புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (10:13 IST)

கீயவ் மற்றும் செர்னிஹிவ் பகுதிகளில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள்

Kyiv
கீயவ் மற்றும் செர்னிஹிவ் பகுதிகளில் இருந்து ரஷ்யா வெளியேறும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


“கீயவ் மற்றும் செர்னிஹிவ் அருகேயுள்ள ரஷ்ய படைகள், பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் மீண்டும் ஒருங்கிணையவும் நிலைநிறுத்தவும் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறிவிட்டன” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

“அதிபர் விளாதிமிர் புதின் அவருடைய மூலோபாய இலக்குகளில் எதையும் அடையவில்லை,” என்றும் பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, “அவர் உண்மையில் ஒரு சிறிய மக்கள் தொகை இருக்கும் பகுதிகளை மட்டுமே கட்டுப்படுத்துகிறார். அவர்கள் கார்ஹிவை கைப்பற்றவில்லை,” என்றார்.

யுக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் தனது முயற்சிகளை மையப்படுத்துவதாக ரஷ்யா அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்தத் தகவல் வந்துள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த பென்டகன் அதிகாரி பேசுகையில், ரஷ்ய படைகள் எதிர்காலத்தில் மீண்டும் கீயவுக்குச் செல்லக்கூடும் என்றும் பின்வாங்கும் படைகள் மீண்டும் திரும்பி வருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறினார்.

இன்ஸ்டிட்யூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் வார் திங்க் டேங்க்கின் படி, கீயவை சுற்றியிருந்து பின்வாங்கும் ரஷ்ய படைப் பிரிவுகள், “சில காலத்திற்கு மீண்டும் தங்கள் செயல்திறனைப் பெறுவதற்கு” வாய்ப்பில்லை.

யுக்ரேனுக்கு அனுப்பப்பட்ட 130 ரஷ்ய படைப்பிரிவுகளில், 80-க்கும் மேற்பட்டவை இன்னும் யுக்ரேனுக்குள் உள்ளன என்றும் அந்த அதிகாரி கூறினார்.

ஏபி செய்தி முகமை, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி, பின்வாங்கிச் செல்லும் ரஷ்ய படைகளில் குறைந்தபட்சம் 24,000 பேர் இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளது.