வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (16:00 IST)

ஜல்லிக்கட்டு ஆறுதல் பரிசை வாங்க மறுத்த மதுரை மாணவி: இந்த ஆண்டு என்ன செய்கிறார் தெரியுமா?

BBC
கடந்த 7 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளையைப் பங்கேற்க வைக்கும் மாணவி யோகதர்ஷினிக்கு, நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. காரணம் என்ன?
 

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி முத்து என்பவரின் மகள் யோகதர்ஷினி (வயது 17). இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். யோகதர்ஷினியின் குடும்பத்தில் அவர்களது முன்னோர்களைத் தொடர்ந்து வழி வழியாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை வளர்த்து வந்தனர். இவரது தந்தை மற்றும் அண்ணன் இருவரைத் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக யோகதர்ஷினி ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளையை களமிறக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 'வடமுகத்து கருப்பு' என்று பெயரிடப்பட்ட யோகதர்ஷினியின் காளை பங்கேற்றது. காளை வாடிவாசலிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்டதும், அந்தக் காளையை இருவர் சேர்ந்து பிடித்தனர். இருவர் சேர்ந்து ஒரு காளையைப் பிடிப்பது விதிமுறையை மீறியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் காளையைப் பிடிமாடு என்று அறிவித்த ஒருங்கிணைப்புக் குழு, அந்த பரிசு விழா குழுவுக்கு சேரும் என்று அறிவித்தது. மேலும் காளையைக் கட்டவிழ்த்த யோகதர்ஷினிக்கு ஆறுதல் பரிசு அளிப்பதாக விழாக் குழு தெரிவித்தது.

ஆனால், ஆறுதல் பரிசு வேண்டாம் என்று யோகதர்ஷினி நிராகரித்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளையைக் களமிறக்க இவர் ஆயத்தமாகி வருகிறார். மேலும் கடந்த ஆண்டு வெற்றிபெற முடியாமல் போனதால், நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளை வெற்றி பெறவேண்டும் என்ற ஊக்கத்துடன் தனது காளைக்குப் பயிற்சியளித்து வருகிறார் அவர்.

"கடந்த ஆண்டு எங்கள் மாடு பிடிபட்டதால் அதற்கு அறிவித்த ஆறுதல் பரிசை வேண்டாம் என்று மறுத்துவிட்டு, அடுத்த ஆண்டு வெற்றி பெற்று பரிசை வாங்கிக் கொள்வதாகக் கூறி வந்துவிட்டேன். இந்த ஆண்டும் அதே எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்,” என பிபிசி தமிழிடம் பேசிய யோகதர்ஷினி தெரிவித்தார்.

"மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று வாடிகளில் எந்த வாடியில் எங்கள் மாட்டைக் கட்டவிழ்க்கப் போகிறோம் என்று தெரியவில்லை. ஜல்லிக்கட்டு  அனுமதிக்கான அடையாள அட்டை தற்போது இணையத்தில் கொடுக்கப்படுவதால் எந்த ஊரில் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாகத் தெரியவில்லை.

மூன்று ஊர்களிலும் பதிந்து இருக்கிறோம். அதில் எந்த வாடி கிடைத்தாலும் எங்கள் காளையைக் கட்டவிழ்த்து விடுவோம்.  ஒவ்வோர் ஆண்டும் அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் காளையை அவிழ்த்து விடுவோம். கடந்த ஆண்டு இணைய அடையாள அட்டை முறை என்பதால் அவனியாபுரத்தில் கிடைத்தது. அதனால் அங்கு மட்டுமே காளையை அவிழ்த்தோம். இந்த ஆண்டு எந்த வாடி  கிடைத்தாலும் அவிழ்ப்போம்," என்றார் யோகதர்ஷினி.

"அவனியாபுரத்தில் வெல்ல வேண்டும்"

“கடந்த ஆண்டு அவனியாபுரத்தில் மட்டும்தான் மாடு பிடிபட்டது. அதைத் தொடர்ந்து கோயம்புத்தூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட  ஊர்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளை வென்றது. ஆனால் இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளைக் காட்டிலும் அவனியாபுரத்தில் காளையைக் கட்டவிழ்க்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அதற்கு ஒரு காரணம் உள்ளது,”  என்று யோகதர்ஷினி கூறினார்.

அந்தக் காரணம் என்ன என்று கேட்டபோது,

"தொலைத்த இடத்தில்தான் தேடனும், தோற்ற இடத்தில்தான் ஜெயிக்கனும் என்று என் அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அந்த ஒரு நோக்கத்திற்காகவே அவனியாபுரத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்றாகவேண்டும் என்று வெறியோடு காத்திருக்கிறோம். எந்த வாடி கிடைத்தாலும் எங்களுக்கு  சந்தோஷமான விஷயம்தான். ஆனால், அவனியாபுரம் கிடைத்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். இந்த முறை எங்கள் மாடு ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது," எனத் தெரிவித்தார் யோகதர்ஷினி.

மகளின் ஆசையை நிறைவேற்றும் தந்தை  

யோகதர்ஷினி ஜல்லிக்கட்டு மீது கொண்ட ஆர்வத்தினால், அவருக்கு காளையை வளர்க்க வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பதாக தந்தை முத்து பிபிசியிடம் தெரிவித்தார்.

"சின்ன வயதிலிருந்தே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டுகளில் களமிறக்குகிறேன். இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு எனது மகள் யோகதர்ஷினி காளையை களமிறக்க விரும்பினாள். அதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக அவளும் ஜல்லிக்கட்டு போட்டிக்குக் காளையை அவிழ்த்து வருகிறாள்.
BBC

கடந்த ஆண்டு மாடு பிடிபட்டதால் இந்த ஆண்டு ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன் காளையை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

என் மகளுக்கு தேவையானதை நாங்களும் செய்து வருகிறோம். இந்த ஆண்டு எங்கள் காளை ஜெயிக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்," என்கிறார் யோகதர்ஷினியின் தந்தை.

"ஜல்லிக்கட்டில் ஒன்றிவிட்டேன், இதை விடமுடியாது"

தொடர்ந்து பேசிய யோகதர்ஷினி, "6ஆம் வகுப்பிலிருந்தே ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளையை களமிறக்கி வருகிறேன். அப்போது என் அம்மா காளை அருகே செல்ல மாட்டார், ரொம்பவும் பயப்படுவார்.

நான் முதன் முதலில் ஜல்லிக்கட்டுக்குக் காளை கொண்டு செல்ல விருப்பம் தெரிவித்தபோது அம்மா என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் அப்பா என்னை ஜல்லிக்கட்டு போட்டியைக் காண்பிக்க மட்டுமே அழைத்துச் செல்வதாக அம்மாவிடம் அனுமதி பெற்று என்னை என்னை ஜல்லிக்கட்டுக்குக் கூட்டிச் சென்றார்," என்றார் அவர்.

அதன்பின் அங்கே சென்றதும் தன் அப்பா, அண்ணன் மற்றும் அண்ணனின் நண்பர்கள் சேர்ந்து தன்னை காளை அவிழ்க்க வைத்தனர் என்று கூறும் அவர், அதிலிருந்து ஜல்லிக்கட்டில் காளை அவிழ்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது என்றும் கூறுகிறார். அதையடுத்து பாரப்பட்டி, அவனியாபுரம், அலங்காநல்லூர் என தொடர்ந்து ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்க்க ஆரம்பித்ததாகவும் யோகதர்ஷினி கூறுகிறார்.

மேலும் அவர், "இப்போதும் என் அம்மா என்ன வஞ்சிகிட்டேதான் இருப்பாங்க. ஜல்லிக்கட்டுக்கு காளையை அவிழ்த்தது எல்லாம் போதும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் இப்போது நானே இதை விட நினைத்தாலும், என்னால் விடமுடியாது. அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டில் ரொம்பவும் ஒன்றிவிட்டேன். இனி இதை யாருக்காகவும் விடமாட்டேன்," என்று யோகதர்ஷினி கூறினார்.