானப் பயணம் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், சில நாடுகளின் வலுவற்ற விதிமுறைகள் மற்றும் மோசமான நிலப்பரப்பினால் அதுவும் கூட உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக மாறக் கூடும்.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் அண்மையில் ஏற்பட்ட இரண்டு விபத்துகள் அங்கு விமானப் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன.

கடைசியாக கடந்த நவம்பர் மாதம், காங்கோவின் கோமா நகரத்திலுள்ள வீடுகளில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், டி.ஆர். காங்கோவில் விமானப் பயணம் மேற்கொள்வது எவ்வளவு பாதுகாப்பற்றது என்பது குறித்தும், அதே சூழ்நிலையில் உலகின் மற்ற நாடுகளின் நிலவரத்தையும் அலசுகிறது இந்த கட்டுரை.

விமான விபத்துகளுக்கு காரணம் என்ன?

விமானங்களின் பாதுகாப்பு குறித்த தகவல்களை நிர்வகித்து வரும் 'ஏவியேஷன் சேப்டி நெட்ஒர்க்' எனும் அமைப்பின் தரவுகளின்படி, 1945ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில், ஆப்பிரிக்காவிலேயே டி.ஆர். காங்கோவில்தான் அதிகளவிலான விமான விபத்துகள் நடந்துள்ளதாக தெரிகிறது.

டி.ஆர். காங்கோவில் அதிகளவிலான விமான விபத்துகள் நிகழ்வதற்கு அதன் வலுவற்ற விதிமுறைகள், நிலப்பரப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று கூறுகிறார் யூனிவெர்சிட்டி ஆஃப் நார்த் டக்கோட்டாவை சேர்ந்த டேனியல் குவாசி அட்ஜெகம்.

டி.ஆர். காங்கோ நாட்டின் தலைநகரான கின்ஷாசாவிலிருந்து அந்நாட்டில் மொத்தமுள்ள 25 மாகாண தலைநகரங்களில் வெறும் நான்கிற்கு மட்டுமே தரமான சாலை மார்க்கமாக செல்ல முடியும் என்பதால், அங்கு விமானங்களின் தேவை அளவிடற்கரியது.

ஆனால் டி.ஆர். காங்கோவிலுள்ள பெரும்பாலான விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து உதவி, கண்காணிப்பு உபகரணங்கள் மோசமான நிலையில் உள்ளன. அதுமட்டுமின்றி, அந்நாட்டில் மிகவும் பலவீனமான நிலையிலேயே தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கின்றன.

மிகவும் முக்கியமாக, டி.ஆர். காங்கோ நாட்டில் தகுதியற்ற நிலையில் உள்ள விமானங்களும், மிகவும் பழைய விமானங்களும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

விமானப் பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர்களின் மெத்தனத்தினாலும் சிக்கல்கள் எழுகின்றன. அவர்கள் பெரும்பாலும் கண்காணிப்பு மற்றும் கடுமையான ஒழுங்குமுறை தரங்களைக் கடைப்பிடிப்பதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

அதுமட்டுமின்றி, அதிதீவிர மழை, புயல் உள்ளிட்ட மோசமான வானிலையினாலும் டி.ஆர். காங்கோவில் விமான விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

உலகளவில் முதலிடம் வகிப்பது எந்த நாடு?

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலகட்டத்தில் பார்க்கும்போது, உலகிலேயே அதிகளவு விமான விபத்துகள் நடைபெறும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை வகிக்கிறது. அதற்கடுத்தடுத்த இடங்களை ரஷ்யா, கனடா, மெக்ஸிகோ, இந்தோனீஷியா ஆகிய நாடுகள் வகிக்கின்றன.

உலகின் மிகவும் பரபரப்பான விமான பாதைகளில் பலவற்றையும், அதிகளவிலான விமானப் போக்குவரத்து நெரிசலையும் அமெரிக்கா கொண்டுள்ளதால் அங்கு சிறிய தவறு நேர்ந்தாலும், மிகப் பெரிய பிரச்சனைகள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

அதே சமயத்தில், 2010ஆம் ஆண்டுக்கு பிறகான காலத்தில், விமான விபத்துகளால் அதிக பேர் உயிரிழந்தவர்கள் நாடுகளின் பட்டியலில், 535 பேருடன் ரஷ்யா முதலிடமும், 520 பேருடன் இந்தோனீஷியா இரண்டாமிடமும் வகிக்கிறது.

விமான விபத்து

இவ்விரு நாடுகளிலும் விமானங்களின் பயன்பாடு பல்கி பெருகி வருகிறது. கடந்த தசாப்தத்தில் மட்டும் இந்த நாடுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு வளர்ந்துள்ளது. ரஷ்யாவில், 2009 முதல் இதுவரையிலான காலகட்டத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இந்தோனீஷியாவில், இது நான்கு மடங்கிற்கும் மேலாக வளர்ந்துள்ளது.

அதே காலகட்டத்தில் டி.ஆர். காங்கோவை போன்று நேபாளத்திலும் கிட்டத்தட்ட 180 பேர் விமான விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமாக நேபாளத்தின் கடினமான நிலப்பரப்பு, விதிமீறல்கள் மற்றும் விமானப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் சொல்லப்படுகிறது.

எனினும், டி.ஆர். காங்கோவை விட மூன்று மடங்கு அதிக விமானப் பயணிகளை கொண்டுள்ள நேபாளத்தில், விமானப் போக்குவரத்துத்துறை வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

உலகின் விமானப் போக்குவரத்தில் வெறும் 0.1%க்கும் குறைவான பங்களிப்பை கொண்டுள்ளது டி.ஆர். காங்கோ. ஆனால், கடந்த ஒன்பது ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடந்த விமான விபத்துகளில் 4% அந்நாட்டில்தான் நடந்துள்ளது. இதன் மூலம், அங்கு நிலவும் மோசமான சூழல் வெளிப்படுகிறது.

இதன் விளைவாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் டி.ஆர். காங்கோவை சேர்ந்த விமானங்கள் பறக்க தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த பட்டியலில் டி.ஆர். காங்கோ மட்டுமின்றி, ஆசியா, லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த 13 நாடுகளும் இடம்பெற்றுள்ளன.