புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஜூலை 2021 (14:44 IST)

'அமித் ஷா வருகிறார்; கதவுகளை மூடி வையுங்கள்' - கடிதம் எழுதிய குஜராத் காவல்துறை

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்ததை ஒட்டி அங்குள்ள காவல் நிலையம் ஒன்றில் இருந்து, அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளின் கதவுகளை மூடி வைக்க வேண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சனிக்கிழமை தொடங்கி அமித் ஷா மூன்று நாள் சுற்றுப்பயணமாக அவரது சொந்த மாநிலமாக குஜராத் சென்றுள்ளார். அவர் பல அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இதையொட்டி அகமதாபாத்தில் உள்ள வெஜல்பூர் காவல் நிலையத்தில் இருந்து , அப்பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளின் குடியிருப்போர் சங்கங்களின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

அதில் ஞாயிறு (11/07/2021) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல் கதவுகளை மூடி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதுமட்டுமில்லாமல், காவல் துறையினர் தங்கள் வீடுகளுக்கே வந்து, குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் வீடுகளின் கதவுகளை மூடி வைத்திருக்க வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறித்தியதாகக் கூறுகின்றனர்.

09/07/2021 என்று தேதியிடப்பட்ட அந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியானபின், வெஜல்பூர் காவல் நிலைய ஆய்வாளர் எல்.டி. ஒதேரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

"வெஜல்பூரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு சமுதாயக் கூடத்தைத் திறந்து வைக்க உள்ளார். அதைச் சுற்றியுள்ள பகுதியில் மட்டுமே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள கதவுகளைத் திறக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தோம். இது அறிவுறுத்தல் அல்ல; பொது மக்களிடம் காவல்துறை முன்வைத்த வேண்டுகோள், " என்று அவர் கூறியுள்ளார்.

"இது பாதுகாப்பு காரணங்களுக்காக செய்யப்பட்டது. அப்பகுதியில் பல உயரமான கட்டடங்கள் உள்ளன. அனைத்துக் கட்டடங்களையும் கண்காணிப்பது காவல்துறைக்கு கடினமானது. எனவே அமைச்சர் வரும்போது அனைத்துக் கதவுகளையும் மூடி வைத்திருந்தால், அந்நேரத்தில் திறக்கப்படும் கதவுகளை மட்டும் காவல் பணியில் இருப்பவர்களால் உடனே கண்டறிய முடியும் என்பதால் அவ்வாறு கோரினோம், " என்றும் ஆய்வாளர் எல்.டி. ஒதேரா தெரிவிக்கிறார்.

இதைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமித் ஷாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் இதைச் செய்யவில்லை, இது வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்கிறது காவல்துறை.

இந்தியாவிலேயே உயரிய பாதுகாப்பான 'Z+' பாதுகாப்பு பெற்றுள்ளவர்களில் ஒருவர் அமித் ஷா. இதை யாருக்கு வழங்குவது என்பதையும் அவருக்கு கீழே உள்ள உள்துறை அமைச்சகமே முடிவு செய்கிறது.

இசட் பிளஸ், இசட் , ஒய் , எக்ஸ் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன?

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும் பாதுகாப்பு நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இசட் பிளஸ் பிரிவு, இசட் பிரிவு, ஒய் பிரிவு, எக்ஸ் பிரிவு.

இது தவிர, பிரதமர் பதவி வகிப்போருக்கும் முன்னாள் பிரதமர்களுக்கும் சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்பிஜி) பாதுகாப்பு வழங்கும். 1988இல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு, இந்த சிறப்புப் பாதுகாப்புக்குழு உருவாக்கப்பட்டது.

இந்த படைக்காக ஆண்டுதோறும் ரூ. 300 கோடிவரை பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. இந்தியாவிலேயே மிகவும் தொழில்சார்ந்த முறையில் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பயிற்சி பெற்ற வீரர்கள் வரிசையில், எஸ்பிஜி பாதுகாவலர்கள் முன்னோடியாக உள்ளனர்.

பெரும்பாலும் இசட் பிளஸ் பிரிவு மற்றும் இசட் பிரிவு பாதுகாப்பு, உயிருக்கு நேரடி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

இசட் பிரிவு பாதுகாப்புப் பணியை மத்திய படைகளான தேசிய பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப்படை, இந்தோ திபெத்திய காவல் படை ஆகியவை வழங்கும்.

இதில் குறைந்தபட்சம் 36 வீரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள். சில இடங்களில் மாநில அரசுகளே அவற்றின் ஆயுதப்படையினர் அல்லது கமாண்டோ படை வீரர்கள் மூலம் மத்திய அரசு வழங்கும் இசட் பிளஸ் அல்லது இசட் பிரிவுக்கு நிகரான பாதுகாப்பை மிக முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கும்.

ஒய் பிரிவு பாதுகாப்பு பெறுவோருக்கு அதிகபட்சமாக 11 பேர் கொண்ட அணி பாதுகாப்பு வழங்கும். இதில் இரண்டு தனி பாதுகாவலர்கள் அடங்குவர். குறிப்பிட்ட நபருக்கு இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலத்தில் அச்சுறுத்தல் நிலவினால் அங்கு அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.

எக்ஸ் பிரிவு பாதுகாப்பு, மாநில அமைச்சர்கள், உயர் பொறுப்புகளில் பாதுகாப்பு அவசியம் தேவைப்படும் பணியை மேற்கொள்ளும் அதிகாரிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாநில அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திரைப்பட நடிகர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும்.

மத்திய படை வழங்கும் பாதுகாப்புக்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான பாதுகாப்பு ஆய்வுக்குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து யாருக்கெல்லாம் மத்திய பாதுகாப்பு வழங்கலாம், யாருக்கு பாதுகாப்பை விலக்கலாம் என்பதை தீர்மானிக்கும். இந்திய உளவுத்துறை அளிக்கும் அறிக்கை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படும்.

மாநில அளவிலான பாதுகாப்பு, மாநில உள்துறைச் செயலாளர், டிஜிபி, காவல் ஆணையர் தலைமையிலான குழு மூலம் தீர்மானிக்கப்படும்.