செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2019 (12:39 IST)

பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு தடை: காஷ்மீர் பிரச்சனை எதிரொலியா?

இந்தியா அல்லது இந்தியா சார்ந்த நிகழ்ச்சிகளை பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப இருந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் அமல்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிவரும் வேளையில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
பாலிவுட் திரைப்படங்கள் பாகிஸ்தான் திரையரங்குகளில் வெளியாகாது என ஏற்கனவே அந்நாட்டு திரைப்பட ஒளிபரப்பு அமைப்பு அறிவித்திருந்தது.
 
பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணையம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மூன்று நீதிபதிகளை கொண்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற அமர்வு, அடுத்த விசாரணை நடைபெறும் வரை இத்தடை நீடிக்கும் என்று கூறியுள்ளது.
 
பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணையத்தின் 2006ஆம் ஆண்டு கொள்கைப்படி, உள்ளூர் சேனல்களில் 10 சதவீத வெளிநாட்டு உள்ளடக்கங்களை (இந்தியா உள்பட) ஒளிபரப்ப அனுமதியுள்ளது.
 
2016ம் ஆண்டு பதான்கோட் தாக்குதலின் பின்னணியில், இந்திய உள்ளடக்கம் உடைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணையம் ஒட்டுமொத்த தடை விதித்தது.
 
அமிர்தசரஸ் அருகே உள்ள வாகா எல்லையில் தினசரி நிகழும் இரு நாட்டுக் கொடிகளும் இறக்கப்படும் நிகழ்வு இரு தரப்பிலிருந்தும் பல பார்வையாளர்களை ஈர்க்கிறது.
 
பின்னர், இந்த தடைக்கு எதிராக லாகூர் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கால் அது நீக்கப்பட்டது. பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணையம் விதித்த தடை சட்டபூர்வமற்றது என்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று லாகூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
இந்த தீர்ப்புக்கு எதிராக பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, தற்காலிக தடை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
 
இந்த மாதத்தின் தொடக்கத்தில், புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டிய பின்னர், பாகிஸ்தானின் டி20 கிரிக்கெட் போட்டியின் அதிகாரபூர்வ தயாரிப்பில் இருந்து இந்திய நிறுவனம் ஒன்று வெளியேறியது. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்படுவதும் தடை செய்யப்பட்டது.
 
இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையில் தற்போது பதற்றம் அதிகரித்திருப்பதற்கும், இந்த விவகாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மறுக்கிறார் பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணைய செய்தி தொடர்பாளர், ஃபாக்கருதீன் மௌகால்.
 
புகார் முன்பே அளிக்கப்பட்டுவிட்டது. இந்திய திரைப்படங்கள், இசை நாடகங்கள் மற்றும் விளம்பரங்களை பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப அனுமதித்த லாகூர் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே வழக்கு தொடுத்துள்ளது.
 
"உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஒரு சதவீத இந்திய உள்ளடக்கங்களைக்கூட உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப இப்போது அனுமதியில்லை," என்று ஃபாக்கார் மேலும் கூறினார்.
 
இருப்பினும், நேற்று அவர் பேசியதில், நாட்டின் எல்லைகளில் இந்தியா ஊடுருவும்போது, இந்திய உள்ளடக்கத்தை பார்க்க பாகிஸ்தானில் யார் விரும்புவர் என்று நீதிபதிகளில் ஒருவர் சொன்னதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஹாசன் சாய்டி ஒரு பொழுதுபோக்கு பத்திரிகையாளர். இவர், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை இந்த முடிவில் செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், கொள்கை அளவில் இந்த பிரச்சனை மிகவும் சிக்கலானது என்கிறார்.
 
"இந்த தடைக்கு பின்னால் இருக்கும் தர்க்க வாதம் தெளிவாக இல்லை. பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் 10 சதவீதம் வெளிநாட்டு உள்ளடக்கங்கள் ஒளிபரப்பப்படலாம் என்ற பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணைய விதிமுறை என்ன ஆனது? இந்தியா மட்டும் விதிவிலக்கானது எப்படி? இவ்வாறு பல கேள்விகள் உள்ளன."
"தற்போதைய போர் பதற்ற நிலைமையில், இவற்றை எழுப்புவது கடினம். தர்க்க ரீதியாக பேசினால், அவை மிகவும் முக்கியமானவை. இந்திய, பாகிஸ்தான் உறவில் இயல்பு நிலை மீட்கப்பட்டவுடன், இந்த பிரச்சனையை மக்கள் மீண்டும் எழுப்புவர்," என்று ஹாசன் சாய்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
ஆனால், பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் இந்த உள்ளடக்கத்தை காட்டுவதோடு மட்டுமே இந்த தடை இவ்வேளையில் அடங்கிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் (‏ @fawadchaudhry) இந்திய திரைப்படங்கள் எதுவும் பாகிஸ்தானில் வெளியாகாது என்று தெரிவித்தார்.
 
"சினிமா திரையரங்க கூட்டமைப்பு இந்திய உள்ளடக்கங்களுக்கு எதிராக உள்ளது. இந்திய திரைப்படங்கள் எதுவும் பாகிஸ்தானில் திரையிடப்படாது. பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ளபடி, இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது". #PakistanTayar Hai என்று அவர் குறிப்பிட்டுள்ளார். (பாகிஸ்தான் தயார் என்று பொருள்படுகிறது)
 
ஆனால், தானாகவே வழங்கப்பட்டுள்ள இந்த தடை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீக்கப்படலாம். பாகிஸ்தான் பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் மீது அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பு விதித்த தடைக்கு பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை இதுவென பாகிஸ்தான் சினிமா திரையிடுவோர் கூட்டமைப்பு கூறுகிறது.
 
"நாடு முதன்மை பெறுகிறது. நாம் தேசத்தோடு இணைந்து நிற்கிறோம்," என்று அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
 
பாகிஸ்தான் கலைஞர்களோடு எதாவது ஒரு நிறுவனம் வேலை செய்வதாக இருந்தால், அதன் மீது தடை விதிக்கப்படும் என்றும் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த மாதிரியான உணர்வுகள் இருதரப்பிலும் வலுவாக உள்ளதாக தெரிவிக்கிறார் சினிமா தயாரிப்பாளரும், பாகிஸ்தான் திரைப்பட கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான நதீம் மன்டிவிவாலா.
 
இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த பயங்கரங்களைப் பதிவு செய்யும் முயற்சிகளில் இலக்கியமும் சினிமாவும் வழிகண்டன.
 
இதனால்தான், பாலிவுட் திரைப்படங்களை தடை செய்யும் முடிவை பாகிஸ்தான் எடுக்க வேண்டியதாயிற்று. இது தற்காலிகமானது என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், இந்த இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையில் நல்லெண்ணம் மேலோங்கும் என்கிறார்.
"திரைப்படங்கள், கலைஞர்களை பரிமாற்றி கொள்வது இரு நாடுகளுக்கும் நல்லது. இரு நாடுகளுக்கிடையில் போட்டி போடுவதைவிட ஒன்று மற்றதன் திறமைகளால் பயனடைகிறது" என்று அவர் தெரிவித்தார்.
 
பாலிவுட் திரைப்படங்கள் மீதான பாகிஸ்தானின் தடை தொடரக்கூடியது அல்ல. பாகிஸ்தான் சினிமா தொழில்துறை அதனுடைய வருவாயில் சுமார் 70 சதவீதத்தை இந்திய திரைப்படங்களில் இருந்து பெறுகிறது. பாலிவுட் திரைப்படங்களைத் தவிர்த்துவிட்டு, இது செயல்படுவது மிகவும் கடினம்.
 
இந்திய தொலைக்கட்சி சேனல்கள் மீதான கட்டுப்பாடுகள், கருத்து சுதந்திர உரிமைக்கான அரசியல் சாசன மீறல் என்பது தொடர்பாக அடுத்ததாக நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.