1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (12:30 IST)

யுக்ரேனில் இனி பாதுகாப்பான இடம் ஒன்று இல்லை: பிபிசி யுக்ரேன் சேவை ஆசிரியர்!

ரஷ்யப் படையெடுப்பைப் பற்றி விளாதிமிர் புதின் வெளியிட்ட அறிவிப்பு குறித்து என் சக ஊழியரிடம் இருந்து இரவில் ஒரு குறுஞ்செய்தி வந்தபோது நான் விழித்திருந்தேன்.
 
அதன்பிறகு உடனடியயாக குண்டு வெடிப்புகள் துவங்கின. எனது வீட்டிலிருந்து அவற்றைக் கேட்க முடிந்தது. தங்களுக்கு அருகில் நிகழும் வெடிப்புகளைப் பற்றி, நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் எங்கள் வாட்சாப் குழுவில் தகவல் அனுப்பத் துவங்கினர்.
 
முன் களத்திலிருக்கும் கிழக்கு பகுதிகள் மட்டுமல்ல, கீவ் நகரமே தாக்கப்படுகிறது என்பது பெரும் அதிர்ச்சியான விஷயம்.
 
யுக்ரேனில் இனி பாதுகாப்பான இடம் என்று ஒன்று இல்லை.
 
பொதுமக்களின் மிகப்பெரும் அச்சம் மின்சாரமும் இன்டர்நெட்டும் இல்லாமல் போவது தான் - அப்போது நாங்கள் உண்மையிலேயே தனித்து விடப்படுவோம். மற்றோர் அச்சம் ட்னீபர் நதியின் குறுக்கே செல்லும் பாலங்கள் தகர்க்கப்படுவது. இது நகரத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பாதிகளை பிரித்துவிடும்.
 
தாக்குதல் 30 நிமிடங்களுக்குத் தொடர்ந்தது.
நான் எனது 10 வயது மகனுக்கு ஆடைகளை அணிவித்தேன். பிறகு ஜன்னலிலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரமாக அமர்ந்து காலை உணவு உட்கொண்டோம். ஆனால் அவன் மிகவும் பயத்தில் இருந்ததால் வாந்தி எடுத்துவிட்டான். ஒரு மெழுகுவத்தியும் கொஞ்சம் குடிநீரும் எடுத்துக்கொண்டு நாங்கள் நிலவறைக்குச் சென்றோம். நிலைமை மோசமானால் இதுதான் எங்கள் ஒரே தஞ்சம்.
 
எனது வீட்டின் அருகே இருக்கும் பல்பொருள் அங்காடிகள், ஏ.டி.எம்.களின் எதிரே நீண்ட வரிசைகள். பல ஏ.டி.எம்.களில் பணம் தீர்ந்து விட்டது. சில பெட்ரோல் நிலையங்களும் காலியாகி மூடப்பட்டுவிட்டன. முழு நாடும் தாக்கப்படுகிறது என்பது தெரிந்து விட்டதால், எங்கும் பீதி பரவியிருக்கிறது.
 
நகரத்தில் இருந்து வெளியே செல்லும் சாலைகள் வாகன நெரிசலால் அடைபட்டுக் கிடக்கின்றன. ஆனால் இது ஒரு ஆபத்தான பயணம். மெதுவாக நகரும் நீண்ட வாகன வரிசைகளில் காத்திருக்க நேர்கிறது. உங்கள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் உங்கள் வாகனத்தின் எரிபொருள் தீர்ந்து போகலாம்.
 
ரயில்கள் ஓடுகின்றன, ஆனால் இடம் பிடிக்க பெரும் கூட்டம் அலைமோதுகிறது. அதிபர் ஸெலென்ஸ்கி கொண்டுவந்த தற்காப்பு சட்டத்தால் யுக்ரேனின் வான்வழிப் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
 
ராணுவம் சார்ந்த இடங்கள் மட்டும் தாக்கப்படவில்லை, நாடு முழுவதுமுள்ள நகரங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் நேரடியாக தாக்கப்பட்டதற்கான புகைப்படங்களும் இருக்கின்றன.
 
ரஷ்ய தாக்குதல் நாட்டின் அத்தனை பகுதிகளையும் பாதித்திருக்கிறது. போலந்து எல்லைக்கு அருகில் இருக்கும் லவீவ் நகரத்தில் கூட, சைரன்கள் ஒலித்தன. அங்கிருக்கும் ஒரு சக ஊழியர் ஒரு வெடிகுண்டு காப்பறையில் தஞ்சம் அடைய வேண்டி இருந்தது.
 
வான்வழி தாக்குதல்களிலிருந்து தப்பிக்க, இனொரு சக ஊழியர் தனது குடும்பத்தை கீவ் நகரத்திலிக்ருந்து வெளியே அழைத்துச் சென்றுவிட்டார். நகரங்களைவிட கிராமங்கள் பாதுகாப்பானவையாக இருக்கலாம். ஆனால் வடக்கு, கிழக்கு, மற்றும் தெற்கிலிருந்து தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரு நாட்டில், இனியும் உண்மையாகவே பாதுகாப்பான இடம் என்று ஒன்று இல்லை.