1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (12:39 IST)

சக கைதியை கொன்றதற்காக 15 சிறைவாசிகளுக்கு தூக்கு தண்டனை விதித்த ஜார்கண்ட் நீதிமன்றம்

(இன்றைய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (19/08/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

ஜார்கண்ட் மாநில சிறைச்சாலை ஒன்றில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு கைதி இறந்த வழக்கில், அப்போது கொல்லப்பட்டவருடன் சிறையில் இருந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது அம்மாநில நீதிமன்றம்.

ஜார்கண்ட் கிழக்கு சிங்பும் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜாம்ஷெட்பூர் சிறையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதியன்று கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மனோஜ் குமார் சிங் என்பவரைக் கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியில், "ஜார்கண்டின் கிழக்கு சிங்பும் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜாம்ஷெட்பூரில் காகிதி மத்திய சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இருபிரிவினராகப் பிரிந்து அவர்கள் ஒருவர் மீது ஒருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். இதில் மனோஜ் குமார் சிங் என்ற கைதி உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மனோஜ் குமார் சிங் உயிரிழந்தார்.

இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை, குற்ற சதி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவாகி இருந்தன. இந்த வழக்கு மாவட்ட கூடுதல் நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ராஜேந்திர குமார் சின்கா நேற்று தீர்ப்பளித்தார்.

இதில் குற்றவாளிகள் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 7 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 2 பேர் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களை உடனடியாகக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார் என்கிறது அந்த செய்தி.

முகச் சிதைவு காரணமாக பாகுபாட்டுக்கு உள்ளான மாணவி

தோல் மற்றும் முகத்திலுள்ள மென்மையான திசுக்களில் சிதைவை ஏற்படுத்தும் அரிய நோயான பார்ரி-ராம்பெர்க் சிண்ட்ரோம் உள்ள ஆவடி சிறுமி பாகுபாட்டுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் தலையீட்டிற்குப் பிறகு, முக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்பது வயது சிறுமி தனது முகச் சிதைவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் வகுப்புத் தோழர்களால் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி ஊடகங்களின் வழியே அரசிடம் உதவி கோரியுள்ளார்.

அவருடைய வகுப்புத் தோழர்கள் தன்னுடன் விளையாடவில்லை என்றும் அவருடைய தோற்றம் காரணமாக ஆசிரியர்கள் கூட தன்னை வித்தியாசமாக நடத்தினார்கள் என்றும் தான் தொட்ட பொருட்களை சுத்தம் செய்யாமல் தொடுவதைக் கூட தவிர்ப்பதாகவும் அவர் கூறினார். அவருடைய மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்த திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், சென்னை மருத்துவக் கல்லூரி, ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டுமே இலவசமாக மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யத் தயாராக இருந்தன.

"பெற்றோரின் முடிவை நாங்கள் கேட்டுள்ளோம். அவர்கள் பதிலளித்தவுடன், நாங்கள் அவர்களை வழிநடத்துவோம். அவரது மருத்துவ பதிவுகளில் இருந்து, அறுவை சிகிச்சை மூலம் சிக்கல்கள் எதுவும் ஏற்படாது என்று தெரிந்துகொண்டோம்," என்று சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்த திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் கூறினார். பார்ரி-ராம்பெர்க் சிண்ட்ரோம் அரிதானது. ஏழு லட்சம் நபர்களில் ஒருவருக்கு ஏற்படுகிறது என்கிறது அந்த செய்தி.

இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பியதாக 8 யூட்யூப் சேனல்களுக்கு தடை

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு தொடர்புகள், பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தவறான தகவல்களைப் பரப்பிய 8 யூட்யூப் சேனல்களை தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், 2021-இல் தகவல் தொடர்பு சட்டத்தைப் பயன்படுத்தி, 8 யூட்யூப் சேனல்கள், 1 ஃபேஸ்புக் கணக்கு, 2 முகநூல் பதிவுகளைத் தடை செய்வதற்கான உத்தரவுகளை ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று பிறப்பித்தது. தடை செய்யப்பட்ட யூட்யூப் சேனல்கள் மொத்தமாக, 114 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், "குறிப்பிட்ட இந்த யூட்யூப் சேனல்களில், இந்தியாவில் மத நல்லிணக்கத்திற்கு மாறாக வெறுப்பைத் தூண்டும் வகையிலும் உரிமைகள் தொடர்பான தவறான தகவல்களும் பதிவேற்றப்பட்டிருந்தன. மதம் குறித்த கட்டமைப்புகளைத் தகர்த்தெறிய இந்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்தியும் மத பண்டிகைகளைக் கொண்டாட இந்திய அரசு தடை விதித்து, மதப் போரை அறிவித்துள்ளது என்பன போன்ற செய்தியும் நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டி பொது ஒழுங்கை சீர்குலைக்கக் கூடியவை" என அரசு கூறியுள்ளது.

"இந்த யூட்யூப் சேனல்கள், ஜம்மு காஷ்மீர் குறித்த பல்வேறு பொய்யான தகவல்களையும் பதிவேற்றியிருந்தன. தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு நட்புறவு தொடர்பான இந்தத் தகவல்கள் முற்றிலும் தவறான கண்ணோட்டம் கொண்டதாக உள்ளன. தகவல் தொடர்பு அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டுள்ள இந்த சேனல்கள், இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, நாட்டின் பொது அமைதி ஆகியவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளன.

தடை விதிக்கப்பட்ட இந்த யூட்யூப் சேனல்கள், போலியான மற்றும் பரபரப்பான சிறுபடங்கள், செய்தி வாசிப்பாளர்களின் படங்கள், சில செய்தித் தொலைக்காட்சிகளின் லோகோக்களை பயன்படுத்தி, பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்திலும் மத நல்லிணக்கம், வெளிநாடுகளுடனான நட்புறவு மற்றும் பொது அமைதிக்குப் பாதகம் ஏற்படுத்தும் உள்ளடக்கம் கொண்ட வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

உண்மையான நம்பகத்தன்மை, வாய்ந்த மற்றும் பாதுகாப்பான இணையவழி சுற்றுச்சூழலை உறுதி செய்வதிலும் இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியை முறியடிப்பதிலும் இந்திய அரசு உறுதியாக உள்ளது," என்றும் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.