எரிந்த ரஷ்ய விமானம்: மின்னல் தாக்கியதால் நிகழ்ந்த விபத்தா?

Last Updated: செவ்வாய், 7 மே 2019 (13:58 IST)
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை அவசரமாகத் தரையிறங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அந்த விமானத்தில் இருந்த 78 பேரில் 41 பேர் உயிரிழந்தனர். 
 
இந்த விமானம் மின்னல் தாக்கியதை அடுத்தே அவசரமாகத் தரையிறங்க முயன்று விபத்தில் சிக்கியதாக உயிர் தப்பிய விமானப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் தற்போது தெரிவிக்கின்றனர்.
 
இந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் தாங்கள் தப்பியது எப்படி என்பதைப் பற்றி கூறும்போது மின்னல் தாக்கியதால் விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால், விபத்துக்கான காரணத்தை ஆராயும் அதிகாரிகள் இன்னமும் மின்னல் தாக்கி விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுவது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
 
விமானங்கள் மின்னல் தாக்குதல்களைத் தாங்கும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றன. விபத்துக்குள்ளான விமானம் சுகோய் சூப்பர்ஜெட்-100 வகையை சேர்ந்தது.
 
விமானத் தரவுகளையும், விமானி அறையான காக்பிட்டில் நடக்கும் உரையாடல்களையும் பதிவு செய்யும் கறுப்புப் பெட்டி மீட்டெடுக்கப்பட்டு விசாரணையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மேலும் படிக்கவும் :