ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (11:15 IST)

கொரோனா வைரஸ் இல்லை என மறுத்துவந்த ரஷ்ய சாமியார் கைது

கொரோனா பெருந்தொற்று பரவலை மறுத்துவந்த, சமய அந்தஸ்து பிடுங்கப்பட்ட மதகுரு ஒருவரை ரஷ்ய காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
அதி தீவிர பழமைவாத சிந்தனை உடையவரான ஃபாதர் செயீர்ஹீ தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெண் துறவிகள் மடத்தில் மேற்கொண்ட சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.
 
சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்ள ஊக்குவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதியப்பட்டுள்ளன.
 
ரஷ்யன் ஆர்தோடக்ஸ் திருச்சபையால் மத போதனை செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்ட இவர் கடந்த ஜூன் மாதம் எகாதெரின்பர்க் அருகே உள்ள ஸ்ரெட்னூரல்ஸ்க் எனும் இடத்தில் உள்ள துறவிகள் மடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேற மறுத்து விட்டார்.
 
கொரோனா வைரஸ் பெருந்தொற்று என்ற ஒன்று இல்லவே இல்லை என்று இவர் மறுத்து வந்தார்.
 
கடந்த ஏப்ரல் மாதம் இவர் மத போதனை செய்வது தடை செய்யப்பட்டது; இறை நம்பிக்கை உள்ளவர்கள் பொது சுகாதார ஆணைகளைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று இவர் ஊக்குவித்த பின்னர், மே மாதம் சிலுவை அணிவதற்கான உரிமை இவரிடமிருந்து பறிக்கப்பட்டது.
 
2000வது ஆண்டுகளின் தொடக்கத்தில் ஸ்ரெட்னூரல்ஸ்க் துறவிகள் மடத்தை நிறுவ உதவினார் ஃபாதர் செயீர்ஹீ. இவரது சமயச் சொற்பொழிவுகளைக் கேட்க நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர்.
 
கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே தேவாலயங்களுக்கு வழிபடுபவர்கள் வர ரஷ்ய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
 
"கிறிஸ்துவுக்கு எதிரான முன்னோடிகளுக்கு" அதிகாரிகள் துணை போவதாக அப்போது செயீர்ஹீ குற்றம்சாட்டியிருந்தார்.
 
செயீர்ஹீயின் ஆதரவாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே சுமார் ஒரு மணி நேரம் நடந்த மோதலுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார்.
 
இந்த மோதலில் மூன்று கன்னியாஸ்திரீகள் உட்பட பலர் காயமடைந்தனர்.
 
அந்த மடாலயத்தின் காவலுக்கு இருந்த பெரும்பாலானவர்கள் கிழக்கு உக்ரைனில் தற்போது நடந்து வரும் சண்டையில் பங்கெடுத்துள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என்று கருதப்படுகிறது.
 
காவல்துறையுடன் தமது ஆதரவாளர்கள் நடத்திய மோதலின் பின்பு, தாம் நலமுடன் இருப்பதாக காணொளிச் செய்தி ஒன்றில் செயீர்ஹீ தெரிவித்திருந்தார்.
 
"தாங்கள் செய்வது என்னவென்று அறியாத இவர்களை மன்னித்துவிடு தேவனே; ஒருவேளை அவர்கள் அறிந்திருந்தாலும் அவர்களை மன்னித்து விடு," என்று தம்மை, பின்னர் கைது செய்த அதிகாரிகள் குறித்து அந்த காணொளியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
உள்ளூர் செய்தி இணையதளமான ura.ru-வில் வெளியாகியுள்ள குற்றப்பத்திரிகையில், "குறைந்தபட்சம் பத்து கன்னியாஸ்திரிகளை" தங்கள் உயிரை தாங்களே எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தும் காணொளியைப் பதிவு செய்து அதை செயீர்ஹீ யூடியூபில் பதிவேற்றினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 
அவரது சொற்பொழிவின்போது அங்கு கூடியிருந்த குழந்தைகள் உள்ளிட்டோரை ரஷ்யாவுக்காகவும், அவர்களது குழந்தைகளுக்காகவும், அவர்களது எதிர்காலத்துக்காகவும் சிலுவையில் ஏறத் தயாரா என்று அவர் கேட்பது பதிவாகியுள்ளது.
 
யார் இந்த ஃபாதர் செயீர்ஹீ ?
முன்னாள் காவல் அதிகாரியான ஃபாதர் செயீர்ஹீ ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று, பதிமூன்று ஆண்டுகள் சிறை முகாம் ஒன்றில் இருந்தார். 1990-களின் பிற்பகுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
 
அதன் பின்பு அவர், ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னரான இரண்டாம் நிக்கோலஸ் நினைவாக தமது பெயரை நிக்கோலாய் ரோமனாஃப் என்று மாற்றிக் கொண்டார்.
 
1918இல் கொல்லப்பட்ட பேரரசர் இரண்டாம் நிக்கோலஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் எகாதெரின்பர்க் நகருக்கு வெளியே புதைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
 
திருச்சபையில் இருக்கும் "ரகசிய ஜார் வழிபாட்டாளர்கள்" இயக்கத்தின் தலைவராக செயீர்ஹீ பார்க்கப்படுகிறார்.
 
கடந்த காலங்களிலும் பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியுள்ளார் ஃபாதர் செயீர்ஹீ. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் எதிராளியாக கிறிஸ்துவின் எதிரி விரைவில் ரஷ்யாவில் தோன்றுவார் என்று கூட அவர் ஒருமுறை கூறியுள்ளார்.