1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (23:32 IST)

பாகிஸ்தான்: பணய கைதிகளாக வைத்திருந்த 33 தீவிரவாதிகளை கொன்று காவல் நிலையத்தை மீட்ட படையினர்!

Pakistan
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அந்நாட்டின் தொலைதூர பகுதியில் உள்ள காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரை பணய கைதிகளாக வைத்திருந்த தீவிரவாதிகள் 33 பேரைக் கொன்று அந்த இடத்தை மீட்டிருக்கிறார்கள்.

வட மேற்கு பன்னு மாவட்டத்தில் உள்ள இந்த காவல் வளாகத்தை அதனுள்ளே இருந்த பாகிஸ்தான் தாலிபன் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் அதனுள்ளே இருந்தனர். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிஃப் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், தீவிரவாதிகளால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சிறப்புப் படையைச் சேர்ந்த இருவர் பலியானதாகவும் தெரிவித்தார்.
 
நடந்த சண்டையில் 10 முதல் 15 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். TTP என்று அழைக்கப்படும் பாகிஸ்தானிய தலிபான் இயக்கத்தினர் காவல் நிலைய தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. கடந்த மாதம் அரசாங்கத்துடனான சண்டை நிறுத்த முடிவை முறித்துக் கொண்டு ஆயுதக் குழுவினர் தங்களுடைய தாக்குதல்களை தொடர்ந்தனர். அரசு தரப்பும் ஆயுததாரிகளும் கடந்த பல ஆண்டுகளாகவே மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். டிடிபி என்ற இந்த ஆயுதக் குழு 2007இல் உருவானது. இதைத்தொடர்ந்து 2014இல் நடந்த ஒரு ராணுவ நடவடிக்கை மூலம் இந்த குழு ஒடுக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு அதன் உறுப்பினர்கள் தலைதூக்கத் தொடங்கினர். ஆப்கானிஸ்தான் தாலிபன்களிடம் இருந்து இந்த குழு தனித்து இயங்கி வருகிறது. அதே சமயம், 2020இல் அமெரிக்காவுடன் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு ஆப்கன் தாலிபன்கள் ஒப்புக்கொண்டு, கடந்த ஆண்டு அந்நாட்டின் கட்டுப்பாட்டை தங்கள் வசமாக்கிக் கொண்டது முதல் பாகிஸ்தான் தொலைதூர பகுதியில் டிடிபி ஆயுததாரிகளின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது.
 
 
பழங்குடியினரை ஏமாற்றும் பாமாயில் ஆலைகள் - பிபிசி புலனாய்வில் அதிர்ச்சி தகவல்
 
ஆப்கனிலும் பாகிஸ்தானிலும் உள்ள இந்த இரண்டு குழுக்களும் கடும்போக்கு இஸ்லாமியவாத சித்தாந்தத்தை கடைப்பிடிப்பவை.

 
இந்த குழுவினர் பணயக்கைதிகளை சிறைப்பிடித்த பகுதி இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது.

 
நடந்த சம்பவத்தை நாடாளுமன்றத்தில் விவரித்த அமைச்சர் ஆசிஃப், 33 தீவிரவாதிகளும் வெவ்வேறு ஆயுத குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், பயங்கரவாத எதிர்ப்புப்படை வளாகத்தில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். அதில் ஒரு தீவிரவாதி பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளியின் தலையில் செங்கலால் தாக்கி அவரது ஆயுதத்தை பறித்த பின்னர் அந்த வளாகத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பணயக்கைதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக தீவிரவாதிகள் தாங்கள் பாதுகாப்பாக வெளியேற கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

 
இந்த பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் மோதல் முற்றி கடைசியில் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. பணயக்கைதிகளை பிடித்திருந்தவர்கள், தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, உள்ளூர் நேரப்படி நள்ளிரவைக் கடந்த 12:30 மணிக்கு (07:30 GMT) காவல் நிலையத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட ராணுவ கமாண்டோக்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி சம்பவ பகுதியில் வெடிச்சத்தங்களும் துப்பாக்கியால் சுடும் சத்தமும் கேட்டதாக சம்பவ பகுதிக்கு அருகே இருப்பவர்கள் கூறுகின்றனர்.
 
 
இந்த சண்டையின் முடிவில் "அனைத்து பயங்கரவாதிகளும்" கொல்லப்பட்டு விட்டதாகவும், பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஆசிஃப் நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால், விடுவிக்கப்பட்ட பணய கைதிகளின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை.
 
 
இந்த கொடிய சம்பவம் கைபர் பக்தூங்வா மாகாண அரசாங்கத்தின் "முழு தோல்வியின் வெளிப்பாடு" என்று அமைச்சர் ஆசிஃப் குற்றம்சாட்டினார். தாக்குதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, சம்பவ பகுதியில் இருக்கும் பள்ளிகள், வணிக நிறுவனங்கள், சாலைகள் செவ்வாய்க்கிழமை முழுமையாக மூடப்பட்டிருந்தன. பல இடங்களில் போலீஸ் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டன. பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடக்கும் வேளையில், தொலைதூர பகுதியில் இந்த சண்டை நடந்துள்ளது. முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை பன்னுவின் மற்றொரு இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு போலீசார் கொல்லப்பட்டனர்.