செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (15:06 IST)

கர்நாடகாவில் முஸ்லிம் மாணவரை பயங்கரவாதி கசாப்புடன் ஒப்பிட்ட பேராசிரியர்!!

கர்நாடகாவில் உள்ள கல்லூரி பேராசிரியர் ஒருவர், முஸ்லிம் மாணவர் ஒருவரின் பெயரை பயங்கரவாதியின் பெயரோடு ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறி, அந்தப் பேராசிரியர் வகுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


பேராசிரியரின் கருத்துக்கு ஒரு மாணவர் எதிர்ப்பு தெரிவிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் திங்கட்கிழமையன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பேராசிரியரின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடுப்பி மாவட்டத்திலுள்ள மணிபால் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் பேராசிரியர், ஒரு மாணவரிடம் பெயரைக் கேட்டதாகவும் அதைக் கேட்டதும், “ஓ! நீ என்ன கசாப் மாதிரியா!” என்று கூறியதாகவும் என்.டி.டி.வி செய்தி சேனல் தெரிவித்துள்ளது.

யார் இந்த அஜ்மல் கசாப்?
மும்பையில் 2008ஆம் ஆண்டு மும்பை 26ஆம் தேதியன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து பிழைத்த ஒரே துப்பாக்கிதாரி அஜ்மல் கசாப். அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு 2012இல் தூக்கிலிடப்பட்டார்.

மும்பையை 60 மணிநேரம் முற்றுகையிட்டு, ஒரு முக்கிய ரயில் நிலையம், சொகுசு விடுதிகள், யூத கலாசார மையம் ஆகியவற்றைத் தாக்கிய பாகிஸ்தானிய தாக்குதல் குழுவில் கசாப்பும் ஒருவர். இந்தத் தாக்குதலில் பல போலீசார் உட்பட சுமார் 166 பேர் கொல்லப்பட்டனர். இணையத்தில் பகிரப்பட்ட 45 வினாடி காணொளியில், மாணவர் தனது பெயரை கசாப் பெயருடன் ஒப்பிடுவது “வேடிக்கையானதாக இல்லை” என்று பேராசிரியரிடம் கூறுவதைக் கேட்க முடிகிறது.

“இந்த நாட்டில் ஓர் இஸ்லாமியராக இருந்து, இதையெல்லாம் தினமும் எதிர்கொள்வது வேடிக்கையானது இல்லை,” என்றும் அவர் கூறுகிறார். பேராசிரியர் மன்னிப்பு கேட்பதும் “நீ என் மகனைப் போன்றவன்” என்று சொல்வதும் கேட்கிறது. ஆனால், அவருடைய மன்னிப்பு அந்த மாணவரைச் சமாதானப்படுத்தவில்லை. மன்னிப்பு “நீங்கள் சிந்திக்கும் விதத்தை மாற்றாது” என்று அந்த மாணவர் கூறுகிறார்.

பல ட்விட்டர் பயனர்கள் பேராசிரியரின் வார்த்தைகளைக் கண்டித்தனர். அவருடைய வார்த்தைகள் பாகுபாடு நிறைந்திருந்தாகக் கூறினர். மேலும், இந்தியாவின் சிறுபான்மை இஸ்லாமியர்கள் வழக்கமாக எதிர்கொள்ளும் இத்தகைய விஷயங்களை முன்னிலைப்படுத்தினர்.

2014 முதல் ஆட்சியிலிருக்கும் பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கத்தின் கீழ், நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இந்த விஷயங்களைக் கண்காணிப்போர் கூறுகின்றனர். மற்ற பயனர்கள் வகுப்பில் இது நடந்தபோது தனக்காகக் குரல் கொடுத்து நின்ற மாணவரைப் பாராட்டினர்.

கல்லூரி நிர்வாகம் திங்கட்கிழமையன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், இதுகுறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் பேராசிரியர் “விசாரணை முடியும் வரை அவர் வகுப்புகளை எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது,” என்றும் கூறியது.

வளாகத்திலுள்ள பன்முகத்தன்மையில் பெருமை கொள்வதாகவும், “சாதி, மதம், பிராந்தியம், பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல்” அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் அது கூறியது.

பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் ஸ்க்ரோல் செய்தி இணையதளத்திடம், “இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, நிறுவனம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது” என்று கூறினார்.