சிபிஐ விசாரணை!.. டெல்லி செல்லும் விஜய் அமித்ஷாவை சந்திப்பாரா?...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் 27ம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூருக்கு சென்றபோது அவரைக்காண பல ஆயிரம் பேர் கூடியிருந்தனர்.. விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. ஏற்கனவே ஜனவரி மாதம் 12 மற்றும் 19ம் தேதிகளில் தவெக தலைவர் விஜய் டெல்லி சென்று சிபிஐ விசாரணையில் கலந்துகொண்டார்.
இந்நிலையில்தான் இந்த மாதம் 10ம் தேதி மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், விஜய் தரப்பில் பணிகள் காரணமாக வேறு தேதி கேட்கப்பட்டது. அதோடு, சென்னையில் உள்ள அலுவலகத்திலேயே ஆஜராகிறேன் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 15ஆம் தேதி டெல்லியில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது, அதையேற்று இன்று மதியம் விஜய் டெல்லி செல்லவிருக்கிறார். நாளை அவர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவிருக்கிறார்..
இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைவதாக நேற்று மதியம் முதலே செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்காக கூட்டணி அமைக்கலாமா என தவெக கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது. நேற்று மதியம் 12:30 மணியளவில் காணொளி மேலும் மாவட்ட செயலாளருடன் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தினார். திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் நாம் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவதுதான் நல்லது என பெரும்பாலான நிர்வாகிகள் சொன்னதாக தெரிகிறது..
எனவே டெல்லி செல்லும் விஜய் அமித்ஷாவை சந்தித்து பேசுவாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில் எப்படியாவது விஜயை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வரும் முயற்சியில் அமித்ஷா இறங்கியிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது..