புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (13:49 IST)

விஷத்திலிருந்து உயிர் தப்பிய எதிர்க்கட்சி தலைவர் ரஷ்யாவில் நுழைந்தவுடன் கைது

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து வரும் அந்த நாட்டின் எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸே நவால்னி ரஷ்யாவில்  நுழைந்த உடனேயே, காவல் துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஐந்து மாதங்களுக்கு முன் ஒரு விஷத்தன்மை கொண்ட ரசாயனத்தால் இவரைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் சென்று உயிர் தப்பினார் நவால்னி. இந்த கொலை முயற்சிக்கு ரஷ்யா தான் காரணமென நவால்னி குற்றம்சாட்டி வரும் நிலையில், அதை ரஷ்ய அரசு  தொடர்ந்து மறுத்து வருகிறது.
 
பல மாதங்களுக்கு பிறகு ரஷ்யா வந்திறங்கிய 44 வயதான அலெக்ஸே நவால்னி ஷெரெமெட்டியோ விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
 
ஜெர்மனியின் தலைநகரான பெர்லினிலிருந்து வந்த நவால்னிக்கு வரவேற்பளிக்க அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், மாஸ்கோவின் பல்வேறு விமான நிலையங்களில் காத்திருந்தார்கள். ஆனால் விமானத்தின் வழித்தடம் மாற்றப்பட்டுவிட்டது.
 
இதையடுத்து, விமானம் தரையிறங்கிய உடனேயே அலெக்ஸே நவால்னியை ரஷ்ய அரசு தடுப்புக் காவலில் வைத்ததற்கு பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டுமெனக் வலியுறுத்தியுள்ளனர்.
 
"நவால்னி மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, தங்கள் குரலை அரசு கேட்க வேண்டுமென விரும்பும் ரஷ்யர்களை  அவமானப்படுத்தும் செயல்" என ஜோ பைடனின் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்கவிருக்கும் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார்.
 
என்ன நடந்தது?
 
கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அலெக்ஸே நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது. சைபீரியாவின் டாம்ஸ்கில் இருந்து மாஸ்கோவுக்குச் செல்லும்  விமான பயணத்தின்போது நவால்னி அப்படியே மயங்கி விழுந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, கோமா நிலையில் இருந்த நவால்னி அவசர சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார்.
 
நவால்னிக்கு 'நோவிசோக்' என்கிற, ரஷ்யா பனிப் போர் காலத்தில் உருவாக்கிய விஷம் கொடுக்கப்பட்டதாக ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் கூறினர். முழுமையாக  குணமடைந்த பின், தான் ரஷ்யா செல்ல வேண்டுமென நவால்னி கூறி வந்தார்.
 
இந்த நிலையில், நவால்னி ரஷ்யா சென்றால் தரையிறங்கிய உடன் மீண்டும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுச் செல்லப்படலாம் என்ற  எச்சரிக்கைக்கு பிறகும், நேற்று (ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை) தான் கூறியவாறே பொபெடா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் மூலம் ரஷ்யாவுக்கு  புறப்பட்டார்.
 
அவரோடு பிபிசி ரஷ்ய செய்தியாளர் ஆண்ட்ரே கொசென்கோ உட்பட பல பத்திரிகையாளர்கள் பயணித்தனர். விமானம் தரையிறங்குவதற்கு முன், சில  தொழில்நுட்பக் காரணங்களால் வியானுகோவா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானம், ஷெரெமெட்டியோ விமான நிலையத்தில் தரையிறங்கும்  என்று அறிவிக்கப்பட்டது.
 
"நான் கைது செய்யப்படுவேன் என எனக்கு தெரியும். நான் எதைகண்டும் பயப்படவில்லை" என நவால்னி தன் ஆதரவாளர்கள் மற்றும் ஊடகத்திடம் கூறினார்.
 
அதோடு "நீங்கள் எனக்காகத் தான் இத்தனை நேரம் காத்திருக்கிறீர்களா?" என எல்லை பாதுகாப்புப்படை வீரர்களைப் பார்த்துக் கேட்டார் அலெக்ஸே நவால்னி.
 
நவால்னியின் வழக்குரைஞர், அவரோடு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நவால்னி மாஸ்கோவிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். நவால்னியின் முக்கிய நண்பரான லுபொவ் சோபல் உட்பட பல செயற்பாட்டாளர்களும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
ஏன் நவால்னி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்?
 
அலெக்ஸே நவால்னி மீது கையாடல் (Embezzlement) வழக்கொன்று பதியப்பட்டு அதில் அவருக்கு ஏற்கனவே தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது. இந்த  வழக்கு அரசியல் காரணங்களால் தன் மீது தொடுக்கப்பட்டதாக நவால்னி கூறுகிறார். இந்த தண்டனை காலத்தில் (Probation Period) நவால்னி தொடர்ந்து  விதிமீறல் செய்ததால் கடந்த டிசம்பர் 29 முதல் தேடப்பட்டு வருகிறார் என ரஷ்யாவின் சிறைத்துறை, நேற்று (ஜனவரி 17) ஒரு அறிக்கை வெளியிட்டது.
 
இது மட்டுமின்றி ரஷ்ய அரசுத் தரப்பு, நவால்னி பல்வேறு அமைப்புகளுக்குச் செய்த பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஒரு குற்றவியல் வழக்கையும்  பதிந்திருக்கிறது. தான் ரஷ்யாவுக்கு வருவதைத் தடுக்க, புதின் வழக்குகளை தனக்கு எதிராக ஜோடிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார் நவால்னி.
 
ரஷ்யாவின் பங்கு
 
நவால்னி சைபீரியாவின் டோம்ஸ்கில் இருந்த போது, ரஷ்யாவின் எஃப்.எஸ்பி பாதுகாப்புச் சேவையைச் சேர்ந்த மூன்று ஏஜென்ட்களும் அங்கு இருந்ததாக ஒரு  புலனாய்வு நிருபர் கடந்த மாதம் குறிப்பிட்டார். எஃப்.எஸ்.பி பல ஆண்டுகளாக நவால்னியை பின் தொடர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார் அந்த நிருபர்.
 
நவால்னி, கான்ஸ்டான்டின் குட்ரயவ்ட்சவ் என்கிற பெயரில் ஒரு எஃப்.எஸ்.பி ஏஜென்ட் போல மற்றொரு எஃப்.எஸ்.பி ஏஜென்டிடம் அலைபேசியில் பேசி, தனக்கு  எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பதிவு செய்து, இணையத்தில் பதிவிட்டார்.
 
நவால்னியை வீழ்த்த, அவரது உள்ளாடைகளில் 'நோவிசோக்' பயன்படுத்தப்பட்டதாக அந்த ஏஜென்ட் கூறினார். இதயடுத்து நவால்னிக்கு அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பின் உதவி கிடைத்திருப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குற்றஞ்சாட்டினார்.