திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 25 செப்டம்பர் 2019 (14:17 IST)

மஹாராஷ்டிராவில் மீண்டும் மலருமா தாமரை? : சூடுபிடிக்கும் அரசியல் களம்

இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கான இடைதேர்தலை நடத்தும் அதே நாளில் மஹாராஷ்டிராவின் சட்டசபை தேர்தலும் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

கடந்த 2014 சட்டசபை தேர்தலில் பாஜக மஹாராஷ்டிராவில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு 288 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 63 சீட்டுகளை கைவசம் வைத்திருந்த சிவ சேனா கட்சி கை கொடுக்க முதன்முறையாக மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது பாஜக நாடு முழுவதும் செல்வாக்கு பெற்றுள்ளதால் மஹாராஷ்டிர தேர்தலில் முக்கால்வாசி இடங்களை கைப்பற்றிவிடலாம் என கட்சி தலைமை நம்புகிறது. இருந்தாலும் மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற கட்சியான சிவ சேனாவின் கூட்டணியை பாஜக எதிர்ப்பார்க்கிறது. ஆனால் சிவ சேனாவோ பாதிக்கு பாதி இடத்தை கேட்டு வருகிறது. பாஜக இந்த முறை தனிப்பெரும்பான்மை பெருவதில் குறியாக இருப்பதால், பாதி சீட்டுகளை கொடுப்பது அதற்கு பாதகமாக அமையும். அதுமட்டுமல்லாமல் பாதிக்கு பாதி கூட்டணியில் ஆட்சி அமைந்தால் சிவ சேனா கூட்டணி இல்லாமல் எந்த காரியத்தையும் நிறைவேற்றவும் முடியாது என்பதால் பாஜக கூட்டணி இழுபறியில் உள்ளது.

இதற்கிடையே மாநில கட்சிகளான மஜ்லிஸ் இ இட்டஹட் முஸ்லிமீன் கட்சியும், வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியும் தங்களுக்குள் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இவர்கள் கூட்டணி மக்களவையில் அவுரங்கபாத்தில் வெற்றி பெற்றன. சிவசேனா கட்சி 20 வருடங்களுக்கும் மேலாக தொடர் வெற்றி பெற்று வந்த தொகுதி அது. ஆனால் தற்போது கூட்டணி பங்கீட்டில் அவர்களுக்குள் பிரச்சினை எழுந்துள்ளதால் இது தேசிய கட்சிகளுக்கு சாதகமாக அமையும்.

இந்நிலையில் சிவ சேனா காங்கிரஸுடன் இணைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவசேனா சட்ட ஆலோசகர் அம்பாதாஸ் தன்வே “அரசியலை பொறுத்தவரை எது வேண்டுமானாலும் நடக்கலாம்.” என்று கூறியுள்ளார். அதுபோல பாஜக-சிவசேனா கூட்டணி முறிவதற்கும் நிறைய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பால் தாக்கரேவின் பேரனும், சிவ சேனாவின் தற்போதைய தலைவருமான ஆதித்யா தாக்கரே மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின் ராகுல் காந்தியின் உழைப்பை பாராட்டி பேசியிருந்தார். இதனால் காங்கிரஸ் – சிவசேனா என்ற புதிய கூட்டணி மஹாராஷ்டிராவில் உருவாகுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தேசம் முழுவதும் பலத்த அடி வாங்கியிருப்பதால் இந்த தேர்தல் தன்னை மறுகட்டமைப்பு செய்து கொள்ள சரியான சந்தர்ப்பம் என்று காங்கிரஸ் நம்புகிறது.

கூட்டணிகளுக்கு அப்பாற்பட்டு பாஜக தான் விரும்பிய தனி பெரும்பான்மை பெருமா? மீண்டும் மஹாராஷ்டிராவில் தாமரை மலருமா என்பதை தேர்தல் களம்தான் சொல்ல வேண்டும்.