வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 நவம்பர் 2022 (13:35 IST)

pak vs eng t20: மெல்பர்னில் மீண்டும் நிகழுமா 1992 அதிசயம்?

worldcup T20
30 ஆண்டுகளுக்கு முன்பு இதே மெர்பர்ன் மைதானத்தில் இதே போன்ற ஓர் இரவில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி உலகச் சாம்பியன் ஆனது. அதே இரவை மீண்டும் எதிர்நோக்கி காத்திருக்கிறது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி எப்போதும் அதிசயத்தை நிகழ்த்தக்கூடியது என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்புகிறார்கள். ஜிம்பாப்வேயுடன் தோற்ற அந்த அணி பலமான தென்னாப்பிரிக்காவையும் நியூசிலாந்தையும் வீழ்த்தியதை சுட்டிக்காட்டுகிறார்கள்.

1992-ஆம் ஆண்டு நடந்ததை போன்று மீண்டும் நடக்கும் என்ற விவாதம் குறித்துக் கேட்டபோது, “நடப்பது எல்லாம் அல்லாவால் நடக்கிறது. அல்லா எங்களுக்கு வாய்ப்பளிக்கிறார். ஆனால் முயற்சி எங்கள் கைகளில்தான் இருக்கிறது. ஆனால் முடிவு அல்லாவின் கையில். இறுதிப் போட்டியிலும் அல்லா எங்களை வெற்றி பெற வைப்பார்” என்று கூறினார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.

உலகக் கோப்பை டி20 தொடரின் தொடக்கப் போட்டிகளில் பாபர் தலைமையிலான பாகிஸ்தான் அணி தடுமாறியது.  இந்தியாவுடனும் ஜிம்பாப்வே அணியுடனும் தோல்வியைத் தழுவியதால் அந்த அணி அரையிறுதிக்குச் செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. 

ஆனால் அதற்கு அடுத்த மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. கடைசி நாளில் தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியுடன் தோற்றுப் போனதால் அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்தது.

ஆயினும் தொடக்கப் போட்டிகளில் தடுமாறிய அணி பலமான நியூசிலாந்து அணியை வெல்ல முடியுமா என்ற சந்தேகம் இருந்தபோது, மிக எளிதாக அந்த அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டது.

1992-ஆம் ஆண்டு எங்கோ காணாமல் இருந்த அணி கடைசியில் கோப்பையை வென்றது போல இன்னொரு முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டதாக பாகிஸ்தான் ரசிகர்கள் பெருமிதம் அடைந்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் எப்படி?

பாகிஸ்தானும் இங்கிலாந்தும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமையன்று மோத இருக்கின்றன. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. 

அரையிறுதிப் போட்டியில் எளிதாக வென்ற உற்சாகத்தில் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தயாராக இருக்கின்றன. பாகிஸ்தான் அணி கடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருக்கிறது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வென்றிருக்கிறது.

பாகிஸ்தானின் பாபர் ஆஸம், ரிஸ்வான் இணையைப் போல, இங்கிலாந்தின் பட்லர், ஹேல்ஸ் இணை சிறப்பான துவக்கத்தை அளிக்கத் தொடங்கியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு சாஹீன் ஷா அப்ரிடி என்றால் இங்கிலாந்துக்கு சாம் கரன். இரு தரப்புமே இப்போதைக்கு சமமான பலத்தைக் கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்றே நம்பலாம். எனினும் இங்கிலாந்து அணியின் மார்க் வுட், மலான் ஆகியோர் சேர்க்கப்படுவார்களா என்பது பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை.

மெல்பர்ன் மைதானம் எப்படி?

மெல்பர்னில் காலநிலை மோசமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் முடிவு கிடைக்கும் வகையில் போட்டியை ஆடுவதற்கு நேரம் கிடைக்கலாம்.  இந்த மைதானத்தில் ஏற்கெனவே ஆடப்பட்ட போட்டிகளை வைத்துப் பார்க்கும் போது 160 ரன்களுக்கு அதிகமாக எடுத்தால் இரண்டாவது ஆடும் அணிக்கு அது சவாலானதாக இருக்கும்.

டி20 உலகக் கோப்பை தொடரில் மெல்போர்னில் திட்டமிடப்பட்ட 12 போட்டிகளில் 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டிருக்கின்றன. இந்த மைதானம் மட்டும்தான் இங்கிலாந்து அணிக்கு தடுமாற்றத்தை தந்திருக்கிறது. மெல்போர்னில் நடந்த ஒரு போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து, மற்றொரு போட்டி ரத்தானதால் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கும் இதேபோன்ற நிலைதான். இந்தியாவுடனான போட்டியில் தோல்வியடைந்தது இந்த மைதானத்தில்தான்.

1992-இல் என்ன நடந்தது?

1992-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடிய முதல் 5 போட்டிகளை எடுத்துப் பார்த்தால் மூன்று வெற்றிகளும் ஒரு தோல்வியும், மழையால் ரத்து செய்யப்பட்ட ஓர் ஆட்டமும்தான் இருக்கும்.

முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்தது. 

அடுத்ததாக இங்கிலாந்து அணியுடனான போட்டி. வெறும் 74 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான். தோல்வி உறுதி என்ற நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தானது. இரு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் கிடைத்தன. இது இங்கிலாந்துக்கு ஏமாற்றமாகவும் பாகிஸ்தானுக்கு சாதகமாகவும் போனது.

அடுத்ததாக இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி மற்றொரு தோல்வியைச் சந்தித்து. டெண்டுல்கர், அசாருதீன் ஆகியோரின் கணிசமான ரன் குவிப்பால் இந்திய அணி 216 ரன்களை எடுத்தது. ஆனால் 173 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைந்தது பாகிஸ்தான்.

முதல் 5 போட்டிகளில் ஜிம்பாப்வே அணியை மட்டும் பாகிஸ்தானால் வீழ்த்த முடிந்தது.  அடுத்ததாக பலமான ஆஸ்திரேலியாவையும், நியூலாந்தையும் எதிர்கொள்ள வேண்டும்.  இலங்கையுடனான மற்றொரு போட்டியும் இருந்தது.

அந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்வது பற்றி யாருமே கணித்திருக்க மாட்டார்கள்.  ஆனால் வியக்கத்தக்க வகையில் ஆஸ்திரேலியாவை வென்ற பாகிஸ்தான் அடுத்ததாக இலங்கையையும் வீழ்த்தியது. 

கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் மோதியது. மொத்தமாக 8 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அதுவரை ஒரு போட்டியில் கூட நியூசிலாந்து தோற்கவில்லை. அப்படிப்பட்ட அணியை  166 ரன்களுக்குச் சுருட்டியது பாகிஸ்தான். அரைச் சதமும், சதமும் அடித்துக் கொண்டிருந்த கேப்டன் மார்ட்டின் க்ரோவ் அந்தப் போட்டியில் 20 பந்துகளைச் சந்தித்து 3 ரன்களை எடுத்தார். 

ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என்பதற்காக பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து விட்டுக் கொடுத்ததாகவும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ஏனென்றால் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்துவது எளிது என நியூசிலாந்து அணி கணித்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் ஆக்லாந்து மைதானத்தில் நடந்த அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது வேறு முகங்களைக் காட்டினார்கள். கேப்டன் இம்ரான் கான், மியான் தத், ரமீஸ் ராஜா, இன்சமாம் உல் ஹக் என அனைத்து வீரர்களும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். 37 பந்துகளில் 60 ரன்களைக் குவித்த இன்சமாம் தனது அதிரடியை உலகுக்கு நிரூபித்த தருணங்களுள் முக்கியமானது அது.

அந்தப் போட்டியில் வென்ற பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையும் வீழ்த்தியது. ஒன்றை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். லீக் போட்டியில் வெறும் 74 ரன்களுக்குச் சுருண்ட அதே பாகிஸ்தான் அணிதான் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெறுங்கையுடன் வெளியேற்றியது. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மிரட்டிய வாசிம் அக்ரம், கோப்பையைக் கைப்பற்றுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

பாகிஸ்தான் அணியின் இத்தகைய விஸ்வரூப மாற்றத்தைத்தான் அந்த நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். நியூசிலாந்துடனான போட்டியில் அதுவே நடந்திருக்கிறது. அதுவே இறுதிப் போட்டியிலும் நடக்கும் என பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.