புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (13:29 IST)

குறைவாக இறைச்சி சாப்பிடச் சொன்ன ஸ்பெயின் அமைச்சர்: கோபமடைந்த அரசியல்வாதிகள்

குறைவாக இறைச்சி சாப்பிட்டால் நீடித்து வாழ முடியும் என்று கூறிய ஸ்பெயின் நாட்டு அமைச்சரை அவரது கூட்டணிக் கட்சியினரே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஸ்பெயின் நாட்டு மக்களு குறைவாக இறைச்சி சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தும் வகையிலான ஒரு பரப்புரையை அந்நாட்டின் நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சர் ஆல்பர்ட்டோ கார்ஸோன் இந்த வாரம் தொடங்கினார்.

"அதிக அளவு இறைச்சி சாப்பிடுவது நமது உடல் நலத்துக்கும் நாம் வாழும் பூமிக்கும் கேடு" என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோவில் கார்ஸோன் பேசியிருந்தார்.

ஆனால் அமைச்சரின் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என அமைச்சரவை சகாக்களில் சிலரே கூறிவிட்டனர்.

"இத்தகைய பரப்புரை மிகவும் துரதிருஷ்டவசமானது" என்று வேளாண்துறை அமைச்சர் லூயி பிளானஸ் வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விமர்சனம் செய்தார்.

"குறைந்த இறைச்சி, நீண்ட வாழ்க்கை" என்ற பரப்புரை நியாயமற்றது எனக் கூறியிருக்கும் பிளானஸ், ஸ்பெயின் நாட்டின் இறைச்சி வர்த்தகம் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தப் பரப்புரைக்கு இறைச்சி உற்பத்தியாளர்களின் சங்கங்கள் சார்பிலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரப்புரையைக் கண்டித்து அமைச்சர் கோர்ஸோனுக்கு இந்தச் சங்கங்கள் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர்.

நாட்டில் 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும், சுமார் 900 கோடி யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய்) அளவுக்கு வருவாய் தரும் ஒரு துறையை அவமதிக்கும் செயல் இது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அமைச்சர் கோர்ஸான் தன்னுடையை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். தன்னுடையை பரப்புரையை விளக்கி அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

இறைச்சி சாப்பிடுவதை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிடும்படி கூறுவது அமைச்சரின் யோசனையல்ல. மாறாக ஸ்பெயின் நாட்டின் உணவு ஒழுங்குமுறை அமைப்பின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

வாரத்துக்கு 200 கிராம் முதல் 500 கிராம் வரை இறைச்சி சாப்பிடலாம் என ஸ்பெயின் உணவு ஒழுங்குமுறை அமைப்பு பரிந்துரைக்கிறது.

தற்போதைய கணக்கீட்டின்படி ஸ்பெயின் நாட்டு மக்கள் சராசரியாக வாரத்துக்கு ஒரு கிலோ இறைச்சி சாப்பிடுவதாக அமைச்சர் கோர்ஸோன் தமது தொலைக்காட்சி உரையின்போது குறிப்பிட்டார்.

உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?

பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் ஆடு, மாடு, பன்றிகளின் சிவப்பு இறைச்சி ஆகியவற்றை உண்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என பல்வேறு நாடுகளின் சுகாதார அமைப்புகள் கூறுவது உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. சிவிப்பு இறைச்சி அதிகமாக உண்பதால் இதயக் கோளாறு, நீரிழிவு போன்ற நோய்களில் இறப்பு ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாகவும் கருதப்படுகிறது.

இதேபோல் இறைச்சி உற்பத்தித் துறையால் வெளியேற்றப்படும் கழிவுகள் பருவநிலை மாற்றத்துக்கு காரணமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனாலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனிப்பட்ட, பொருளாதார மற்றும் பண்பாட்டுக் காரணங்களுக்காக பெரும்பாலானோரின் உணவுப் பட்டியில் இறைச்சி இடம்பிடித்து விடுகிறது.

ஸ்பெயினில் அமைச்சர் தொடங்கிய இறைச்சிக்கு எதிரான பரப்புரையை அந்நாட்டுப் பிரதமரே ஏற்கவில்லை. அண்மையில் லித்துவேனியாவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் பெட்ரோ சான்செஸ் தாம் மாமிசம் சாப்பிடுவோரை ஆதரிப்பதாகக் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர் "இறைச்சித் துண்டுகளை வேறு எந்த உணவாலும் தோற்கடிக்க முடியாது" கூறினார்.

இறைச்சி தொடர்பான விவாதம் ஸ்பெயின் நாட்டு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளும் கட்சிக்குள்ளும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையேயும் கருத்து வேறுபாடுகளை உருவாக்கி இருக்கிறது.

பிரதமரின் கட்சியைச் சேர்ந்த விவசாயத் துறை அமைச்சர் பிளானஸ் ஸ்பெயினின் கிராமப்புற மக்களிடையே மிகுந்து செல்வாக்குப் பெற்றவர். இவர் இறைச்சி உண்பதை ஆதரிக்கிறார்.

இறைச்சி உண்பதைக் குறைத்துக் கொள்ளுமாறு கூறும் நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சர் இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர். இவருக்கு இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற மக்களிடையே ஆதரவு உள்ளது.

ஸ்பெயினில் மாத்திரமல்ல, அண்டை நாடான பிரான்ஸிலும் மாட்டிறைச்சியை சாப்பிடலாமா கூடாதா என்ற விவாதம் அரசியலின் உயர் நிலைகளில் நீடித்து வருகிறது.
அண்மையில் பள்ளியின் மதிய உணவுப் பட்டியலில் இருந்து நீக்கி லியோன் நகர மேயர் உத்தரவிட்டார். அதற்கு தேசிய அளவில் எதிர்ப்புக் கிளம்பியது. மைய அரசும் அதற்குக் கண்டனம் தெரிவித்தது. பிரான்ஸ் நாட்டின் விவசாயிகளை அவமதிக்கும் செயல் என உள்துறை அமைச்சர் கண்டித்தார்.