1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (18:06 IST)

புதின் - கிம் உச்சி மாநாடு: ரஷ்யா - வட கொரியா உறவை மேம்படுத்த உறுதி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் இருவரும் முதல் முறையாக நேரில் சந்தித்துப் பேசுகின்றனர்.
 
ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுக நகரமான விலாடிவோஸ்டாக் அருகே, ரஸ்கி தீவில் இந்த இரு தலைவர்களும் இன்று (வியாழக்கிழமை) கை குலுக்கினர். இந்த சந்திப்பில் ரஷ்ய - வட கொரிய உறவை மேம்படுத்த உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இரு தலைவர்களும் அணு ஆயுத ஒழிப்பு குறித்துப் பேசுவார்கள் என்று ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்க - வட கொரியப் பேச்சுவார்த்தை முறிந்த நிலையில், ரஷ்யாவிடம் கிம் ஆதரவு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடந்த டிரம்ப் - கிம் உச்சி மாநாடு தோல்வியில் முடிந்தது. வட கொரிய அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக எந்த முடிவையும் அந்த அந்த மாநாட்டில் எட்ட முடியவில்லை.
விலாடிவோஸ்டாக் சந்திப்பின்போது தொடக்கத்தில் பேசிய இரு தலைவர்களும் ரஷ்யா - வட கொரியா இடையில் நிலவும் உறவின் நீண்ட வரலாற்றைக் குறிப்பிட்டுப் பேசினர். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க உதவுவதாக புதின் உறுதியளித்தார்.
 
கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழ்நிலையை எப்படி சரி செய்வது என்பதையும், தற்போது நடந்துகொண்டிருக்கும் நேர்மறையான செயல்பாடுகளுக்கு ஆதரவாக ரஷ்யா என்ன செய்ய முடியும் என்பதையும் நாம் புரிந்துகொள்வதற்கு உங்களது இன்றைய ரஷ்யப் பயணம் உதவும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கிம்மிடம் கூறினார் புதின்.
 
"ஏற்கெனவே நீண்ட நட்பும் வரலாறும் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் உறுதியானதாக, ஆழமானதாக மாற்றும் ஒரு பயனுள்ள சந்திப்பாக இது இருக்கும்" என்று நம்புவதாக கிம் குறிப்பிட்டார்.