வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (00:45 IST)

மனோ கணேசன் எம்.பியின் செயல்பாடு: பதிவு செய்யும் இலங்கை போலீஸ் - என்ன நடந்தது?

இலங்கை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடை பயணப் போராட்டத்தில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களிடம் பேசிய தன்னை, இலங்கை போலீஸார் தமது தொலைபேசியில் பதிவு செய்து கொண்டதாக, நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் தனது 'ட்விட்டர்' பக்கத்தில் இரண்டு 'வீடியோ'களை பதிவேற்றியுள்ள மனோ கணேசன்; 'முறிகண்டியில் என்னை வழிமறித்த ஊடக நண்பர்களிடம் பேசிய போது, இலங்கை பொலிஸ் தம்பி, என் உரையை மிகுந்த கடமை உணர்வுடன் பதிவு செய்கிறாராம்' என, தமிழில் குறிப்பு ஒன்றினையும் எழுதியுள்ளார்.
 
சிறுபான்மை சமூகத்தினரின் உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 3ஆம் தேதி, கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பிரதேசத்திலிருந்து ஆரம்பித்த நடை பயணப் போராட்டம், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 7) பொலிகண்டியில் நிறைவடைந்தது.
 
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகின்றமை, முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றமை உட்பட, அரச அடக்குமுறைகளை முன்னிறுத்தி, அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் மேற்படி நடை பயணப் போராட்டத்தை சிவில் சமூகத்தினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
 
இதில் தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகம் சார்ந்த அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
 
அந்த வகையில், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான இறுதிநாள் நடை பயணத்தில் பங்கேற்ற மனோ கணேசன், ஊடகவியலாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போதே, அவரை போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
 
அந்த வீடியோவில் சிங்களத்தில் பேசியுள்ள மனோ கணேசன்; "இது சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் வாழுகின்ற நாடு. சிங்களம் மற்றும் தமிழ் மொழி பேசுகின்ற - பெளத்தம், இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதங்களைப் பின்பற்றுகின்றவர்களைக் கொண்ட இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்பவே நாம் முயற்சிக்கிறோம். இதுதான் எமது எதிர்பார்ப்பு. ஆனால் துரதிஷ்டவசமாக ஜனாதிபதியினுடைய அரசாங்கம் - சிங்கள, பெளத்த நாட்டைக் கட்டியெழுப்பவே முயற்சிக்கின்றனர். அது தவறாகும். அது ஜனாதிபதிக்குத் தெரியவில்லை.
 
இந்த நாட்டின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு, வடக்கு கிழக்கில் பெளத்த வணக்கஸ்தலங்கள் இருந்துள்ளது. ஆம் இருந்துள்ளதுதான் ஆனால் அது தமிழ் பெளத்த வணக்கஸ்தலங்களாகும்.
 
இந்த நாட்டில் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் தமிழ் மக்கள் பெளத்தர்களாக இருந்துள்ளனர். வட இந்தியாவிலும் இருந்தனர். அதனால் பெளத்தம் என்பதை சிங்களம் என்று அடையாளப்படுத்த வேண்டாம்.
 
தமிழ் மக்களை ஒன்றுபடுத்துவதற்கு பெளத்தத்தினை பயன்படுத்துமாறு ஜனாதிபதியை மக்களின் சார்பில் கேட்டுகொள்கின்றேன். ஜனாதிபதிக்கு விளங்காவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது. ஜனாதிபதியோடுள்ள தமிழ் அரசியல்வாதிகளான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், வியாழேந்திரன், பிள்ளையான் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அமைச்சர் அலிசப்ரி ஆகியோர் சொல்லிக்கொடுக்கவேண்டும். தெரியாவிட்டால் சொல்லித்தானே கொடுக்க வேண்டும்" என்று . தெரிவித்துள்ளதோடு, தன்னை வீடியோ எடுத்த போலீஸ் உத்தியோகத்தரைப் பார்த்து; "இல்லாவிட்டால் ஜனாதிபதியிடம் போய் தெரிந்துகொள்ளுமாறு சொல்லுங்கள்" எனவும் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படையினர் திடீரென நேற்றிரவு மீளப்பெறப்பட்டுள்ளனர். தனக்கு அறிவிக்கப்படாமலேயே இவ்வாறு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.
 
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடை பவனியி போராட்டத்தில் தான் பங்கேற்றமையினாலேயே, தனக்கான அதிரடிப்படையினரின் பாதுகாப்பு நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
"நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சாதாரணமாக போலீஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் நிலையில், உங்களுக்கு ஏன் அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது என, சுமந்திரனிடம் பிபிசி தமிழ் கேட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்;
 
"2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும், 2017ஆம் ஆண்டு ஜனவரியிலும் என்னைக் கொல்வதற்கான மூன்று எத்தனிப்புகள் நடைபெற்றன. அது தொடர்பில் மேல்நீதிமன்றில் சிலருக்கு எதிராக வழக்கு ஒன்றும் நடைபெற்று வருகிறது. இதனால்தான் எனக்கு அப்போது அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
 
அதன் பின்னரும் என்னை கொலை செய்வதற்கான ஆயத்தங்களைச் செய்தனர் எனும் குற்றச்சாட்டில் வெவ்வேறு தருணங்களில் 30 பேர் வரை கைது செய்யப்பட்டனர். அதற்கான ஆதாரங்களை நீதிமன்றில் பொலிஸாரே சமர்ப்பித்துள்ளனர். இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களில் தெற்கிலுள்ள பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 15 பேரும் அடங்குகின்றனர்.
 
இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு 52 நாள் அரசாங்கம் மாறிய போது, எனக்கான அதிரடிப்படைப் பாதுகாப்பு நீக்கப்பட்டது. ஆயினும் நாடாளுமன்றம் தலையிட்டு எனக்கு மீண்டும் அதிரடிப்படையினரின் பாதுகாப்பை பெற்றுத் தந்தது" என்றார்.