ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (10:20 IST)

அமெரிக்க அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல் மீது மோதிய 'அறியப்படாத பொருள்'

அமெரிக்காவுக்கு சொந்தமான அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தெற்கு சீனக் கடல் பகுதியில் ''அறியப்படாத பொருள்'' ஒன்றின் மீது மோதியதால் அமெரிக்கப் படையினர் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

யூஎஸ்எஸ் கனெக்டிகட் என்ற அந்தக் கப்பல் சனிக்கிழமையன்று நீருக்கு அடியில் அந்தப் பொருள் மீது மோதியதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், இந்த மோதல் எதனால் நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
 
தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனப் போர் விமானங்கள் நுழைந்ததாக அப்பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றம் உண்டாகி இந்த சூழலில் இது நிகழ்ந்துள்ளது.
 
யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் தற்போது அமெரிக்கப் பிராந்தியமான குவாம்-ஐ நோக்கிப் பயணித்து வருகிறது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
தெற்கு சீனக் கடல் பகுதி சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இக்கடல் பகுதியில் பெரும்பாலான பகுதி தமக்கே உரியது என்று சீனா கூறி வருகிறது.
 
ஆனால் அப்பிராந்தியத்தில் உள்ள பிலிப்பைன்ஸ். மலேசியா, தைவான் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் சீனாவின் கூற்றை மறுத்து வருகின்றன.
 
இந்த பிரச்சனையில் சீனாவை எதிர்க்கும் அமெரிக்கா பிற நாடுகளுக்கு ஆதரவளித்து வருகிறது.