யுக்ரேனில் கிராம தலைவர், அவருடைய கணவர் மற்றும் அவர்களின் மகனை ரஷ்யப்படைகள் கொன்றுள்ளதாக, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமும், சாதாரண பொதுமக்கள் உடை அணிந்திருந்த 5 ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதும், யுக்ரேனில் நடைபெறும் கொடூரங்களின் சாட்சியங்களுள் ஒன்றாக இணைந்துள்ளன. இந்த இரண்டு சம்பவங்களின் நிகழ்விடங்களுக்கும் பிபிசியின் யோகிதா லிமாயே சென்றார்.
யுக்ரேன் தலைநகர் கீயவின் புறநகரில் உள்ள புச்சா பகுதியில் ரஷ்ய ஆக்கிரமிப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள், தற்போது இறுதியாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன. முன்பு குழந்தைகள் சமூக மையமாக திகழ்ந்த கட்டடம் ஒன்றின் அடித்தளத்தில், ஐந்து சடலங்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. சடலமாக கண்டெடுக்கப்பட்ட 5 ஆண்களும் சாதாரண பொதுமக்கள் உடைகளில் இருந்தனர், அவர்களின் கைகள் முதுகுக்குப் பின்னே கட்டப்பட்டிருந்தன.
அதில் சிலர் தலையில் சுடப்பட்டிருந்தனர், மற்றும் சிலர் மார்பில் சுடப்பட்டிருந்தனர். அவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், அவர்கள் அனைவரும் ரஷ்யப்படையினரால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் எனவும், அப்படையினரால் அவர்கள் கொல்லப்பட்டனர் எனவும், யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"நாங்கள் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம்"
"அவர்கள் சுடப்பட்ட சத்தத்தை நாங்கள் கேட்டோம்," என அந்த சடலங்களை கொண்டு வந்த தன்னார்வலர்களுள் ஒருவரான வ்ளாட் தெரிவித்தார். மேலும், "அந்தப்பகுதியில் கண்ணிவெடிகள் வெடித்ததாக அறிந்தோம். எங்களை சுற்றி நிறைய கண்ணிவெடிகள் இருந்தன. இதற்கிடையில் நாங்கள் உயிருடன் இருப்பதை அதிர்ஷ்டமாக நினைக்கிறோம்" எனவும் தெரிவித்தார்.
தண்ணீரை எடுத்து வருவதற்காக சாலைக்கு சென்ற மனைவியை கணவர் ஒருவர் அழைக்கும் சத்தம் கேட்டதாகவும், பின்னர் சரமாரியாக துப்பாக்கிசூடு சத்தம் கேட்டதாகவும் வ்ளாட் விவரிக்கிறார். அதன்பின்னர், கணவன் - மனைவி இரண்டு பேரும் இறந்துகிடந்ததை தான் கண்டதாக அவர் தெரிவித்தார். "உங்களுக்கு என்னால் பல கதைகளை சொல்ல முடியும், ஆனால், அவற்றை நான் சொல்ல நினைக்கவில்லை," என்றார். "அவற்றை நான் மறக்க நினைக்கிறேன்" என கூறினார்.
இதற்கு மிக அருகில் உள்ள மோட்டோஸின் எனும் கிராமத்தில் நான்கு சடலங்கள், அதிக ஆழமில்லாத குழியில் கிடத்தப்பட்டிருந்தன. அவற்றில் மூன்று பேரின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்கள், 51 வயதான ஓல்ஹா சுகேன்கோ, அவருடைய கணவர் இகோர் மற்றும் அவர்களுடைய 25 வயது மகன் ஒலெக்சாண்டெர் ஆகியோர்.
இவர்களுள் ஓல்ஹா கிராம தலைவர் ஆவார். யுக்ரேனிய படைகளுக்கு அவரும் அவருடைய குடும்பத்தினரும் உதவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அவர்களின் சடலங்கள் பாதி மட்டுமே புதைக்கப்பட்டிருந்தன. ஓல்ஹாவின் கையும், அவருடைய மகனின் முகமும் மண்ணுக்குள்ளிருந்து தெரியும் வகையில் இருந்தது.
குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா மறுப்பு
யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி புச்சாவுக்கு கடந்த திங்கள்கிழமை சென்றார். "இங்கு என்ன நடந்தது, ரஷ்ய ராணுவத்தினர் என்ன செய்தனர், அமைதியான யுக்ரேனில் ரஷ்யா என்ன செய்தது என்பதை காட்ட வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். இவர்கள் (கொல்லப்பட்டவர்கள்) பொதுமக்கள் என நீங்கள் உணர்வது முக்கியம்," என அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த யுக்ரேன் இன்னும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். "யுக்ரேன் அமைதிக்கு தகுதியானது," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "போருடன் எங்களால் வாழ முடியாது. எங்கள் ராணுவத்தினர் தினந்தோறும் சண்டையிடுகின்றனர், ஆனால், லட்சக்கணக்கானோர் உயிரிழப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான், ரஷ்யாவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நினைக்கிறோம்," என தெரிவித்தார்.
அதிகப்படியான சடலங்களை புதைப்பதற்காக, புச்சா முழுவதும் பெரிய இடுகாடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதுக்குக்குப் பின்னே கைகள் கட்டப்பட்டு உயிரிழந்த பொதுமக்கள் குறித்த புகைப்படங்களும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. ஒருகாலத்தில் அமைதியான நகரமாக திகழ்ந்த இந்த நகரத்தில் அட்டூழியங்கள் பெருகியதற்கான சான்றுகள் திங்கள் கிழமை அதிகளவில் வெளியாகின.
இந்நகர மேயர் அனடோலி ஃபெடோருக், குறைந்தது 300 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை. இதனை ரஷ்யா மறுத்துள்ளது, அதுகுறித்த காணொளி சான்றுகள் அனைத்தும் போலியானவை என தெரிவித்துள்ளது. ஆனால், ரஷ்யாவின் மறுப்பு சீற்றத்தை வரவழைத்துள்ளது. ரஷ்யப்படையின் உடைந்த, எரிந்த டேங்குகள் புச்சாவின் ஒரு நீண்ட சாலையில் சிதறிக்கிடந்தன.
கீயவின் மேற்கில் அமைந்துள்ள புச்சாவில் என்ன நடந்தது என்பதை இப்போது கொஞ்சம் அறிந்துள்ளோம். ஆனால், யுக்ரேன் முழுவதும் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் இன்னும் ரஷ்யப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு கண்டறியப்பட்டது போன்று, மற்ற பகுதிகளிலும் அடித்தளங்களிலிருந்தும் மற்றும் ஆழமில்லாத குழிகளிலிருந்தும் சடலங்கள் கண்டறியப்படலாம் என்பது குறித்த அச்சம் எழுந்துள்ளது.