வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (23:41 IST)

விந்தணுக்களை சேமிக்க கிளினிக்குகளுக்கு அலைமோதும் ரஷ்ய வீரர்கள்

russia army
யுக்ரேன் போருக்கு அழைக்கப்பட்ட ரஷ்யப் படை வீரர்கள் தங்களுடைய விந்தணுக்களை கிரையோவங்கியில் (விந்தணுக்களை சேமிக்கும் வங்கி) சேமித்து வைத்து கொள்ளலாம் என ரஷ்யாவின் முன்னணி வழக்கறிஞர் கூறியுள்ளார்.

 
இது குறித்து அரசு செய்தி நிறுவனமான டாஸிடம் பேசிய ரஷ்ய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இகோர் ட்ரூனோவ், படை வீரர்கள் தங்களது விந்தணுக்களை இலவசமாக சேமித்து கொள்ளும் வசதியை வழங்க வேண்டும் என்ற தனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் மருத்துவ காப்பீட்டிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.

 
இந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா, யுக்ரேன் மீதான தனது படையெடுப்பை தொடங்கியது.
 
யுக்ரேன் உடனான போரில் ரஷ்யா தற்போது அடுத்தடுத்த பின்னடைவுகளைத் சந்தித்து வரும் நிலையில் 3 லட்சம் படை வீரர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
 
இவ்வாறு அழைக்கப்பட்ட ராணுவ வீரர்கள் தங்களது விந்தணுக்களை பாதுகாக்க க்ளினிக்குகளை அணுகுகின்றனர் என தகவல் வெளியானது.  
 
 
விந்தணுக்களை சேமிக்க கிளினிக்குகளுக்கு அலைமோதும் ரஷ்ய வீரர்கள் - பின்னணி
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 
இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள இகோர் ட்ரூனோவ், தனது சங்கமானது சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட அழைக்கப்பட்டுள்ள கணவர்கள் மற்றும் அவர்களது மனைவிகளின் சார்பாக விந்தணுக்களை இலவசமாக சேமிக்கும் வசதி வேண்டும் என அரசிடம் விண்ணப்பத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

 
யுக்ரேன் உடனான தனது போரை ரஷ்யா, சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே அழைக்கிறது.

 
ட்ரூனோவின் கோரிக்கை குறித்து சுகாதாரத்துறை வெளிப்படையாக இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

 
இந்த வசதிகளை பெற என்ன மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து சம்பந்தபட்ட துறையுடன் தங்களது சங்கம் தொடர்ந்து பேசிக் கொண்டு வருவதாக பிபிசியிடம் ட்ரூனோவ் தெரிவித்தார்.

 
சிறப்பு ராணுவ நடவடிக்கை 2022-2044ல் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய வீரர்களின் விந்தணுக்களை இலவசமாக பாதுகாத்து, சேமித்து வைக்க மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும் சாத்தியங்கள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக அரசின் செய்தி நிறுவனமான டாஸிடம் ட்ரூனோவ் தெரிவித்துள்ளார்.

 
இரண்டு லட்சம் ராணுவ வீரர்களுடன் கடந்த பிப்ரவரி மாதம் யுக்ரேனை படையெடுத்தது ரஷ்யா. போரின் ஆரம்ப கட்டத்தில் தன் வசம் வைத்திருந்த பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை ரஷ்யா தற்போது இழந்ததுள்ளது மட்டுமின்றி, ஆயிரகணக்கான ரஷ்ய வீரர்களும் உயிர் இழந்துள்ளனர்.

 
கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் புதின், பகுதியளவு வீரர்களுக்கு யுக்ரேனுடனான போரில் ஈடுபட அழைப்பு விடுத்திருந்தார். அதேசமயம் போரில் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடரந்து அதிகரித்து வந்தது. இதனால் ராணுவத்தில் சேருவதைத் தவிர்க்க 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை வீட்டு வெளியேறினர் 
 
 
போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட ஒருசில நாட்களில், தங்களது விந்தணுக்களை சேமித்து வைக்கவும், ஐவிஎஃப் முறைக்காகவும் ஆண்கள் க்ளினிக்குகளை நோக்கி அலைமோதுகின்றனர் என ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் இருந்து செயல்படும் ஃபான்டகா வலைதளம் தெரிவித்தது.

 
தங்களுடையை விந்தணுக்களை தங்களது மனைவிகள் பயன்படுத்துவதற்கான ஆவணத்தையும் அவர்கள் அளித்தனர் என ஃபான்டகா வலைதளம் தெரிவித்தது.

 
போருக்குச் செல்லத் தயாராக இருக்கும் ஆண்கள், அதே போல ரஷ்யாவை விட்டு வெளியேற திட்டமிட்டிருக்கும் ஆண்களும் இது போல முன் வந்ததாக நகரின் மரின்ஸ்கி மருத்துவமனையைச் சேர்ந்த ஆண்ட்ரி இவனோவ் கூறினார்.

 
ஒருவேளை போரில் உயிரிழக்க நேரிட்டால்... என்ற எண்ணத்தில் ரஷ்ய ஆண்கள் இந்த விந்தணு சேமிப்பு சேவையை அணுகுகின்றனர். இதற்கு முன்பாக இவ்வாறு விந்தணுக்களை உறைய வைக்கும் நடைமுறைகளை அவர்கள் யோசித்தது இல்லை என ஃபான்டகா வலைதளம் தெரிவித்துள்ளது.
 
போர் வீரர் இறந்து விட்டாலோ அல்லது குழந்தை பெறும் திறனை இழந்துவிட்டாலோ தற்போது சேமித்து வைத்திருக்கும் விந்தணுக்களின் மூலம் குழந்தை பெற்று கொள்ளலாம்.
 
எனினும் இது போன்ற கருத்தரித்தல் சிகிச்சை அளிக்கும் கிளினிக்குகளை அணுகும் ஆண்களின் எண்ணிக்கை போர் மேகம் சூழ்ந்த ஆரம்ப கட்டத்தில் இருந்ததை விடவும் இப்போது குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது.
 
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள க்ளினிக் ஒன்றில் இதுகுறித்து பிபிசி கேட்டபோது, 2023ஆம் ஆண்டு வரை விந்தணுக்களை சேமிக்கும் வசதிகள் நிறைவடைந்துவிட்டதால் தற்போது அந்த சேவையை வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டது.