1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 1 மே 2021 (09:04 IST)

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் திரும்பி வருவது குற்றம், வந்தால் 5 ஆண்டு சிறை

இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி வருவது குற்றம் என்று அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.

அப்படித் திரும்பி வருகிறவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம். "தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களில்  இந்தியாவில் கோவிட் 19 நோய் தொற்றிக்கொண்டவர்கள் விகிதத்தை அடிப்படையாக கொண்டு" இந்த சட்டம் போடப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் சுகாதார  அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இந்த வாரத் தொடக்கத்தில், இந்தியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதித்தது ஆஸ்திரேலியா. இந்தியாவில் சுமார் 9 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 600 பேர் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
 
இந்த நடவடிக்கை குறித்து ஆஸ்திரேலியன் டிவியிடம் பேசிய ஒரு மருத்துவர், இந்தியாவில் இருந்து திரும்பி வருகிறவர்களால் ஏற்படும் ஆபத்தின் அளவைக்  காட்டிலும் அதிதீவிரமான நடவடிக்கை இது என்று கூறியுள்ளார்.
 
"மீட்கப்படுவதற்கு வழி இல்லாமல் இந்தியாவில் நமது குடும்பங்கள் செத்துக்கொண்டிருக்கின்றன. இது கைவிடும் செயலாகும்" என்று சுகாதார விமர்சகர் டாக்டர்  வியோம் ஷார்மர் கூறியுள்ளார்.
 
திங்கட்கிழமையில் இருந்து 14 நாள்களுக்குள் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பவேண்டிய நிலையில் இருப்பவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் நுழைவது தடை செய்யப்படுகிறது.
 
இந்த புதிய விதியை மதிக்கத் தவறுகிறவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையோ, சுமார் ரூ.38 லட்சத்துக்கு இணையான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். மே 15ம் தேதி இந்த தடை மறுபரிசீலனை செய்யப்படும் என்கிறது சுகாதார அமைச்சகம்.
 
இந்த முடிவை எளிதாக எடுத்துவிடவில்லை என்று தெரிவித்த ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட், ஆனால், "ஆஸ்திரேலிய பொது சுகாதார அமைப்பு மற்றும் தனிமைப்படுத்தல் முறையின் மீதான நம்பகத் தன்மை பாதுகாக்கப்படுவது அவசியம். தனிமைப்படுத்தல் மையத்தில் கோவிட் நோயாளிகள்  எண்ணிக்கையை சமாளிக்கக் கூடிய அளவில் குறைவாக வைத்திருப்பதும் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.