மேட்டுப்பாளையம் விபத்து: 17 பேரையும் கொன்றது தீண்டாமை சுவர்தான் - ஊர் மக்கள் குற்றச்சாட்டு

bbc
Last Modified செவ்வாய், 3 டிசம்பர் 2019 (19:46 IST)
மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் கனமழையால் கருங்கல் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணமான 25 அடி உயர் சுவர் தீண்டாமையின் குறியீடு என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

''பல ஆண்டுகளாக சமமான நிலப்பரப்பில்தான் இங்கே வீடுகளும், காடுகளும் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு முன்னர் அம்பேத்கர் காலனிக்கு அருகே தனியார் வீடுகள் கட்டப்பட்டன. பல மடங்கு மண்னை கொண்டுவந்து கொட்டி, நாங்கள் வாழும் நிலப்பரப்பை விட மேடான பகுதியை உருவாக்கி, விபத்துக்குள்ளான வீட்டின் மிக அருகே, சொகுசு குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டது. அப்போது கட்டப்பட்டது தான் இந்த கருங்கல் சுவரும்.’’ என உள்ளூர் மக்கள் இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

சுவர் இடிந்து வீடுகள் சேதமடைந்திருந்தை முதலில் பார்த்தவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமசாமி. இவர் இந்த பகுதியில் பசும்பால் வியாபாரம் செய்து வருகிறார்.

''திங்கள்கிழமை அதிகாலை இடியுடன் தொடர்கனமழை பெய்தது. சுமார் 5 மணி அளவில் நான் வழக்கம்போல் வெளியே வந்து பார்த்தபோது, மாட்டுக்கொட்டையில் செந்நிறத்தில் நீர் ஓடியது. அதிர்ச்சி அடைந்து மாட்டுக்கொட்டைகைக்கு பின்னால் இருக்கும் வீடுகளை பார்த்தேன். வரிசையாக இருந்த நான்கு வீடுகளும் நொருங்கிய நிலையில் இருந்தது. அதிர்ச்சி அடைந்து மற்றவர்களையும் அழைத்து, காவல்துறைக்கு தெரிவித்தோம். வீட்டில் இருந்த 17 பேரும் உடல் நசுங்கி இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இறந்தவர்கள் அனைவரும் தினக்கூலிகள், தாழ்த்தப்பட்ட மக்கள், மரணத்திற்கு காரணம் சுவரைக் கட்டி இருந்த ஜவுளிக்கடை உரிமையாளர்தான்' என குற்றம்சாட்டுகிறார் இவர்.

திங்கள்கிழமை காலை விபத்து நடந்த பகுதிக்கு வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசா சுவர் கட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அரசு மருத்துவமனையில், இறந்தவர்களின் உறவினர்களும், ஊர்மக்களும், தமிழ் புலிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும், பிரேதங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு தெருவித்ததோடு, அரசு நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். போராட்டதை கலைப்பதற்காக காவலர்கள் தடியடி நடத்தி, தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி நாகை திருவள்ளுவன் உட்பட 26 பேரை கைது செய்தனர். பின்னர், உடல்கள் அனைத்தும் உறவினர்களின் கையப்பம் பெறப்பட்டு எரியூட்டப்பட்டது.

bbc

இந்த விபத்தும் உயிரிழப்பும் சாதிய அடக்குமுறையால் நடைபெற்றதாக ஆதிதிராவிடர் காலனி குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

''இப்பகுதியில் வசிக்கும் அனைவரும் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கட்டிட வேலை, தோட்ட வேலை, கைவண்டி உணவகம் போன்ற எளிய தொழில் செய்யும் தினக்கூலிகள். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசு ஒதுக்கித்ததந்த நிலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களது பகுதிக்கு அருகே இருக்கும் மற்ற சமூகத்தினர், நாங்கள் அவர்களுக்கு மத்தியில் இருப்பதை வெறுக்கின்றனர்''

''பல வருடங்களாக சமமான நிலப்பரப்பில் தான் இங்கே வீடுகளும் காடுகளும் இருந்தன. 20 வருடங்களுக்கு முன்னர் அம்பேத்கர் காலனிக்கு அருகே தனியார் வீடுகள் கட்டப்பட்டன. பல மடங்கு மண்ணை கொண்டுவந்து கொட்டி, நாங்கள் வாழும் நிலப்பரப்பைவிட மேடான பகுதியை உருவாக்கி, விபத்துக்குள்ளான வீட்டின் மிக அருகே, சொகுசு குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டது. அப்போது கட்டப்பட்டது தான் இந்த கருங்கல் சுவரும். அன்று வெறும் 6 அடியில் தான் இந்த சுவர் இருந்தது''

8 அடியாக இருந்த சுவரை, 25 அடிக்கு அஸ்திவாரம் எதுவும் இல்லாமல், கடினமான கருங்கற்களைக் கொண்டு கட்டியதற்கு காரணம், அவரின் வீட்டிலிருந்து பார்த்தால் எங்களின் குடிசையும், இந்த மக்களும் தெரிந்துவிடுவதால் தான். இந்த சுவரை இடிக்கக்கோரி அவரின் வீட்டில் வாசலில் பல நாட்கள் நின்றோம். எங்களைப் பொறுத்தவரை இது தீண்டாமைச் சுவர்தான், அவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மீதமிருக்கும் சுவரையும் இடிக்க வேண்டும்'' என்கிறார் இங்கு வசிக்கும் தாசப்பன்.

bbc

இச்சம்பவம் குறித்து, விபத்து ஏற்படுத்திய சுவர் எழுப்பப்பட்டிருக்கும் வீட்டின் உரிமையாளரையும், வீட்டில் இருந்தவர்களையும் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்கள் வெளியே வந்து பதிலளிக்கவில்லை.

இதனிடையே கோவையை சேர்ந்த எழுத்தாளர் முருகவேள் ஒரு முக்கிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

'20 அடி உயரத்தில் சுவர் கட்ட வேண்டும் என்றால், 4 அடி அகலத்தில் அடித்தளம் அமைக்க வேண்டும். ஆனால், இடிந்த சுவரின் அடித்தள அகலம் வெறும் 1 அல்லது 2 அடி தான் இருக்கும். முறையான கட்டுமான விதிகளும் பின்பற்றப்படவில்லை, நகராட்சி அனுமதியும் பெறப்படவில்லை. இதோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் வழிப்பாதையாக இருந்த இடத்தை அடைத்து சுவர் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனடிப்படையில், வீட்டின் உரிமையாளர் மீது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிறார் எழுத்தாளர் முருகவேள்.இதில் மேலும் படிக்கவும் :