செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (13:38 IST)

ஆபாசக் காணொளிகளை நீக்கிய பார்ன்ஹப் இணையதளம் - பாலியல் துன்புறுத்தல், வண்புணர்வு காணொளிகள்

பிரபல ஆபாசப்பட வலைதளமான பார்ன்ஹப், பயனர்களால் பதிவேற்றப்பட்ட பல காணொளிகளை, தன் வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது.

பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வண்புணர்வு தொடர்பான காணொளி பதிவுகள் பார்ன்ஹப்பில் கூடுதலாக இருப்பதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியானதற்கு, பார்ன்ஹப் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

பார்ன்ஹப் ஒரு பிரபலமான ஆபாசப்பட வலைதளம். இந்த வலைதளத்தில் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது & பாலியல் வண்புணர்வு போன்ற காணொளிகள் பதிவேற்றப்பட்டு இருந்தன.

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு செய்தி, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட காணொளிகள், பார்ன் ஹப்பில் அதிகமாக இருந்ததைக் சுட்டிக் காட்டியது. அதோடு இந்த மாதிரியான காணொளிகள் சட்ட விரோதமானது எனவும் கூறியது.

பார்ன்ஹப் வலைதளத்தில், "குறைந்த வயது பெண்கள்" எனத் தேடினால் எப்படி ஆயிரக் கணக்கான காணொளி பதிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறது என்பதை நிகோலஸ் க்ரிஸ்டோஃப் என்பவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு, பாலியல் வண்புணர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் காணொளி பதிவுகளும், பார்ன்ஹப்பில் இருந்ததைக் கண்டுபிடித்தார்.

உதாரணத்துக்கு, ஒரு பெண், 14 வயதில் பாலியல் ரீதியாக வன்புணரப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளி பதிவுகளை, பார்ன்ஹப் வலைதளத்தில் இருந்ததை, அந்தப் பெண்ணே கண்டுபிடித்தார்.

வங்கிகள், தேடுபொறி நிறுவனங்கள், பணப்பரிமாற்ற நிறுவனங்கள் ஏன் பார்ன்ஹப்புக்கு ஆதரவாக இருக்கின்றன எனவும் கேள்வி எழுப்பினார் க்ரிஸ்டோஃப். அதில் மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்.

மாஸ்டர் கார்ட் விரைவில், பார்ன்ஹப் உடனிருந்து துண்டித்துக் கொள்ளும் எனக் கூறியிருக்கிறது. அதோடு இந்த விவகாரத்தில் ஒரு விசாரணையையும் தொடங்கி இருக்கிறது. விசா நிறுவனமும் பார்ன்ஹப் விவகாரத்தில் ஒரு விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில், பார்ன்ஹப், தன்னுடைய வலைதளத்தில், சரிபார்க்கப்படாமல் பதிவேற்றப்பட்டிருந்த பெரும்பாலான காணொளிகள் அனைத்தையும் நீக்கி இருக்கிறது.

உண்மையில், இந்த ஆபாச வலைதளத்தில், பெரும்பாலான காணொளிகள், சரிபார்க்கப்படாத உறுப்பினர்களால்தான் பதிவேற்றப்பட்டு இருந்தன.

அவைகள் தற்போது முழுமையாக நீக்கப்படவில்லை. வலைதளத்துக்கு வரும் பார்வையாளர்கள் பார்க்க முடியாதவாறு வைக்கப்பட்டு இருக்கிறது.

இனி, பார்ன்ஹப் வலைதளத்தில், பதிவு செய்தவர்கள் மற்றும் காணொளிகளை வழங்க ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள், அந்த காணொளிகளில் நடித்திருப்பவர்கள் மட்டுமே காணொளிகளைப் பதிவேற்ற முடியும்.

வழக்கமாக தங்கள் வலைதளத்தைப் பயன்படுத்தும், பயனர்களை சரிபார்க்கும் முறையை, அடுத்த வருடத்தில் இருந்து கொண்டு வர இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறது பார்ன்ஹப்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கை, மற்ற எந்த சமூக வலைதளங்களில் எடுக்கப்படுவதை விடவும் கடுமையான நடவடிக்கை என்கிறது பார்ன்ஹப்.

அதாவது இனி பார்ன்ஹப் வலைதளத்தில், சரிபார்க்கப்பட்டவர்களால் மட்டுமே ஒரு வீடியோவைப் பதிவிட முடியும். இதை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், ஸ்னாப்சாட் போன்ற எந்த சமூக வலைதளங்களும் கொண்டு வரவில்லை என்கிறது பார்ன்ஹப்.

இந்த நடவடிக்கைக்குப் பிறகு, ஆபாசப்படங்களை முழுமையாக தடை செய்ய விரும்பும் சில அமைப்புகள், தங்களை இலக்கு வைத்து தாக்குவதாகக் கூறியிருக்கிறது ஆபாசப்பட வலைதளமான பார்ன்ஹப்.

பார்னஹப்பின் கொள்கைகள் அடிப்படையில் தாக்கப்படவில்லை, பார்ன்ஹப் ஆபாசப்படங்களை ஒளிபரப்பும் ஒரு வலைதள நிறுவனம் என்பதாலேயே தாக்கப்படுகிறது என்கிறது பார்ன்ஹப் தரப்பு.

பார்ன்ஹப்பின் தாய் நிறுவனமான மைண்ட்கீக், இதற்கு முன், இது உண்மை அல்ல எனக் கூறி வந்தது.

கடந்த 2019-ம் ஆண்டில் மொத்தம் 4200 கோடி முறை பார்ன்ஹப் வலைதளத்துக்கு அதன் பயனர்கள் வந்திருக்கிறார்கள். 6.83 மில்லியன் காணொளி பதிவுகள் பதிவேற்றப்பட்டன. 169 ஆண்டுக்கு நிகரான நேரத்துக்கு காணொளிகளைப் பார்த்து இருக்கிறார்கள் என பார்ன்ஹப் கூறியது.

ஆனால் எத்தனை பேர் பார்ன்ஹப் நிறுவனத்தில் மதிப்பீட்டாளராக பணியாற்றுகிறார்கள் என்பதைக் குறித்த விவரங்கள் இல்லை.