திங்கள், 13 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2026 (20:13 IST)

ஆகாஷ் விவகாரம்!.. ஆறு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்!..

akash
சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் காவல்துறை அதிகாரிகள் ஒரு வழக்கில் ஆகாஷ் என்கிற வாலிபரை கைது செய்தனர். அதன்பின், பாலத்திலிருந்து ஆகாஷ் கீழே விழுந்ததால் அவரின் கால் உடைந்ததாக சொல்லி போலீசார் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார். ஆனால், போலீசார் தாக்கியதில்தான் ஆகாஷ் உயிரிழந்தார் என குற்றம்சாட்டிய ஆகாஷின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒருபக்கம், ஆகாஷின் வாக்குமூலம் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது. ‘சீருடை அணியாத சில போலீஸ் அதிகாரிகள் துணியால் என் கண்களைக் கட்டி ஒரு இடத்திற்கு அழைத்து சென்று என் கெண்டைக்காலுக்கு கீழேயும் முட்டிக்கு கீழேயும் இரண்டு கற்களை வைத்து ஈர சாக்கை காலுக்கு மேல் போட்டு இரும்பு கம்பியில் எனது வலது காலில் ஓங்கி அடித்தார்கள்..

இதனால் என் கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. நான் வலியால் துடித்தேன். அதன்பின் என்னை மானா மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரிடம் ‘பாலத்திலிருந்து கீழே விழுந்து விட்டதாக சொல்லுமாறு போலீசார் என்னை மிரட்டினார்கள்’ என அந்த வாக்குமூலத்தில் ஆகாஷ் கூறியிருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில், ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஆகாஷின் உடல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்து. ஆகாஷின் உடலில் 28 இடங்களில் காயம் இருந்தததாகவும், மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஆகாஷின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினரும், உறவினர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து மானாமதுரை ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் திலீபன், எஸ்.ஐ குகன், காவலர்கள் தெய்வேந்திரன், சரத்குமார், மனோகரன், காளீஸ்வரன் ஆகியோர் ராமாநாதபுரம் டிஐஜி உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.