வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (12:30 IST)

நிர்மலா சீதாராமன்: "அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளால் அரசு அமைப்புகளுக்கு நிதிச் சுமை”

தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களால் அரசு அமைப்புகள் நிதிச் சுமையை எதிர்கொள்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவரும் வகையில் இலவசங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், வங்கிகளுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன், "தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவது குறித்து விரிவான விவாதம் தேவைப்படுகிறது. அதேவேளையில், இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள், அதற்கான செலவினத்தை நிர்வகிப்பது தொடர்பான விவரங்களையும் வெளியிட வேண்டும்.

இலவசங்களால் ஏற்படும் நிதி இழப்பை அரசின் மற்ற அமைப்புகள் மீது சுமத்திவிடக் கூடாது. சான்றாக, கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களால் மி உற்பத்தி நிறுவனங்களும் மின் விநியோக நிறுவனங்களும் கடும் நிதி இழப்பைச் சந்தித்து வருகின்றன.

தேர்தலுக்கு முன்பாக பல கட்சிகள் இலவச மின்சார விநியோக வாக்குறுதியைக் கொடுக்கின்றன. பிறகு, சிலநேரங்களில் மாநில அரசுகள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிய தொகையை வழங்குகின்றன. சில நேரங்களில் அந்தத் தொகை வழங்கப்படுவதில்லை. அதனால் அவை நிதிச் சுமையைச் சந்திக்கின்றன. பொறுப்புள்ள கட்சியானது தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இலவச அறிவிப்புகளுக்கான நிதியை பட்ஜெட்டில் இருந்து ஒதுக்க வேண்டும்," என்று பேசினார்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு சீமான் எதிர்ப்பு

"2030-35இல் 10 கோடி மக்கள் பயணிக்கும் அளவுக்கு வசதிகள் வந்துவிடும் என்று கூறுகிறார். இவ்வளவு தொலைநோக்காகச் சிந்திக்கின்ற உங்களிடம் அப்போது வாழும் மக்களின் குடிநீர் தேவை, உணவுத் தேவை நிறைவேற்ற தொலைநோக்குத் திட்டங்கள் உள்ளனவா?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமார் கேள்வியெழுப்பியுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கலந்துகொண்டார். அப்போது அவர், "சுமார் 5,000 ஏக்கரில் பல கிராமங்கள், பல்லாயிரக்கணக்கான விளை நிலங்களை காலி செய்துவிட்டனர். இதில் 40-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள் என்று 2,605 சதுப்பு நில நீர்ப்பிடிப்புப் பகுதிகள். அதுபோக 985 நீர்நிலைகள் ஆகியவற்றையெல்லாம் காலி செய்துவிட்டு ஒரு விமான நிலையம் கட்டுவதை வளர்ச்சி என்று கூறுகின்றனர்.

இதில் அமைச்சர் 2030-35க்குள் 10 கோடி மக்கள் பயணிக்கும் அளவுக்கு வசதிகள் வந்துவிடும் என்கிறார். 2022ஆம் ஆண்டில் தொடங்கி 2028-க்குள் இதை முடிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், 2030-35இல் வாழும் மக்களின் பயணத் தேவை நிறைவு செய்ய முடியாது என்கிறார்.

இவ்வளவு தொலைநோக்காகச் சிந்திக்கும் உங்களிடம், அப்போது வாழ்கின்ற மக்கள் குடிநீர்த் தேவை, உணவுத் தேவையை நிறைவேற்ற ஏதாவது தொலைநோக்கு திட்டங்கள் இருக்கின்றனவா? ஒவ்வொரு முறையும் சென்னை வெள்ளச் சேதத்தை எதிர்கொள்கிறது.

விளைநிலங்களின் வளங்களே நாட்டில் மிகக் குறைவாக இருக்கும்போது, சாலை அமைப்பது, விமான நிலையம் கட்டுவது என்று பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களைப் பறிக்கிறீர்கள்," என்று சீமான் கூறியுள்ளார்.

நாகாலாந்து மாநிலத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2வது ரயில் நிலையம்

ஷோகுவியில் புதிய வசதி தொடங்கப்பட்டதன் மூலம் 100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு நாகாலாந்தின் இரண்டாவது ரயில் நிலையத்திற்கான கனவு நிறைவேறியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
Train

"திமாபூர் ரயில் நிலையம் அந்த மாநிலத்தின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியின் மையத்தில், 1903ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

ஷோகுவி ரயில் நிலையத்திலிருந்து டோனி போலோ எக்ஸ்பிரஸை முதல்வர் நெய்பியு ரியோ கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

டோனி போலோ எக்ஸ்பிரஸ் தினமும் அசாமின் கவுஹாத்தி, அருணாச்சல பிரதேசத்தின் நஹர்லாகுன் இடையே இயக்கப்பட்டது. தற்போது திமாபூரிலிருந்து சில கிமீ தொலைவிலுள்ள ஷோகுவி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஷோகுவி ரயில் நிலையம் வரை டோனி போலோ எக்ஸ்பிரஸ் நீட்டிக்கப்பட்டதன் மூலம் நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் இரண்டும் நேரடியாக ரயில் சேவை மூலம் இணைக்கப்படுகிறது.

"இன்று நாகாலாந்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். 100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு 2வது ரயில் முனைய பயணிகள் சேவையை தன்சாரி ஷோகுவி ரயில் பாதையில் பெற்றுள்ளது," என்று முதல்வர் நெய்பியு ரியோ ட்வீட் செய்துள்ளார்.

திமாப்பூர் ரயில் நிலையம் மேலும் விரிவடைந்து நாகாலாந்து மக்களுக்கு மட்டுமின்றி, மணிப்பூர் மற்றும் அஸ்ஸாமின் அண்டை மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்யும் வகையில், திமாபூர் ரயில் நிலையம் வளர்ச்சியில் உரிய பங்கைப் பெறுவதை உறுதி செய்யுமாறு ரயில்வே அதிகாரிகளை முதல்வர் கேட்டுக் கொண்டார்," என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.