திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (18:34 IST)

போராட்டத்திற்கு காளிகாம்பாள் கோயிலை அண்ணாமலை தேர்வு செய்தது ஏன்?

தமிழ்நாட்டில் அனைத்து நாட்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி, பா.ஜ.க சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
 
இந்த நிலையில், `போராடுவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட போராட்டத்தை அவர்களாகவே உருவாக்கிக் கொண்டனர்,' என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
 
கொரோனா இரண்டாம் அலை காரணமாக, தமிழ்நாட்டில் இறை வழிபாடு நடத்துவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கோயில்கள், மசூதிகள், கிறிஸ்துவ தேவாலயங்களில் வார இறுதி நாள்களில் வழிபாடு நடத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
 
அனைத்து நாள்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி, பா.ஜ.க சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்குப் பதில் அளித்த தமிழ்நாடு அரசு, `மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் அனுமதி அளிக்கப்படுகிறது' என தெரிவித்தது.
 
இந்நிலையில், அனைத்து நாள்களிலும் கோவில்களைத் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
குறிப்பாக, 12 திருக்கோவில்களின் முன்பாக இந்தப் போராட்டத்தை பா.ஜ.கவினர் நடத்தினர். சென்னை, பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள்கோயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
 
இது தவிர, திருச்செந்தூர் முருகன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழநி தண்டாயுதபாணி திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், தஞ்சை பெரிய கோயில், ராமநாதபுரம், ராமநாத சுவாமி ஆலயம், கோவை கோனியம்மன் ஆலயம், தில்லை நடராஜர் ஆலயம், நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் எனப் பல பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அண்ணாமலை, ``தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் திறந்த நிலையில், கோயில்களைத் திறக்க அனுமதி மறுக்கப்படுவது ஏன்? திரையரங்குகளில் மட்டும் கொரோனா பரவாதா? எங்களின் பூஜை அறைகளுக்குள் உங்களின் (தி.மு.க) சிந்தாந்தத்தைக்கொண்டு வர வேண்டாம். கொரோனாவை காரணம் காட்டி தடைவிதிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் வேறு வழியில்லாமல் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்" என்றார்.
 
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ``எப்போதுமே நாங்கள் நல்ல விஷயங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். குறிப்பாக, பள்ளிகளைத் திறப்பதற்கு அரசு முடிவு செய்தபோது வரவேற்றோம். அதேநேரம், திரையரங்குகளைத் திறக்க முடிவு செய்தபோது எதிர்ப்பு தெரிவித்தோம். எங்களின் எதிர்ப்பையும்மீறி திரையரங்குகளைத் திறந்தார்கள்" என்றார். கோயிலை பூட்டுவதற்கு கொரோனா ஒரு காரணம் இல்லை.
 
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தன்னிச்சையாக செயல்படுவோம் என்று கூறிய தி.மு.க, தற்போது மத்திய அரசின் வழிகாட்டலின்படி கோயில்களை மூடுவதாக தெரிவித்துள்ள கருத்தில் உண்மையில்லை. கடவுள் இல்லை என்பதுதான் தி.மு.கவின் சித்தாந்தம். ஆகவேதான், கோயில்களுக்குத் தடை போடுகிறார்கள்.நாங்கள் தமிழக அரசுக்கு பத்து நாள்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் கோயில்களைத் திறப்பது தொடர்பாக நல்ல முடிவை எடுக்க வேண்டும்" என்றார்.
 
பா.ஜ.கவின் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ``போராடுவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட போராட்டத்தை அவர்களாகவே உருவாக்கிக் கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரையில்மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான், கொரோனா நோய்த் தொற்று தளர்வுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை என்னவென்றால், `அதிகமாகக் கூட்டம் கூடுகிற நிலையைத் தவிர்க்க வேண்டும், திருவிழாக்களை அனுமதிப்பது தொடர்பாக மாநில அரசுமுடிவு செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளது.
 
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் கோவில்களுக்கு பக்தர்கள் அதிகமாக வரக் கூடிய சூழல் உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நான்கு நாள்களில் திருக்கோயில்கள் முழுமையாக திறந்துள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டிருந்தாலும் தெய்வத்துக்கு வேண்டிய அனைத்து பூஜைகளும் எப்போதும்போல நடந்து வருகின்றன. கொரோனா அபாயம் நம்மைவிட்டு நீங்கியவுடன் திருக்கோயில்களை முதல் பணியாக முதலமைச்சர் திறந்து வைப்பார்" என்றார்.
 
தொடர்ந்து பேசிய சேகர்பாபு, `` பா.ஜ.க நடத்தும் போராட்டத்தை உற்று நோக்கினால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களில் எதாவது ஒரு நாளை போராட்டத்துக்கு உகந்த நாளாக அவர்கள் தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு காளிகாம்பாள் கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள்வந்து செல்வார்கள். இவர்களின் இன்றைய போராட்டத்தால் அந்தக் கோயிலில் வழிபாடு என்பது 3 நாள்களாகக் குறைந்துவிட்டது.
 
போராடுகிறவர்கள், கண்மூடித்தனமாக காரணங்களை உருவாக்கிக் கொண்டு போராடுகிறார்களே தவிர, கொரோனா நோய்த் தொற்றில் விலைமதிக்க முடியாத உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். எம்மதமும் சம்மதமே என்பதுதான் முதல்வரின் கோட்பாடு.கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார்.