1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 17 டிசம்பர் 2021 (18:35 IST)

புஷ்பா: திரை விமர்சனம்!

நடிகர்கள்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ், ஃபஹத் பாசில், சமந்தா, தனஞ்சய், சுனில், அனுசூயா பரத்வாஜ், மைம் கோபி, அஜெய் கோஷ்; இசை: தேசி ஸ்ரீ பிரசாத்; இயக்கம்: சுகுமார்.
 
சமீப காலத்தில் எந்த ஒரு தெலுங்குப் படமும் பல்வேறு மொழிகளில் இந்த அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதில்லை. இயக்குனர் பந்த்ரெட்டி சுகுமாரின் முந்தைய இயக்கமான 'ரங்கஸ்தலம்', அவர் தயாரித்த 'உப்பென்னா' ஆகியவை இங்கு சலசலப்பை ஏற்படுத்தின என்றாலும் இந்த அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தவில்லை. சுகுமாரின் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வரவிருக்கும் புஷ்பா திரைப்படத்தின் முதல் பகுதிதான் இந்த "புஷ்பா: The Rise".
 
தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்களை சட்டவிரோதமாக வெட்டும் தொழிலாளிதான் புஷ்பா என்ற புஷ்பராஜ். ஆனால், சீக்கிரத்திலேயே அந்த மரங்களை காவல் துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பத்திரமாக துறைமுகம் வரை கடத்துவதில் தேர்ச்சிபெறுகிறார் புஷ்பா. ஏற்கனவே அந்தத் தொழிலில் இருந்த கொண்டா ரெட்டி, மங்களம் சீனு போன்றவர்கள் இவருக்கு எதிராக உருவெடுக்கிறார்கள்.
 
இதற்கிடையில், புஷ்பாவைப் பிடிக்க காவல்துறையும் முயற்சிகளை மேற்கொள்கிறது. சிலர் தோல்வியடைந்துவிட, அந்தப் பணிக்கு புதிதாகச் சேர்கிறார் பன்வீர் சிங் ஷெகாவத். செம்மரக் கடத்தல் தொழிலில் உருவாகும் எதிரிகளையும் புதிதாக வரும் காவல்துறை அதிகாரிகளையும் புஷ்பா எப்படி எதிர்கொள்கிறார் என்பதில் ஒரு பகுதி கதையோடு இந்தப் படம் முடிவுக்கு வருகிறது.
ஒரு சிறிய கிராஃபிக்ஸ் குறும்படத்துடன், படத்தின் துவக்கம் அட்டகாசமாக இருக்கிறது. அதுவும் செம்மரக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்ட படம் என்று புரிந்ததும் அந்த சுவாரஸ்யம் இன்னும் அதிகரிக்கிறது. ஆனால், நேரம் செல்லச்செல்ல தெலுங்கு சினிமாக்களுக்கே உரிய மசாலா அம்சங்களை மட்டுமே நம்பி படத்தை நகர்த்திச் செல்ல ஆரம்பிக்கிறார் சுகுமார்.
 
சாதாரண தொழிலாளியாக இருக்கும் புஷ்பா, முதல் முறை வில்லன்களை முறைத்துக்கொள்ளும்போதே, கதை எதை நோக்கி நகரும் என்பது எளிதில் புரிந்துவிடுகிறது. அப்படி யூகித்தவர்களுக்கு ஏமாற்றமே அளிக்காத பாதையில் தொடர்ந்து நகர்வது, சிறிது நேரத்திலேயே சோர்வளிக்க ஆரம்பிக்கிறது.
 
படத்தின் இறுதியில் புதிய காவல்துறை அதிகாரியாக ஃபகத் பாசில் நுழையும்போதுதான் படம் மறுபடியும் சூடுபிடிக்கிறது.
 
செம்மரக் கடத்தல் தொடர்பான படம் என்றாலும், அது நிஜமாகவே வெட்டப்படுவது, கடத்தப்படுவது குறித்துக் காட்ட இயக்குனர் பெரிதாக மெனக்கெடவில்லை.
 
'வைகுண்டபுரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான அல்லு அர்ஜுனுக்கு இந்தப் படத்தில் கிட்டத்தட்ட சூப்பர் ஹீரோ பாத்திரம். யார் எதிர்த்து நின்றாலும் துவம்சம் செய்துவிடுகிறார். வழக்கமாக திரைப்படங்களில் மோட்டர் பைக்குகள், டாடா சூமோ வாகனங்கள் பறக்கும். இந்தப் படத்தில் லாரியைப் பறக்க வைக்கிறார் அல்லு அர்ஜுன். சண்டைக் காட்சிகள் மட்டுமல்லாது, மற்ற காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார்.
 
அல்லு அர்ஜுனுக்கு தமிழில் குரல் கொடுக்கும்போது, குரல் கொடுத்தவர் நாக்கில் காயம் இருப்பது போன்ற சாயலிலேயே பேசுகிறார். இதனால், பல தருணங்களில் அவர் பேசுவதைப் புரிந்துகொள்ள கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.
 
நாயகி ராஷ்மிகா மந்தனாவுக்கு வழக்கமான நாயகி வேடம். தன்னைத் துரத்தித் துரத்தி தொந்தரவு செய்யும் நாயகனுக்கு ஒரு பாடலுக்குப் பிறகு கழுத்தை நீட்ட வேண்டிய கட்டாயம். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆனால், கொஞ்சம் சீக்கிரம் அதைச் செய்திருக்கலாம்.
 
முதலில் ஒரே பாகமாக எடுக்கத் திட்டமிடப்பட்டு, பிறகு இரண்டு பாகங்களாக்கப்பட்டது படத்தின் திரைக்கதையில் தெளிவாகத் தெரிகிறது. படத்தின் நீளத்தை அதிகரிப்பதற்காக படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள், ஒவ்வொருவருக்கும் பின்னணிக் கதைகள், மிக மிக நீளமான சண்டைக் காட்சிகள் என மூன்ற மணி நேரம் ஓடுகிறது படம்.
 
ஓ சொல்றியா...
 
தேவி ஸ்ரீ பிரசாதின் இசையில் 'சாமி... சாமி', 'ஓ சொல்றியா' பாடலும் ஏற்கனவே பிரபலமாகிவிட்டன. திரையில் பார்க்கும்போது 'சாமி சாமி' பாடலே மனதில் நிற்கிறது.
 
படத்தில் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருபபது மிரோஸ்லா குபா ப்ரோசெக்கின் ஒளிப்பதிவு. காடுகள், சண்டைக் காட்சிகள், பாடல்கள் என பிரமிக்க வைத்திருக்கிறார் மிரோஸ்லா.
புஷ்பா படத்தின் இந்த முதல் பாகத்தைப் பொறுத்தவரை, படம் உருவாக்கிய எதிர்பார்ப்பு படத்தின் மத்தியில் சலிப்பாக மாறிவிடுகிறது. ஃபஹத் பாசிலின் அறிமுகத்திற்குப் பிறகு வரும் காட்சிகள் இந்த சலிப்பைப் போக்கி மீண்டும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. இரண்டாம் பாகத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.