இஸ்ரேலின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் 'தி வயர்', பிரிட்டனின் 'தி கார்டியன்', அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' உள்பட பல சர்வதேச ஊடகங்களில் இந்தப் புலனாய்வுச் செய்தி இந்திய நேரப்படி நேற்று (ஞாயிறு) இரவு 10 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்பைவேர் என்பது ஒருவருக்குத் தெரியாமல் அவரை வேவு பார்க்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் ஆகும்.
ஆனால், 'அடையாளம் வெளியிடப்படாத' வட்டாரங்கள் அளித்துள்ள இந்தத் தரவுகள் உண்மையில் இருந்து வெகுதூரம் உள்ளது என்கிறது பெகாஸஸ் மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ.
பெகாசஸ் என்ற ஸ்பைவேரை உருவாக்கிய என்எஸ்ஓ எனும் இஸ்ரேலிய நிறுவனத்தால் உலகெங்கிலும் கண்காணிப்புக்கு உட்பட்டதாகக் கருதப்படும் 50,000 தொலைபேசி எண்களின் பட்டியல் கசிந்துள்ளது. இந்த பட்டியல் குறித்து பிரான்ஸைச் சேர்ந்த லாபநோக்கற்ற ஊடக நிறுவனமான `ஃபார்பிட்டன் ஸ்டோரிஸ்` புலனாய்வு செய்து செய்தியை வெளியிட்டது.
உலகெங்கிலும் உள்ள சமூக உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் செல்போன் இஸ்ரேலின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டு, அவர்களின் தகவல்கள் அரசிடம் விற்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் உட்பட பலர் அடங்கியுள்ளனர் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
21 நாடுகளைச் சேர்ந்த 200 பத்திரிகையாளர்கள் கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளனர்.
பெகாசஸ் ஸ்பைவேர் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களைக் கண்காணித்து, அதில் இருக்கும் மேசேஜ்கள், மின்னஞ்சல்கள், தொலைப்பேசி அழைப்புகள் ஆகியவற்றை உளவு பார்த்து ஒட்டு கேட்கிறது. மேலும் தாக்குதலுக்கு உள்ளான மொபைலின் மைக்ரோபோன்களையும் இதனால் ரகசியமாக இயக்க முடியும் என்கிறது ஃபார்பிட்டன் ஸ்டோரிஸ்.
என்எஸ்ஓ அளிக்கும் பதில் என்ன?
இந்த பட்டியல் எங்கிருந்து வெளியானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தங்கள் நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.
இந்தத் தரவுகள் எங்கள் நிறுவனத்தின் 'சர்வர்களில்' இருந்து கசிந்தது என்பதே நகைப்புக்குரியது. ஏனெனில் இந்தத் தரவுகள் எங்கள் கணினிகளின் சர்வகளில் சேமித்து வைக்கப்படவே இல்லை என்கிறது என்எஸ்ஓ.
பெகாசஸ் மென்பொருள் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இது நல்ல மனித உரிமை பதிவுகளைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவம், சட்ட அமலாக்க மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் என்எஸ்ஓ கூறியுள்ளது.
ஃபார்பிட்டன் ஸ்டோரீஸ் வெளியிட்டுள்ள செய்திகள் முற்றிலும் தவறான அனுமானங்கள் மற்றும் உண்மையுடன் பொருந்தாத கோட்பாடுகளுடனும் உள்ளன. அவர்களுக்கு தகவல் வழங்கியவர்களின் நம்பகத்தன்மை மற்றும் நோக்கம் குறித்து ஐயங்கள் எழுகின்றன.
இந்தச் செய்தியில் உள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம். அவதூறு வழக்கு தொடர்வது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம் என்கிறது என்எஸ்ஓ.
குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் குழுக்களை கண்டுபிடிக்கவும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களைக் கண்டுபிடிக்கவும், காணாமல் போன மற்றும் கடத்தப்படும் குழந்தைகளைக் கண்டுபிடிக்கவும், இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களைக் கண்டுபிடிக்கவும், ட்ரோன்களிடம் இருந்து வான் பரப்புகளைப் பாதுகாக்கவும் எங்கள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்றும் என்எஸ்ஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேவு பார்க்கப்பட்ட்ட இந்தியர்கள் யார்?
இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோதியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள் மற்றும் பல தொழிலதிபர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக 'தி வயர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, நெட்வர்க் 18, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற செய்தி நிறுவனங்களின் பணியாற்றும் முன்னணி பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டதாக தி வயர் கூறுகிறது.
இதுதவிர ஏஃப்பி, சிஎன்என், தி நியூயார்க் டைம்ஸ், அல் ஜசீரா உள்ளிட்ட பல சர்வதேச செய்தி நிறுவனங்களின் பணியாற்றும் செய்தியாளர்களின் செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது.
``உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆதரவாளர்கள் இந்த கண்காணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர், உலகம் முழுவதும் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை இது காட்டுகிறது" என்று ஃபார்பிட்டன் ஸ்டோரிஸின் நிறுவனர் லாரன் ரிச்சர்ட், பிபிசியின் ஷாஷாங்க் சவுகானிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார்.
கண்காணிப்புக்கு உள்ளானவர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பெகாசஸ் மூலம் 1,400 மொபைல் போன்களில் சைபர் தாக்குதல் நடத்தியதாகக் கடந்த 2019-ம் ஆண்டு என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக வாட்ஸ்ஆப் வழக்கு தொடர்ந்தது.
அந்த நேரத்தில், என்எஸ்ஓ எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்தது, ஆனால் அந்த நிறுவனம் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.