1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 2 மார்ச் 2021 (14:43 IST)

பிரசாந்த் கிஷோருக்கு ரூ.1 சம்பளம்: பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக நியமனம்!

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு 2022ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் அமரிந்தர் சிங்கின் ஆலோகராக பிரபல சமூக ஊடக அரசியல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு முதல்வரின் மூத்த ஆலோசகர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பான தகவலை தனது ட்விட்டர் பக்கம் மூலம் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் வெளியிட்டிருக்கிறார். அதில், "எனது முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இணைகிறார். பஞ்சாப் மக்களின் நலன்களுக்காக அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன்," என அமரிந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய அரசியல் உலகில் கடந்த 10 ஆண்டுகளாக நிழலுலகில் முக்கிய கட்சிகளின் சமூக ஊடகங்கள் மற்றும் உத்திகள் வகுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவராக பிரசாந்த் கிஷோர் அறியப்படுகிறார். காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவரது தொழில்முறை சேவையை தொடர்ந்து பெற்று வருகின்றன.
 
இதற்கு முன்பு, 2017ஆம் ஆண்டில் நடந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலின் போதும், அம்ரீந்தர் சிங்குடன் சேர்ந்து பிரசாந்த் கிஷோர் பணியாற்றியிருக்கிறார். அதில் 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையில் 77 இடங்கள் காங்கிரஸுக்கு கிடைத்தன.
 
பிரசாந்த் கிஷோ்ர ஐ-பிஏசி எனப்படும் இந்திய பொலிட்டிக்கல் ஆக்ஷன் கமிட்டி என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தான் பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் உத்திகள் செயலாக்க பணியில் கவனம் செலுத்தி வருகிறது.
 
இந்த நிலையில், பிரசாந்த் கிஷோருடனான பஞ்சாப் முதல்வரின் ஆலோசகர் என்ற முறையில் பிரசாந்த் கிஷோருக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம், அவருக்கு அரசு வழங்கும் சலுகைகள் போன்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.
 
அதன்படி, மாதம் ரூ. 1 என்ற அளவில் பிரசாந்த் கிஷோருக்கு பெயரில் கெளரவ சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவருக்கான பதவி, மாநில கேபினட் அமைச்சருக்கு இணையானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இதன்படி, பிரசாந்த் கிஷோரின் புதிய அரசு பதவி, அம்மாநில முதல்வரின் பதவிக்காலத்துடன் ஒட்டியதாக இருக்கும். அவருக்கு ஒரு தனிச்செயலாளர், ஒரு கணினி தட்டச்சு ஊழியர், ஒரு குமாஸ்தா, இரண்டு பியூன்கள் நியமிக்கப்படுவர்.
 
இவை மட்டுமின்றி, கேபினட் அமைச்சருக்கு வழங்கப்படும் முழு வசதிகள் கொண்ட அரசு குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகம், வீட்டில் தரைவழி தொலைபேசி, வரம்பில்லா செல்போன் வசதி, தன்னிச்சையான தொலைநகல் இணைப்புகள் வழங்கப்படும். அவரது போக்குவரத்து வசதிக்கான வாகனத்தை மாநில போக்குவரத்து ஆணையர் வழங்குவார். 
 
ரயில் மற்றும் விமானத்தில் கேபினட் அமைச்சருக்கு இணையான உயர் வகுப்பு இருக்கை வசதி, மருத்துவ செலவீனத்துக்காக மாதம் ரூ. 5000 மற்றும் கேபினட் அமைச்சருக்கு இருப்பது போன்ற மருத்துவ செலவின தொகையை திரும்பப் பெறும் வசதி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.