செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 8 அக்டோபர் 2021 (14:53 IST)

செல்ஃபி புகழ் கொரில்லா: தன்னை மீட்டவரின் மடியில் உயிர்விட்ட சோகம்!

டகாசி என்ற மலைவாழ் கொரில்லாவை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆம் ரேஞ்சருடன் இயல்பாக செல்ஃபிக்கு போஸ் கொடுத்த கொரில்லாவின் பெயர்தான் டகாசி. அப்போது கொரில்லாவின் அந்த செல்ஃபி புகைப்படம் வைரலானது.
 
ஆனால் இப்போது அந்த கொரில்லா தனது 14 வயதில் நீண்ட உடல்நலக் குறைவுக்கு பிறகு உயிரிழந்துள்ளது.
அதுவும் குழந்தையாக தன்னை மீட்ட அண்ட்ரே பவுமா என்ற அந்த ரேஞ்சரின் மடியில். காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள ஆப்ரிக்காவின் பழமையான தேசிய பூங்காவான, விருங்கா கொரில்லா காப்பகத்தில்தான் அந்த 14 வயது பெண் கொரில்லா உயிரிழந்துள்ளது.
 
2007ஆம் ஆண்டு கடத்தல்காரர்கள் டகாசியின் பெற்றோரை கொன்றுவிட்டிருந்தபோது இரு மாத குழந்தையாக இருந்த டகாசியை பவுமா மீட்டெடுட்டெத்தார். பவுமா அதை மீட்டபோது அது உயிரற்ற தனது தாயின் உடலை பிடித்து தொங்கி கொண்டிருந்தது.
 
டகாசி குடும்பத்தை சேர்ந்த கொரில்லாக்கள் ஏதும் அங்கு இல்லாத காரணத்தால் தொடர்ந்து டகாசியை வனத்தில் விடுவது பாதுகாப்பில்லை என பவுமா முடிவு செய்தார்.
 
எனவே பவுமா மேலாளராக இருந்த கொரில்லா காப்பகத்தில் டகாசியை வளர்க்க முடிவு செய்தார்.
டகாசியும், மற்றொரு பெண் கொரில்லாவும் 2019ஆம் ஆண்டு ரேஞ்சர் ஒருவரின் செல்ஃபியில் குறுக்கிட்டு இயல்பாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலானபோது டகாசி சர்வதேச புகழை அடைந்தது.
 
"அந்த கொரில்லாக்கள் தங்களை வளர்த்த ரேஞ்சர்களை போல நடந்து கொள்ள முயற்சி செய்தது," என அந்த பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
ரேஞ்சர்களுக்கும் கொரில்லாக்களுக்கு ஒரு பாசப் பிணைப்பு ஏற்பட்டது. 2014ஆம் ஆண்டு பிபிசியிடம் பேசிய பவுமா அந்த கொரில்லாவை தனது மகளை போல நேசிப்பதாக தெரிவித்தார்.
 
"அவள் என்னோடு படுத்து உறங்கினாள். நான் அவளுடன் விளையாடினேன். உணவு கொடுத்தேன்…நான் அவளின் தாய்," என்றார் அவர்.
பொதுவாக மலைவாழ் கொரில்லாக்கள் உகாண்டா, ருவாண்டா மற்றும் காங்கோ தேசிய பூங்காக்களில் உள்ள காடுகளில் வாழுகின்றன. ஆனால் பருவநிலை மாற்றம், கடத்தல்காரர்கள், மனித ஆக்கிரமிப்புகள் ஆகியவை கொரில்லாக்களுக்கு அழிவை ஏற்படுத்துகின்றன.
 
காங்கோ ஜனநாயக குடியரசு பகுதியின் கிழக்கில் உள்ளது விருங்கா. அந்த பகுதியில் அரசுக்கு பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கும் சண்டை ஏற்பட்டு வருகிறது. அதில் சில ஆயுத குழுக்கள் அந்த தேசிய பூங்காக்களில் மறைந்துள்ளனர். அங்கு அவர்கள் அடிக்கடி விலங்குகளை சட்டவிரோதமாக கடத்துகின்றனர்.
 
டகாசியின் அறிமுகம் கிடைத்த பிறகு மனிதர்கள் மற்றும் மனித குரங்கினங்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து தான் புரிந்து கொண்டதாகவும், மனிதர்கள் எப்பாடு பாட்டாயினும் கொரில்லாக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து தெரிந்து கொண்டதாகவும் பவுமா வியாழனன்று தெரிவித்திருந்தார்.
 
"நான் அவளை எனது குழந்தையை போல நேசித்தேன். அவளின் துறுதுறுப்பு சுபாவம், எப்போதெல்லாம் நான் அவளுடன் பேசினேனோ அப்போதெல்லாம் என் முகத்தில் புன்னகையை வர வைத்தது." என்று பவுமா தெரிவித்தார்.