1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (15:29 IST)

கமல்ஹாசன் பேட்டி: நான் யாருடைய பி அணி தெரியுமா?

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று மீண்டும் தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்.

சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை "சீரமைப்போம் தமிழகம்" என்ற பெயரில் நேற்று தொடங்கிய கமல்ஹாசன், இன்று மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் தொழிலதிபர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கமல்ஹாசன்.

"ஆளும் கட்சியினருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. எங்களுக்கு ஆதரவு பெருகும் என்பதால் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்துள்ளானர்" என்று கமல் கூறினார்.

"சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன். மதுரை எனக்கு நெருக்கமான ஊர் என்பதால் இங்கு பிரசாரத்தை தொடங்குனேன். சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன்" என்று அவர் தெரிவித்தார்.

ரஜினியிடம் பாஜகவினர் கால்ஷீட் வாங்கியுள்ளதாக சிலர் கூறுவது பற்றிய கேள்விக்கு "பாஜக ரஜினியை வைத்து சினிமா எடுப்பதற்காக வேண்டுமானால் கால்ஷீட் வாங்கியிருப்பார்கள்" என்று கமல் பதில் அளித்தார்.

"நான் நாத்திகாவதி அல்ல பகுத்தறிவுவாதி. அதேசமயம், மக்களின் நம்பிக்கைக்கு எதிராக நான் இருக்கமாட்டேன். நாத்திகவாதி என்ற பட்டத்தை நான் ஏற்றுக்கொள்வதே கிடையாது. ஏனென்றால் அது ஆத்திகர்கள் கொடுத்த பட்டம். பகுத்தறிவுவாதி என்பதே சரி. பகுத்து அறிந்து புரிந்துகொண்டால் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிடும். தனிமனிதனாக என்னுடைய கருத்துகள், மக்களுக்கு செய்ய வேண்டிய தொண்டை எந்த விதத்திலும் குறைத்துவிடாது," என்றார் கமல்ஹாசன்

"விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையில் வேளாண் சட்டங்கள் இருப்பதாக அவர்கள் கருதுவதால் டெல்லியில் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும்" என்று கமல் தெரிவித்தார்.

"இந்தியாவில் விவசாயிகள் பட்டினியால் இருக்கும்போது சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டியது அவசியம்தானா" என்றும் கமல் கேள்வி எழுப்பினார்.

நடிகர் என்பதால் கமலுக்கு கூட்டம் கூடுகிறது என்ற தமிழக அமைச்சர் வெளியிட்ட கருத்துக் பதிலளித்த அவர், "எம்.ஜி.ஆரும் நானும் நடிகர்கள் தான். நான் ஒரு நடிகர் என்பதைத்தாண்டி என்னை மக்கள் பார்க்க வருகிறார்கள், அமைச்சர்கள் என்னுடைய கூட்டத்தை பார்த்து தூக்கம் வராத நிலையில் உள்ளனர், எங்களை யார் என கேட்டவர்கள் தற்போது எங்களின் வெற்றி குறித்து கணக்கு எடுத்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

"நாங்கள் அரசியலுக்கு வந்ததே ஆள்வதற்குதான். அதற்காக தான் அரசியலுக்கு வந்துள்ளோம். லட்சியத்தை நோக்கிய பயணமாக எங்களுடைய அரசியல் இருக்க வேண்டும், லஞ்சமற்ற அரசாக ஆளுகை இருக்க வேண்டும். கீழ்மட்டத்தை போல மேல்மட்டத்தில் உள்ளவர்களிடத்திலும் லஞ்சம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்" என்று கமல் கூறினார்.

தற்போது பல அரசியல்வாதிகளும் எம்.ஜி.ஆரை தங்களுடைய பிரசாரத்தில் முன்னெடுப்பது பற்றி குறிப்பிட்ட கமல், எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் தான். நான் கமல் தான். நான் பதவி ஏற்றால் எம்.ஜிஆர் பெயரை சொல்லித்தான் பதவியேற்பேன். மநீம என்பது சாமானிய மக்களின் கட்சி இல்லை என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்குகிறார்கள். என்னை கார்பரேட்டுகள் இயக்குவதாக சிலர் கூறலாம். ஆனால், தனியார் தொலைக்காட்சி என்னை வைத்து இயக்குவது பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டும் தான். கார்ப்பரேட் நிறுவனங்கள் முற்றிலும் கூடாது என்பது மடமை என்று கமல் தெரிவித்தார்.

சினிமாவில் நானும் ரஜினியும் போட்டியாளர்கள் அல்ல, மக்கள் தான் எங்களை கொலு பொம்மை போல ஆக்கினர். எங்கள் இருவருக்கும் தனி தனி வழி தான் எப்போதும் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த கமல் குறிப்பிட்டார்.

ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும். வரும் 31-ம் தேதி ரஜினி கட்சி அறிவிப்பு வரும் வரை பொறுத்திருங்கள் என்று கமல் குறிப்பிட்டார்.

மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க கோருவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "மதுரையின் சுற்றுசூழல் மாசுபட்டுவருகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் நல்லதுக்கான அனைத்திலும் மநீம கையெழுத்திடும்" என்று கமல் பதிலளித்தார்.

கமல் யாருடைய B அணியும் அல்ல. நான் காந்தியாரின் B டீம் தான் என்று கமல் தெரிவித்தார்.