செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2020 (15:17 IST)

செவ்வாய் கிரகத்தின் நிலவு: படம் பிடித்து அனுப்பி மங்கள்யான் - இஸ்ரோ தகவல்

இஸ்ரேவின் மங்கள்யான் விண்கலன், செவ்வாய்கிரகத்தின் நிலவான போபோஸ்-ஐ (Phobos) படம் பிடித்து அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராய மங்கள்யான் விண்கலனை 2013-ம் ஆண்டு இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்தியது. பின்னர் 2014-ம் ஆண்டு செவ்வாயின் சுற்று வட்டப் பாதையில் மங்கள்யான் விண்கலன் நுழைந்தது. அப்போது முதல் செவ்வாய்க்கிரகம் குறித்த ஆராய்ச்சியில் மங்கள்யான் விண்கலன் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தின் மிக நெருக்கமான மற்றும் மிகப் பெரிய நிலவான போபோஸின் படத்தை, மங்கள்யான் விண்கலனில் உள்ள மார்ஸ் கலர் கேமரா படம் பிடித்துள்ளது.

கடந்த ஜூலை 1-ம் தேதி செவ்வாய்க்கு 7,200 கிலோ மீட்டர் தொலைவில் மற்றும் போபோஸில் இருந்து 4,200 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும் மல்கள்யான் இந்த படங்களை எடுத்துள்ளது.

போபோஸ் நிலவு அதிகம் அறியப்படாத மர்மமான நிலவு என இஸ்ரோ கூறுகிறது.

ஏற்கனவே நிகழ்ந்த மோதல்களால் சேதமடைந்து ஸ்டிக்னி என்ற பெரிய பள்ளமும் மற்ற பெரிய பள்ளங்களும் இருப்பதை படங்களின் மூலம் காணமுடிகிறது என்று இஸ்ரோ கூறியுள்ளது.
 
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமே செவ்வாய் கோளுக்கு விண்கலனை வெற்றிகரமாக அனுப்பியிருந்த நிலையில், 2014-ல் நான்காவது நாடாக இந்தியாவும் இணைந்தது. முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது.

அமெரிக்காவும், ரஷ்யாவும் 1960களிலேயே செவ்வாய்க்கு செயற்கைக் கோள் அனுப்பியுள்ளன. விண்வெளியில் வேகமாக முன்னேறும் சீனா 2011இல் செவ்வாயை ஆராய செயற்கைக்கோள் அனுப்ப மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.