1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (13:24 IST)

இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதன் நிதி ஆதாரம் குறித்தும் விளக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி உறுப்பினர்

reserv bank
(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (22/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)
இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான நிதி ஆதாரம் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கமிட்டி உறுப்பினர் அசிமா கோயல் கூறியுள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


மக்களுக்கு இலவசங்களை வழங்கும் நடவடிக்கை குறித்து நாடு முழுவதும் பெரும் விவாதம் நடந்து வருகிறது. இந்த நடைமுறையை பிரதமர் மோதி சமீபத்தில் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கமிட்டி உறுப்பினர் அசிமா கோயல் பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "இலவசங்கள் ஒருபோதும் இலவசமாக வழங்கப்படுவது இல்லை. அதன் தாக்கம் மக்களுக்கு தெரிய வேண்டும். அரசுகள் இலவசங்களை வழங்கும்போது வேறு வழியில் எங்காவது ஒரு செலவு விதிக்கப்படுகிறது. ஆனால் இது திறனை வளர்க்கும் பொது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு செலவாகும்.

பஞ்சாபில் வழங்கப்படும் இலவச மின்சாரம் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வீழ்ச்சி போன்ற பெரிய மறைமுக செலவுகள் ஏற்படுகிறது. இது போன்ற இலவசங்களால் சுகாதாரம், கல்வி, காற்று மற்றும் நீர் ஆகியவற்றின் தரம் குறைந்து ஏழைகளை மிகவும் பாதிக்கிறது.

இலவசங்களை அறிவிக்கும் எதிர்க்கட்சிகள், அவற்றுக்கான நிதி ஆதாரம் குறித்து வாக்காளர்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும். இதன்மூலம் மக்கள் போட்டி வெகுஜன ஈர்ப்பு வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுவது குறையும்" என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை; திமுக மௌனம் சந்தேகம் தருகிறது: டிடிவி தினகரன்

நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் திமுக அரசு மௌனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளதாக, 'இந்து தமிழ் திசை' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. .இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் திமுக அரசு மௌனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.இந்த விசாரணை அறிக்கையில், காவல்துறை அதிகாரிகள் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும், அவர்களை திமுக அரசு காப்பாற்ற முயல்வதாகவும் வெளிவரும் செய்திகள் உண்மையா?காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
ttv dinakaran

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிடுவதுடன், அதில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.திமுக அரசு இதனை செய்யுமா? அல்லது வழக்கம் போல இப்பிரச்னையிலும் இரட்டை வேடம் போடப் போகிறார்களா?" என பதிவிட்டுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

பாடுபட்டு உழைக்கத் தயாரில்லாத அரச உத்தியோகத்தர் தொழிலை விட்டுச் செல்லலாம் - இலங்கை ஜனாதிபதி ரணில்

நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சுமார் 9 அரச உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு பாடுபட வேண்டும்; அவ்வாறு பாடுபட முடியாது எனக் கூறுபவர்கள் வீட்டுக்குச் செல்லலாம். எந்தவொரு வேலைகளிலும் ஈடுபடாதவர்களுக்கு சம்பளத்தை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக, 'வீரகேசரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அநுராதபுர மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டம் நேற்று இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிடுகையில், "கட்சி, இன, மத பேதமின்றி நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த காலப் பாடத்தை ஐக்கிய தேசியக் கட்சி கற்றுத் தந்துள்ளது.

எதிர்காலத்தில் நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே அதன் நோக்கமாகும். ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு நான் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

எனினும் நாட்டை கட்டியெழுப்பும் பணியில் தாமதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

இன்று நாட்டு மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். வரலாற்றில் இத்தகைய அழுத்தம் இருந்ததில்லை. அந்த நிலையிலிருந்து நாம் வெளியேற வேண்டும்.

கீழ் மட்டத்தில் ஏராளமான அரசு அதிகாரிகள் உள்ளனர். ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு சுமார் 9 அரசு அலுவலர்கள் இருப்பதாக நினைக்கிறேன். அவர்கள் கிராம அலுவலர் பிரிவுகளை தொகுதிகளாகப் பிரித்து செயற்பட வேண்டும். அவ்வாறு பாடுபட்டு வேலை செய்ய விரும்புபவர்கள் அதனை செய்யலாம். முடியாதவர்கள் வீட்டுக்குச் செல்லலாம். எந்த வேலைகளையும் செய்யாதிருப்பவர்களுக்கு ஊதியத்தை வழங்கிக் கொண்டிருக்க முடியாது" என தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கோட்டா குறித்து மனம் திறந்தார் மஹிந்த

நாட்டை விட்டு போகலாமா என்று கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் கேட்டிருந்தால், நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.


'சண்டே டைம்ஸ்' பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை வழிநடத்த தான் தேவையா என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தீர்மானிக்க வேண்டும் என்று கூறிய அவர், அதை கட்சி முடிவு செய்யும் என தெரிவித்ததாகவும் தான் ஒரு சட்டத்தரணி என்பதால் நீதிமன்றங்களில் பயிற்சி பெற முடியும் என்றும் தேவைப்பட்டால் செல்வதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

நாட்டின் அனைத்து அவலங்களுக்கும் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பல்ல என்று குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, இதற்கு தானும் முந்தைய அரசாங்கங்கள் உட்பட அனைவரும் பதில் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துரதிருஷ்டவசமாக, தான் நம்பிய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கோட்டா செயல்பட்டார் என்பதால் அவரைக் குறை கூற முடியாது என்றும்

கோட்டா, பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது சிறந்த நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தினார் எனவும் ஜனாதிபதியாக அவர் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளானார் எனவும் மஹிந்த கூறியதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

முன்னர் ஒரு கடும்போக்குவாதியாக இருந்த அவர், மென்மையாக மாறினார் என்றும் அவர் அதைச் செய்திருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்ட அவர், அவர் அரசியல்வாதி அல்ல என தெரிவித்துள்ளார்.