புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2019 (18:41 IST)

நரேந்திர மோதியின் ஐ.நா உரை: 'இந்தியாவின் வளர்ச்சி பிற நாடுகளுக்கும் பலனளிக்கும்'

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல.)

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோதி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74வது கூட்டத்தில் நேற்று உரையாற்றினார்.

2014க்கு பிறகு அவர் முதன் முதலில் ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றினார். மேலும் அவர் இரண்டாவது முறையாகப் பதயேற்றபின் நிகழ்த்தும் முதல் உரை இதுவாகும்.

தனது ஐ.நா உரையில், தனது அரசாங்கத்தை மக்கள் முந்தைய ஆட்சிக் காலத்தை காட்டிலும் அதிக பெரும்பான்மையுடன் தேந்தெடுத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார் மோதி.

"உலகின் மிகப்பெரிய குடியரசில், நடைபெற்ற மிகப்பெரிய தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றோம்," என்று மோதி குறிப்பிட்டார்.
வளர்ச்சித்திட்டங்கள் குறித்து பேசிய மோதி இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு திட்டத்தை சர்வதேச கண்ணோட்டத்தில் எடுத்துரைத்தார்.

ஐந்து வருடங்களில் 500 மில்லியன் கழிவறைகள் கட்டப்பட்டன. 500 மில்லியன் மக்களுக்கு ஆண்டுதோறும் இலவச சிகிச்சைக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கும் உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீடு, ஐந்தே வருடங்களில் 370 மில்லியன் மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்குதல், நிச்சயமாக பிற நாடுகளுக்கு உத்வேகமளிக்கும் உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மோதி பேசினார்.

பிரதமர் மோதி அடுத்து வரக்கூடிய வருடங்களுக்கும் சில முக்கிய திட்டங்கள் குறித்து அறிவித்தார். 125,000 கிமீ நீளத்திற்கு சாலைகள் அமைப்பது, மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை தவிர்ப்பது, 2025ஆம் ஆண்டுக்குள் புகையிலையை ஒழிப்பது, ஏழைகளுக்கு 20 மில்லியன் வீடுகள் கட்டித் தருவது, 150 மில்லியன் வீடுகளுக்கு குடிநீர் கிடைக்கச் செய்வது, போன்ற திட்டங்கள் உள்ளதாக அவர் கூறினார். இந்தியா வளர்ச்சி பாதையில் செல்வது பிற வளரும் நாடுகளுக்கும் பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியா வளர்ச்சியடைவதால் ஏற்படும் நேர்மறை தாக்கம் அதன் எல்லைகளுக்கு உட்பட்டது மட்டுமல்ல. இந்தியாவின் சர்வதேச ஈடுபாடு, பிற நாடுகளுடன் கடைப்பிடிகக்கூடிய சகோதரத்துவம் மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மையின் வெளிப்பாடாகும். இது ஐ.நா கொள்கையுடன் முற்றிலும் ஒத்துப்போகிறது.

பிரதமர் பருவநிலை மாற்றம் குறித்தும் உரையாற்றினார். புதுப்பித்தக்க ஆற்றலின் இலக்கை இந்தியா 450கிகா வாட் அதிகரித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச சூரிய சக்தி கூட்டணிக்கும் மற்றும் பேரழிவை தடுக்கும் உள்கட்டமைப்புக்கான அழைப்பையும் இந்தியா விடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அமைதி மற்றும் அகிம்சையில் நம்பிக்கை கொண்ட இந்தியா ஐ.நாவின் அமைதியை நிலைநாட்டும் முயற்சிக்கு பெரிதும் ஒத்துழைக்கிறது என்றார்.
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு சர்வதேச சவாலாக உள்ளது. எனவேதான் இந்தியா அதற்கு குரல் கொடுத்து வருகிறது. அதற்கு எதிராக உலக நாடுகள் ஒன்று கூட வேண்டும்.

இந்த உலகம் தொடர்ந்து அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் பாதையில் செல்ல வேண்டும் என்று மோதி வலியுறுத்தினார். இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து பேசிய அவர், விவேகானந்தர் நல்லிணக்கம் மற்றும அமைதி பற்றிக் கூறியதையும் குறிப்பிட்டார்.

ஐ.நா பொதுச் சபையின் 74வது கூட்டத்தின் கருவான, வறுமையை ஒழிப்பதற்கும், தரமான கல்வியை பெறுவதற்கும், பருவநிலை குறித்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு பலதரப்பட்ட முயற்சிகளை திரட்டுவது ஆகியவற்றிற்கு ஒத்ததாக இருந்த்து. இந்தியாவின் வளர்ச்சிக்கான முயற்சிகள் அனைத்தும் சர்வதேச நாடுகளின் கூட்டு முயற்சி போன்று பிரதிபலித்தார்.

இது பிற வளரும் நாடுகளுக்கு ஓர் உத்வேகம் அளிக்கக்கூடியதாகவும், மனிதநேய அடிப்படையில் இந்தியாவின் சர்வதேச ஈடுபாடு மற்றும் சர்வதேச நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையான வளர்ச்சியை அடைவதற்கான இந்தியாவின் முயற்சியை காட்டுவதாகவும் இருந்தது.