செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (19:51 IST)

சாணக்கியா: அமித்ஷா அரசியல் வியூகம் வெற்றி பெறாதது ஏன்?

கடந்த ஒரு வாரமாக இந்திய அரசியலில் மிகவும் விவாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநில அரசியல் சர்ச்சைகள், முதல்வர் தேவேந்திர பட்னா விஸின் ராஜிநாமா மற்றும் சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் விடுத்த அழைப்பு ஆகியவற்றால் தற்போதைக்கு முடிவுக்கு வந்ததாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

கடந்த வார இறுதியில் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சனிக்கிழமையன்று யாருமே எதிர்பாராவிதமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த முற்றிலும் எதிர்பாராத அரசியல் திருப்பத்தை அமித்ஷா மற்றும் பாஜகவின் அரசியல் சாதூர்யத்துக்கு கிடைத்த வெற்றி என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டன.

கிரிக்கெட்டில் கடைசி ஓவர்களில் தோனி வெல்வது போல அரசியலில் கடைசி சில மணி நேரங்களில் வெல்லும் வல்லமை மிக்கவர் அமித்ஷா என்று சமூகவலைத்தளங்களில் பலர் பதிவிட்டனர்.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பதவி விலகுவதாகத் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்திருக்கும் நிலையில் ட்விட்டரில் அமித்ஷாவை நையாண்டி செய்யும் ட்வீட்டுகள் பகிரப்பட்டன.

மகாராஷ்டிராவில் பாஜகவின் முயற்சிகள் வெற்றி பெறாததற்கு என்ன காரணம்?

அஜித் பவாரை மட்டும் நம்பியது

பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்கள் அஜித் பவார் மூலம் கிடைக்கும் என்று பாஜக அளவுக்கு அதிகமாகவே நம்பியது என்று கூறலாம்.

அஜித் பவார் வசம் எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்று ஆரம்பம் முதலே தெளிவாகத் தெரியாத நிலையில், மாற்றுத்திட்டம் எதையும் பாஜக வகுக்காதது அக்கட்சிக்கு பாதகமாக அமைந்தது.

பவார் குடும்ப ஒற்றுமை

அஜித் பவாரை துணை முதல்வராக நியமித்தது மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து விடலாம் என்று நினைத்த பாஜக அஜித் பவார் கட்சியின் தலைவர் சரத் பவாரின் நெருங்கிய உறவினர் என்பதையும், அவர்களின் குடும்ப பிணைப்பு குறித்தும் குறைத்து எடைபோட்டது.

இறுதிக் கட்டத்தில் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சி முகாமுக்கு அஜித் பவார் வந்தது இந்த பிணைப்பால்தான் என்பது உறுதியாகியுள்ளது.

சரத் பவாரின் அரசியல் ஆளுமை

தற்போது மகாராஷ்டிரா மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் சரத் பவார்.

தன் கட்சி பிளவுபடுவதை எளிதில் அவர் விட்டுவிடுவார் என யாரும் அவரை மதிப்பிட முடியாது.

சரத் பவாரின் அரசியல் ஆளுமை, மாநில, தேசிய அரசியலில் அவருக்குள்ள நட்பு மற்றும் செல்வாக்கு போன்ற அம்சங்களை பாஜக குறைத்து மதிப்பிட்டு விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொறுமை மிகவும் அவசியம்

சனிக்கிழமை மிகவும் அதிகாலையிலேயே தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகப் பதவியேற்றது பாஜகவுக்கு ஒருவகையில் பாதகமாக அமைந்துவிட்டது.

இதுதான் அனைத்து எதிர்க்கட்சிகளையும் உடனடியாக ஓரணியில் சேர வைத்தது எனலாம். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றது. பாஜகவின் நிலைப்பாடு மற்றும் மகாராஷ்டிராவில் நடக்கும் நிகழ்வுகளை நாடே விவாதிக்கும்படி ஆனது.

எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன

தேசிய அளவில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியாததற்குக் காரணம் எதிர்க்கட்சிகள் ஓரணியில் இல்லாதது என விவாதிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன.

பாஜகவின் ஆக்ரோஷ அரசியல் நிலைப்பாடு மற்றும் மாநிலக் கட்சிகளை அக்கட்சி வளைக்கப் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு ஆகியவை எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரள வைத்தது எனலாம்.

பாஜக மற்றும் அமித் ஷாவின் வியூகம் தோற்றுவிட்டது என்ற விவாதங்கள் நடந்துவரும் நிலையில் இது குறித்து மூத்த பத்திரிகையாளரான இளங்கோவன் பிபிசியிடம் பேசினார்.

''அமித் ஷா அரசியல் சாணக்கியர் என்று கூறப்படுவது சில ஊடகங்களின் மிகைப்படுத்தல் தானே வேறில்லை. மேலும் அரசியல் சாணக்கியத்தனம் என்ற வார்த்தை பல சந்தர்ப்பங்களில் தவறுகளை மூடி மறைக்கப் பயன்படுத்துகிறது எனலாம்'' என்று கூறினார்.

''அரசியல் சட்ட சாசன விதிகளுக்கு உட்பட்டு, அதிகார வரம்புகளை மீறாமல் வகுக்கப்படும் வியூகங்களை மட்டுமே சிறந்த வியூகமாக கருதப்படும்'' என்று அவர் மேலும் கூறினார்.

''சரத் பவாரின் அரசியல் அனுபவத்தைக் குறைத்து எடைபோட்டது மற்றும் அஜித் பவாரை அளவுக்கு அதிகமாக நம்பியது போன்ற பல தவறுகளை இந்த விஷயத்தில் பாஜக செய்தது''

''அதேவேளையில் உத்தவ் தாக்கரே தலைமையில் அமையவுள்ள சிவசேனை அரசு எவ்வளவு காலம் நிலைக்கும் என்பதும், பாஜகவின் அடுத்த கட்ட வியூகம் என்னவாக இருக்கும் என்பதையும் இந்த நேரத்தில் கணிப்பது சிரமமானது. தற்போதைய நிலையில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு உத்தவ் தாக்கரே வென்றுள்ளார்'' என்று இளங்கோவன் கூறினார்.

'உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது'

அமித் ஷா மற்றும் பாஜகவின் அரசியல் வியூகங்கள் மகாராஷ்டிராவில் தோற்றுவிட்டதாகக் கூறப்படுவது குறித்து பத்திரிகையாளரும்,, 'தி கஸின்ஸ் தாக்கரே' புத்தகத்தின் ஆசிரியருமான தவல் குல்கர்னி பிபிசி தமிழிடம் உரையாடினார்.

''தேர்தல் முடிவுகள் வெளிவந்து நீண்ட காலமாக மகாராஷ்டிர மாநில அரசியல் குழப்பங்கள் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக தோற்றம் உள்ளது. ஆனால் இனி வரும் நாட்கள் மகாராஷ்டிர மாநில அரசியலில் மேலும் முக்கியத்துவம் பெறலாம்'' என்று கூறினார்.

''ஆட்சி அமைப்பதற்கு போதுமான எம்எல்ஏக்கள் தங்களிடம் இல்லை என்றும் குதிரை பேரத்தில் தாங்கள் ஈடுபட விரும்பவில்லை என்று தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகியுள்ளார். இந்த சூழலில் இதுவே சிறந்த முடிவு என்று அவர்கள் எண்ணியிருக்கலாம்''

''பாஜகவின் வியூகங்கள் தோற்றுவிட்டதா என்று உடனடியாக கூறுவது கடினம். வரும் நாட்களில் அந்த கட்சி எடுக்கும் நடவடிக்கைகள் பொறுத்தே தற்போதைய வியூகங்கள் குறித்து எடைபோட முடியும். இப்போதைக்குப் பொறுத்திருந்து பணியாற்றலாம் என்பது பாஜகவின் நிலைப்பாடாக இருக்கலாம்'' என்று அவர் மேலும் கூறினார்.

'' உத்தவ் தாக்கரே தலைமையில் அமையவுள்ள சிவசேனை கூட்டணி ஆட்சிக்கு நிச்சயம் பெரும் சாவல் காத்திருக்கிறது. சரத் பவார் மிகவும் அனுபவம் வாய்ந்த தேர்ந்த அரசியல்வாதி''

''அவரை சமாளித்து முற்றிலும் மாறுபட்ட கொள்கைகள் கொண்ட காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்துவது உத்தவ் தாக்கரேக்கு பெரும் சவாலாக இருக்கும். நிலைமை அடுத்த கட்டத்துக்கு சென்றபின்னரே மீண்டும் பாஜக நடவடிக்கையில் இறங்கும் என்று தோன்றுகிறது'' என்று தவல் குல்கர்னி குறிப்பிட்டார்.